RATING 2.8/5
ஒரு படத்தில் ஒரு கேரக்டர் பரபரப்பாக பேசப்பட்டு விட்டால் அதே மாதிரி கதைகளோடு சம்பந்தப்பட்ட நடிகர்களை இயக்குநர்கள் அணுகுவது வழக்கம் தான்.
‘தனி ஒருவன்’ படத்தில் ஜெயம்ரவியின் கேரக்டரை விட அரவிந்த்சாமி ஏற்று நடித்த சித்தார்த் அபிமன்யூ கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்று பரபரப்பாகப் பேசப்பட்டது.
எப்படி அந்தப் படத்தில் ஜெயம் ரவியின் நடிப்பை விட அரவிந்த் சாமியின் நடிப்பை ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடினார்களோ? அதே ஃபார்முலாவில் ரசிகர்கள் கொடுக்கிற கைதட்டல்கள் உள்ளிட்ட மொத்த க்ரிடிட்டும் மீண்டும் அரவிந்த்சாமிக்குப் போய்ச் சேர்ந்திருக்கும் படம் தான் இந்த ‘போகன்.’
படத்தில் ஹீரோ ஜெயம் ரவியாக இருந்தாலும் படம் முழுக்க ரசிகர்களை தன் பக்கம் ஈர்ப்பது அரவிந்த்சாமியின் ஆதித்யா கேரக்டர் தான்.
சரி கதை என்ன?
ஒரு உடம்புக்குள் இருந்து இன்னொரு உடம்புக்குள் கூடு விட்டு கூடு பாய்கிற கதைதான். அதிசய பிறவி, சின்ன வாத்தியார் என பார்த்து பார்த்து சலித்துப் போன கதையாக இருந்தாலும் ஆயகலைகள் 64ல் 52வது கலையான பரகாயப் பிரவேசம் என்கிற லைனைப் பிடித்து கதையில் கொன்சூண்டு சுவாரஷ்யம் கலந்து தந்திருக்கிறார்கள்.
எல்லாரும் வாழ்ந்த பிறகு சொர்க்கத்துக்குப் போக ஆசைப்படுவாங்க. ஆனா நான் வாழும் போதே சொர்க்கத்துல தான் இருக்கேன் என்கிற பணக்காரத்தனம் நிறைந்த கேரக்டர் வில்லன் அரவிந்த்சாமி.
தன்னிடம் இருக்கும் அபூர்வ சக்தி ஒன்றை பயன்படுத்தி நகைக்கடை, பேங்க் போன்ற இடங்களில் அங்கு வேலை செய்பவர்களை வைத்தே பணத்தை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்.
இவரின் இந்த பித்தலாட்ட விளையாட்டில் போலீஸ் அதிகாரியும் ஹீரோவுமான ஜெயம்ரவியின் அப்பா ஆடுகளம் நரேனும் மாட்டிக் கொள்கிறார். அவர் வேலை செய்யும் பேங்க்கிலும் கோடிக்கணக்கான பணத்தை ஆட்டையைப் போட்டு எஸ்கேப் ஆகி விடுகிறார் அரவிந்த்சாமி.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடையும் ஜெயம்ரவி தன் அப்பா மீது விழுந்த ‘களவாணி’ பழியிலிருந்து அவரை எப்படி காப்பாற்றினார்? என்பதையே, ஹன்ஷிகாவுடனான பிரத்யேக லவ் எபிசோட்வுடன் சுபம் போடுகிறார்கள்.
‘ரோமியோ ஜூலியட்’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கும் ஜெயம்ரவி – ஹன்ஷிகா ஜோடி பொருத்தம் அருமை தான். ஆனாலும் ஹன்ஷிகாவிடம் அந்தப் படத்தில் தென்பட்ட பொலிவு இதில் குறைந்திருக்கிறது.
ஜெயம் ரவி இடைவேளைக்கு முந்தைய பகுதியில் நடிப்பில் சமாளித்து விட்டாலும், இடைவேளைக்குப் பின் அரவிந்த் சாமியாக மாறி அந்தக் கேரக்டரை தாங்குவதில் கொஞ்சம் சிரமப்படுவது அப்பட்டமாக திரையில் தெரிகிறது. அதே சமயம் தனது கெத்தான நடிப்பில் ஜெயம்ரவியையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் அரவிந்த்சாமி.
ஹன்ஷிகாவுக்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை. சரக்கடிப்பது, தம்மடிப்பது, ஜெயம்ரவியுடன் காதல் காட்சிகளில் நெருக்கம் காட்டுவது என தாராளமாக கவர்ச்சியை கொட்டியிருக்கிறார்.
ஆடுகளம் நரேன், நாசர் ஆகியோரை இன்னும் கொஞ்சம் நடிக்க விட்டிருந்தாலும் தப்பில்லை.
இமானின் இசையில் டமாலு, டுமீலு, செந்துரா இரண்டுமே வெவ்வேறு வெரைட்டியாக ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் இன்னும் வித்தியாசம் காட்டியிருக்கலாம்.
ஜெயம் ரவி தான் அரவிந்த்சாமியின் டார்கெட் என்றால் நாகேந்திர பிரசாத்தை கொல்வதற்குப் பதிலாக ஜெயம்ரவியையே நேரடியாக கொலை செய்திருக்கலாம். என்ன செய்வது கதையை நகர்த்தியாக வேண்டுமே? ஒவ்வொருவராக கொலை செய்து விட்டு கிளைமாக்ஸில் தான் ஜெயம் ரவியை நெருங்குகிறார் அரவிந்த்சாமி.
இப்படி படம் முழுக்க ஆங்காங்கே தெரிகிற யானை சைஸ் ஓட்டைகளுக்கு நடுவே சில சுவாரஷ்யங்களைச் சேர்த்து தந்ததால் தப்பிக்கிறார் இயக்குநர் லக்ஷ்மன்.
போகன் – மாயாஜாலம்!