Rating : 3.4/5
”நல்லவனா இருக்க ஆசைப்பட்டா அவசரத்துக்குக் கூட அடுத்தவங்ககிட்ட தான் கையேந்துற நெலைமை வரும்” என்று சொல்கிற அளவுக்கு ஏட்டு வேலையிலேயே நேர்மையாக இருப்பவர் ஜெயப்பிரகாஷ்.
அப்படிப்பட்டவருக்கு தனது மகன் அதர்வாவை அதே காவல்துறையில் தன்னை விட மேலதிகாரியாக்கி அழகு பார்க்க ஆசை.
பிறந்தது முதலே உடம்பில் லேசாக கீறல் விழவும் நான் ஸ்டாப்பாக ரத்தம் வழியத் தொடங்கி மயக்கமாகி விடுவார். அதுவே கீறல் இன்னும் கொஞ்சம் ஆழமாக இருந்தால் ஆளே அவுட்!
இப்படி ஒரு அரிதிலும் அரிதான வியாதியில் மாட்டிக் கொண்ட அதர்வாவுக்கு ‘தடை ஓட்டம்’ விளையாட்டுப் போட்டியில் இந்திய நாட்டுக்காக ஓடி தங்கம் வென்று விடும் வெறி. அதில் ஜெயித்தால் அப்பாவின் ஆசைப்படி காவல்துறையிலேயே நல்ல பொசிஸனில் வேலை கன்பார்ம்.
ஜெயிக்கும் போட்டியில் விளையாட சென்னைக்கு அழைப்பு வர, அந்த கேப்பில் ராங்க்காக போனைப்போட்டு அதர்வாவை வண்டை வண்டையாக திட்டி முதலில் பயந்து, பிறகு காதலியாகிறார் நாயகி ஸ்ரீதிவ்யா.
போட்டியில் கலந்து கொள்ள சென்னைக்கு வரும் அதர்வாவுக்கு கள்ள நோட்டு கோஷ்யிடம் மோத வேண்டிய சூழல் வருகிறது. அதில் காதலி ஸ்ரீதிவ்யாவின் ஃபேமிலியும் சிக்கிக் கொள்ள, அந்தக் கும்பலிடமிருந்து தப்பித்து போட்டியில் ஜெயித்தாரா இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.
ஒரு நிஜ தடை ஓட்ட வீரருக்கான அத்தனை உடல் தகுதிகளையும் இப்படத்தில் காட்டியிருக்கிறார் அதர்வா. ஒரு கேரக்டருக்கான மெனக்கிடல் என்பது எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்பதையும் இப்படத்தில் அதர்வா போட்டிருக்கும் உடல் உழைப்பில் கண்கூடாகப் பார்க்கலாம். வில்லன் கோஷ்டி துரத்தும் போது முன்னோக்கி ஓடுவதும், பின் நின்று அவர்களை நிமிர்ந்த நெஞ்சோடு எதிர்கொள்ளும் இன்டர்வெல்லுக்கு முன்பான ஸ்டண்ட் சீன் பர…பர… அந்த இடத்தில் அதிரடி அளப்பறையை கொடுத்திருக்கிறார் ‘ஸ்டண்ட் மாஸ்டர்’ ராஜசேகர்.
முதல் காட்சியிலேயே ஹீரோ எப்படிப்பட்ட கேரக்டர் என்பதை இயக்குநர் விவரித்து விடுவதால் எங்கே தானாக அமையும் வில்லன் கோஷ்டியை அவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்கிற பதபதைப்பு ரசிகர்களை சீட்டின் நுனிக்கு நகர வைத்து விடுகிறது. இதுபோன்ற நல்ல கதைகள் அமைந்தால் அதர்வா ரூட் கிளியர்! அந்த வெற்றிப் பாதைக்கு ‘பிள்ளையார் சுழி’ போட்டிருக்கிறது இந்தப்படம்!
எந்த பில்டப்பும் இல்லாமல் எண்ட்ரி கொடுக்கிறார் ‘ஊதாக்கலரு… ரிப்பன்’ ஸ்ரீதிவ்யா. சென்னைப் பெண் என்பதால் போடுவதெல்லாம் டீசண்ட்டான மாடர்ன் ட்ரெஸ் தான். சொக்க வைக்கும் பார்வைக்கும், மனதை மயக்கும் மந்திரப்புன்னகைக்கும் அவரிடமே இதயத்தை அடகு வைத்து விட்டு வந்து விடுவார்கள் ரசிகர்கள்.
காதல் என்று வந்து விட்டால் இந்த மாதிரியான பொருட்களைத்தான் ப்ரசண்ட் பண்ண வேண்டும் என்கிற ரெகுலர் மனநிலையை புறந்தள்ளி விட்டு புதிதாக யோசித்திருக்கிறார் இயக்குநர்.
சில படங்களின் இரண்டு, மூன்று காட்சிகள் நகரவும் எங்கிருந்தோ வரும் கொட்டாவி அதுவாக வந்து வாயில் உட்கார்ந்து கொள்ளும். ஆனால் இந்தப்படம் அப்படியில்லை. காட்சிக்கு காட்சிக்கு அடுத்து என்ன? அடுத்து என்ன? என்கிற எதிர்பார்ப்பை கிளறி விடுகிறது.
ஒரு காபி ஷாப்பில் போய் உட்கார்ந்தால் ஒரு சின்ன கீறல் கூட விழுந்து விடாதபடிக்கு உஷாராக இருக்கும் அதர்வாவின் காட்சிகளில் தெரிகிறது இயக்குநரின் ஸ்க்ரீன் ப்ளே ‘டச்’.
வில்லனாக வரும் மனோகரன் மிகச்சரியான பாத்திரத் தேர்வு! மிரட்டல், உருட்டல் வேலைகளை எல்லாம் அவர் பெரிய சைஸ் கண்களே திரையில் செய்து விடுகிறது. மீது எல்லாம் எக்ஸ்ட்ரா ஆக்ஷன் ப்ளாக் தான்.
ஜெயிக்கும் போது தட்டிக்கொடுப்பதும், அதில் கொஞ்சம் கவனம் சிதறினாலும் சீரியஸ் ஆவதுமாக அதர்வாவின் கோச்சராக வரும் நரேனின் கேரக்டரில் அப்படி ஒரு ஈர்ப்பு!
‘களவாணி’யில் எதற்கெடுத்தாலும் முறுக்கிக் கொண்டு சண்டைக்கு கிளம்பும் திருமுருகன் இதில் அப்பாவின் பேச்சை தட்டாத பிள்ளையாக வருகிறார். பின்னர் அவரே வில்லன் கோஷ்டியின் கத்திக்கு பலியாவது உருக்கம்!
மனோகரன் செய்யும் அட்டூழியங்களுக்கு ஆதாரம் கிடைத்தும் மேலதிகாரிகளின் கைகளால் கட்டுப்பட்டு அந்தக் கும்பலை தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே? என்கிற செல்வாவின் இயலாமை நடிப்பு நேர்மை!
இப்படி படத்தில் வருகிற எல்லா கேரக்டர்களையும் பேச வைத்த இயக்குநர் அதர்வாவின் நண்பர்களாக வரும் கேரக்டர்களை மட்டும் ‘விளையாட்டாக’ கையாண்டிருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் பஞ்சு மிட்டாய், உன் சுவாசம், நான் புடிச்ச மொசக்குட்டியே… என பாடல்கள் அனைத்தும் செவிகளை மயக்கும் மெலோடிஸ்!
உங்களை நம்பி வந்த என் மகனை காப்பாத்த முடியல, போங்க சார் போயி போலீஸ் வேலையை ரிசைன் பண்ணிட்டு வாங்க… நான் வேலை செய்ற பேங்க்ல செக்யூரிட்டி வேலை காலியா இருக்கு. அதை வாங்கித் தர்றேன்’ என்று மகனை பறிகொடுத்து விட்டு செல்வாவிடம் அழகம்பெருமாள் கண் கலங்க பேசும் வசனம் வீரியத்தின் வீச்சு. கதையின் போக்கு, திரைக்கதையின் வேகம் இரண்டுக்கும் ஈடு கொடுக்கிறது ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் இப்படிப்பட்ட வசனங்கள்!
தஞ்சையில் இயற்கை அழகையும், சென்னையின் செயற்கை அழகையும் கண்முண்ணே கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு.
ஈட்டி – வெற்றியை அசால்ட்டாக ஈட்டும்!