ஒரு சாதாரண இல்லத்தரசன் எதிரியின் மனதிலும் உள்ளத்தரசனாக மாறி மாமனிதனாகும் கதை
தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் வாழும் விஜய்சேதுபதிக்கு தன் பிள்ளைகளை பெரிய பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்க ஆசை. அதனால் செய்யும் ஆட்டோ டிரைவர் தொழிலை விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலுக்குள் நுழைகிறார். அதில் ஓர் பெரும் பிரச்சனை எழ, விஜய்சேதுபதி ஊரைவிட்டு ஓட வேண்டிய சூழல் வருகிறது. ஊர்விட்டுப் போன விஜய்சேதுபதி என்னவானார்? அவர் குடும்பம் என்னானது? என்பதை மாமனிதனில் காணலாம்
நடுத்தர குடும்பத்து மனிதனை கண்முன் நிறுத்தி கலக்கியிருக்கிறார் விஜே. காயத்ரி வழக்கம் போல் தனது நல்ல நடிப்பால் நம்மை கவர்கிறார். குரு சோமசுந்தரத்தை படத்தின் இன்னொரு ஹீரோ என்றே சொல்லலாம். ஷாஜி, கஞ்சா கருப்பு என படத்தில் தோன்றும் அனைவருமே இயல்பாக நடித்துள்ளனர்
பாடல்கள் தர்மதுரை படத்தில் அமைந்தது போல அமையவில்லை என்றாலும் பின்னணி இசையில் இளையராஜாவும், யுவன்சங்கர் ராஜாவும் அசத்தியுள்ளார்கள். ஒளிப்பதிவில் தேனி மாவட்டமும் பண்ணைபுரத்தின் அழகும் கொட்டிக்கிடக்கிறது. கூடவே கேரளாவிற்கும் கதை செல்கிறது. சொல்லவா வேண்டும்? கேமராமேன் அசத்தியிருக்கிறார்
படத்தின் இயல்புத்தன்மை ஷாஜி கேரக்டர் வந்தபிறகு மாறிவிடுகிறது. அதற்கு முன்னான காட்சிகள் எல்லாம் அவ்வளவு லைவாக இருக்கிறது. சிற்சில இடங்களை சீரியஸ் மோடுக்கு மாற்றிய இயக்குநர், பல இடங்களை சீரியல் மோடுக்கும் மாற்றியுள்ளார். என்னதான் விஜய்சேதுபதியை தியாகியாக முன்னிறுத்தினாலும் குருசோமசுந்தரமும், காயத்ரியும் தான் நமக்கு தியாகிகளாக தெரிகிறார்கள். மிகப்பெரிய அழுத்தத்தைத் தரவேண்டிய முடிவு படத்தில் அமையாதது சிறுகுறைதான் என்றாலும், கிராமத்தையும் அதன் அசல் மனிதர்களையும், அவர்கள் தம் உணர்வுகளையும் சிறப்பாக காட்டிய விதத்திற்காக மாமனிதனை ஒருமுறை ரசிக்கலாம்
3/5