Rating : 3.5/5
‘என்னை அறிந்தால்’ படத்தில் அமைதியான அஜித்தை அடையாளம் காட்டினார் இயக்குநர் கெளதம் மேனன்.
இதில் அப்படியில்லை. டோட்டலாக அதற்கு எதிர்மாறாய் எப்போதுமே பரபரவென்றிருக்கிற அஜித்தை காட்டியிருக்கிறார் இயக்குநர் சிவா.
தங்கை லட்சுமிமேனனின் ஓவியக்கல்லூரி படிப்புக்காக அவரோடு கொல்கத்தா வருகிறார் அஜீத். வந்த இடத்தில் மயில்சாமி மூலமாக சூரி நடத்தும் கால்டாக்ஸி கம்பெனியில் டிரைவர் வேலை கிடைக்கிறது.
அந்த நேரத்தில் நகரத்தில் போதைப்பொருள், பெண்களை கடத்தும் ஒரு கும்பலைப் பிடிக்க போலீஸ் முயற்சிக்கிறது. போலீஸ் போக முடியாத இடங்களுக்கு கூட கால்டாக்ஸி போவதால் அவர்கள் உதவியை நாடும் போலீஸ் அந்தக் கும்பலில் யாரையாவது பார்த்தால் தகவல் தருமாறு சொல்கிறது.
போலீஸ் கேட்டபடியே கும்பலில் ஒருவனை போலீசில் மாட்டி விடுகிறார் அஜித். அந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளும் கடத்தல் கும்பல் அவரைத் தீர்த்துக் கட்ட தயாராகிறது.
இதற்கிடையே அஜித்தின் தங்கையை நாயகி ஸ்ருதிஹாசனின் அண்ணனுக்கு நிச்சயம் செய்கிறார்கள். அது முடியவும் கடத்தல் கும்பலுக்கும், அஜித்துக்கும் நடக்கும் நேரடிச் சண்டையை பார்த்து விடும் ஸ்ருதி ‘அஜித் ஒரு கொலைகாரன்’ என்கிற தப்பான முடிவுக்கு வருகிறார்.
ஆமாம் நான் கொலைகாரன் தான் என்று சொல்லும் அஜித் தன் தங்கை லட்சுமிமேனனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று பிளாஸ்பேக்கை ஓப்பன் செய்கிறார்.
அதன்பிறகு அஜித் யார்? அந்தக் கடத்தல் கும்பலுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? என்பதை ‘தெறி’ கிளைமாக்ஸோடு முடிக்கிறார்கள்.
ஆரம்பத்தில் எப்போதுமே நெற்றியில் திருநீர், முகம் நிறைய புன்னகை என அமைதியாக வரும் அஜித் அடுத்தடுத்த காட்சிகளில் முறுக்கேறிய உடம்புடன் காட்டும் ஆக்ரோஷம்… அப்பப்பா..!!!
குறிப்பாக இடைவேளைக்கு முன்பு தனது புஜபலத்தைக் காட்டி வில்லன்களுடன் அவர் போடும் சண்டையில் தியேட்டர் ஸ்க்ரீனே கிழிந்து விடும் போலிருக்கிறது. அந்தளவுக்கு வெறித்தனமான சண்டை.
இரண்டாம் பாதியில் செம லோக்கலான ஆளாக வந்து காசுக்காக வில்லத்தனம் செய்கிறார். தனது வழக்கமான இமேஜை விட்டுக்கொடுக்க ஆரம்பித்து விட்டார் என்பதை உறுதிசெய்ய படத்தில் வரும் ”நான் கெட்டவன் இல்லடா.., கேடு கெட்டவன்டா…” என்கிற டயலாக்கே போதும்!
தங்கை லட்சுமிமேனனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிகிற காட்சிகளில் நல்ல பாசக்கார அண்ணனான நெகிழ வைக்கிறார். அவருக்கும், அஜித்துக்குமான கெமிஸ்ட்ரி கரெக்ட்டாக ‘சிங்க்’ ஆகியிருக்கிறது.
ஸ்ருதிஹாசனின் அண்ணன் அஸ்வின் தனது தங்கையை பின் தொடர்கிறார் என்று தெரிய வரவும் அவரை தனியாக அழைத்து ”காதல்ங்கிற பேர்ல பொண்ணுங்களை துரத்தாதீங்க.. அவங்களை படிக்க விடுங்க… ஒரு பொண்ணுக்கு நம்மளை பிடிக்கலேன்னு அப்புறம் அவங்க பக்கமே திரும்பக் கூடாது’ என்று அட்வைஸ் செய்வது ஆண்மையின் அழகு.
இருந்தாலும் அஜித் புளித்துப் போன பழைய மாவிலேயே திரும்பத் திரும்ப ‘மிங்கிள்’ ஆவதை பரிசீலனை செய்ய வேண்டும்!
கதாநாயகியாக வரும் ஸ்ருதிஹாசனுக்கு பாடல் காட்சிகளில் ட்ரெஸ் மட்டுமல்ல .., சீன்களுமே சிக்கனம் தான்!
சூரி, மயில்சாமி, மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா, வித்யூலேகா, லொள்ளுசபா சுவாமிநாதன், பால சரவணன் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே காமெடிக்கு இறக்கி விடப்பட்டிருக்கிறார்கள். இருந்து என்ன புண்ணியம்..???
தமிழ்சினிமாவில் வழக்கமான வில்லன்களை போட்டு போரடிக்காமல் கபீர் சிங், ராகுல் தேவ் என புதிய முகங்களைப் பார்க்கும் ரசிகர்களுக்கு ஆக்ஷன் காட்சிகளில் சற்றே ஆறுதல்.
அனிருத்தி இசையில் பின்னணி இசையும், ஆலுமா டோலுமா, வீர விநாயகா பாடல்களும் தெறி ஹிட். மற்றதெல்லாம் நார்மல் ஹார்ட் பீட்.
அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடி, அவரது உதட்டுச் சிரிப்பு, கழுத்தில் தொங்கும் சங்கிலி என எல்லாவற்றுக்கும் க்ளோசப் காட்சிகள். இதுபோதாதா இது அஜித் ரசிகர்களுக்காகவே தயாரான தீபாவளி விருந்து என்று..!
அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களுக்கு ஆக்ஷன் பிளாக் சூப்பராக ஒர்க்-அவுட் ஆகும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதோடு அண்ணன் – தங்கச்சி செண்டிமெண்ட் முகத்தில் தெறிக்கிற வரைக்கும் கலக்கி மீண்டும் அஜித்தை பார்த்து பிரம்மிக்க வைத்திருக்கிறது இந்த ‘வேதாளம்’.