நட்சத்திரங்கள் – இனிகோ பிரபாகர், ஷைணி, ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி, வசந்த், கயல் வின்சென்ட், ப்ரீத்திஷா
இசை – அருணகிரி
ஒளிப்பதிவு – முருகேஷா
இயக்கம் – எஸ். பரீத்
வகை – ஆக்ஷன் – நாடகம்
சென்சார் சர்ட்டிபிகேட் – U/A’
கால அளவு – 2 மணி நேரம் 10 நிமிடங்கள்
கிராமத்துப் பின்னணியை கதைக்களமாகக் கொண்ட படங்கள் அண்மைக்கால தமிழ்சினிமாவில் அரிதிலும் அரிதான ஒன்றாகி விட்டது. அதையும் மீறி வருகின்ற ஒன்றிரெண்டு படங்கள் என்றால் அந்த கிராமத்துப் பதிவுகளை சிறு பட்ஜெட் படங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது. அந்த வரிசையில் தஞ்சை மண்ணின் பின்னணியில் வந்திருக்கும் படம் தான் இந்த ‘வீரையன்’.
தனது அண்ணன் மகன்களை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார் தஞ்சாவூரிலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ஆடுகளம் நரேன். அவர்களோ படித்த திமிரில் நரேனை மதிக்காமல் போக, ‘இருங்கடா.., உங்க கண்ணு முன்னாலேயே என் மகனை படிக்க வெச்சு பெரிய ஆளாக்கி காட்றேன்’ என்று சவால் விட்டு அதற்காக மெனக்கிட ஆரம்பிக்கிறார்.
இன்னொரு பக்கம் அந்த ஊர் எம்.எல்.ஏவான வேல ராமமூர்த்தியின் மகளும், அவர் வீட்டு கார் டிரைவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள்.
இவர்கள் வசிக்கிற அதே ஊரில் சின்னச் சின்ன திருட்டு வேலைகளைச் செய்து காசு பார்த்துக் கொண்டு அவ்வப்போது ஊர் மக்களிடம் அடிகளையும் வாங்கிக் கொள்கிறது இனிகோ பிரபாகர், ‘கயல்’ வின்சென்ட், ப்ரீத்திஷாவின் ஊர் சுற்றிக் கூட்டணி.
ஒருநாள் ஊருக்குள் தன் வீட்டுக் கோழியை திருடிக் கொண்டு ஓடுகிற வழியில் கண்டுபிடிக்கும் வேல ராமமூர்த்தியின் கார் டிரைவர் இனிகோ கூட்டணியை தான் கூட்டி வந்த அடியாட்களோடு சேர்ந்து கொண்டு நையப்புடைத்து அனுப்புகிறார்.
ஆட்களை வைத்து அடித்த டிரைவரை பதிலுக்கு பழிவாங்க ”உன் மகளும், உன் வீட்டு கார் டிரைவரும் ஊரை விட்டே ஓடிப்போகப் போகிறார்கள்” என்கிற கார் டிரைவரின் காதல் ரகசியத்தை எம்.எல்.ஏவிடம் போட்டுக் கொடுக்கிறார் இனிகோ.
அவமானத்தில் குனிக்குருகும் வேல ராமமூர்த்தி மானம் தான் பெருசு என்று பெத்த மகளை கெளரவக் கொலை செய்து விடுகிறார். காதலியின் நினைவிலேயே பைத்தியமாக அந்த ஊரிலேயே கிடக்கிறான் கார் டிரைவர். போதைக்குறைக்கு இதே இனிகோ கூட்டணியால் தன் மகனின் படிப்பே லட்சியமாக இருக்கும் நரேனின் மகனின் படிப்பும் தடை படுகிறது.
நரேன் தன் லட்சியத்தில் ஜெயித்தாரா? கார் டிரைவரை பழி வாங்கியதால் இனிகோ அன் கோ கூட்டணியின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடந்தது என்ன? என்பதே கிளைமாக்ஸ்.
திருட்டு வேலைகளைச் செய்தாலும் தன் அப்பாவுக்காக படித்தே ஆக வேண்டுமென்கிற லட்சியத்தில் இருக்கிற நரேன் மகனின் படிப்புக்கு உதவுகிற நல்ல மனம் படைத்தவராகவும் வருகிறார் இனிகோ. ( அப்புறம் ஹீரோவாச்சே?)
கல்வி தான் ஒருவனுடைய வாழ்க்கை முன்னேற்றத்தில் முக்கிய இடத்தை வகிக்கும் என்று அதன் முக்கியத்துவத்தையும் உயர்சாதிக்காரர்கள் செய்யும் கெளரவக் கொலை ஆகியவற்றையும் சமரசமில்லாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார் டைரக்டர் பரீத்.
படம் முழுக்க கசங்கிய சட்டை, மடித்துக் கட்டிய லுங்கியுமாக அசல் கிராமத்தானாகவே படம் முழுக்க பவுசு காட்டியிருக்கிறார் ஹீரோ இனிகோ.
கொழுக் மொழுக் நாயகியாக வரும் ஷைனி வழக்கமான ஹீரோயின் போல இல்லாமல் வித்தியாசமான கேரக்டரில் வருவதைப் பார்ப்பதே அழகு. ”என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா..? பத்து புள்ளை பெத்துத் தர்றேன்” ”உன்னைப் பார்த்துகிற என்னை நீ நல்லா பாத்துக்க மாட்டியா?” என்று பார்க்கிற பெண்களிடமெல்லாம் டயலாக் பேசும் இனிகோவின் வார்த்தைகளில் விழுகிற ஷைனியின் ரொமான்ஸ் எபிசோட் முழுசுமே காமெடி கம் புதுசு.
இனிகோவின் ஊதாரி நண்பராக வரும் கயல் வின்செண்ட், திருநங்கை பீரித்திஷாவும் வெட்டியான நடிப்பை கெட்டியாகக் கொடுத்திருக்கிறார்கள்.
மகன் படிப்பு மகன் படிப்பு என்று சதா எந்த நேரமும் அதைப்பற்றியே லெக்சர் அடிக்கும் ஆடுகளம் நரேன், எம்.எல்.ஏ கெத்தை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காத வேல ராமமூர்த்தி என அனுபவம் வாய்ந்த நடிகர்களின் கேரக்டர்களில் மட்டும் கொஞ்சம் செயற்கைத்தனம் எட்டிப் பார்ப்பது ஏனோ?
அருணகிரியின் இசையில் பாடல்கள் ஏற்கனவே, ‘எங்கேயோ’ கேட்டவை ரகம்.
‘வீரையன்’ கோவிலில் விரிய ஆரம்பிக்கிற கிராமத்தின் அசல் அடையாளம், அங்கங்கே மழைக்கும், காற்றுக்கும் தாக்குப் பிடிக்க முடியாமல் சிதிலமடைந்து கிடக்கும் கட்டடங்களையும், எந்த மாற்றமும் கொண்டிராத கிராமத்து தெருக்களையும், ஒட்டுமொத்த கிராமத்து மிச்சங்களையும் முழுமையாக அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது முருகேஷாவின் அசத்தலான ஒளிப்பதிவு.
படம் ஆரம்பித்ததிலிருந்து கிளைமாக்ஸ் வரை ஸ்டேஷனை அடையப் போகும் ரயிலைப் போல மெதுவாக நகர்வது படம் பார்ப்பவர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது. யோசிக்காமல் கத்தரி பண்ணியிருக்கலாமே எடிட்டர் சார்?
கெளரவக்கொலை, கல்வி, காதல், நட்பு என ஒரே படத்தில் இரண்டு, மூன்று கதைகளை சொல்ல நினைப்பதும், அந்தக் கதைகள் கிளைமாக்ஸில் ஒரே புள்ளியில் இணைக்க நினைப்பதும் இயக்குனரின் புத்திசாலித்தனத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கலாம். ஆனால் அதைக் காட்சிப்படுத்திய விதத்தில் தானும் குழம்பி, ரசிகர்களையும் குழப்புவது சரிதானா?
கிராமத்துப் பின்னணியில் கமர்ஷியல் படத்தை தர முயன்றிருக்கிறார் இயக்குனர் பரீத். அதற்காக ஒரே ஒரு கதையை மட்டுமே யோசித்து படத்தை நகர்த்தியிருந்தால் இன்னொரு பக்காவான கிராமத்து பதிவாகியிருக்கும் இந்த ‘வீரையன்.’