‘அன்பென்றாலே அம்மா’ : மனசை உருக்கும் இசை வீடியோ ஆல்பம்
விக்ரமன் டைரக்ஷனில் ”நினைத்தது யாரோ” படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் ரஞ்சித்மேனன். இவரது இயக்கத்தில் ”அன்பென்றாலே அம்மா” என்ற இசை வீடியோ ஆல்பம் உருவாகி உள்ளது.
இந்த வீடியோ ஆல்பத்தில் ஜரீனா வஹாப் அம்மாவாக நடித்திருக்கிறார். ஜரீனா வஹாப் எம்.ஜி.ஆருடன் ”நவரத்தினம்” படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர். அத்துடன் கமலுடன் “ விஸ்வரூபம், சூர்யாவுடன் ரத்த சரித்திரம் போன்ற படங்களில் நடித்தவர். மற்றும் ”ஜிகினா” படநாயகன் ஆன்சன், உலக புகழ்பெற்ற மாடல் அழகி ஸ்ருதி மற்றும் ஏராளமான குழந்தைகளும் நடித்துள்ளனர்.
ஏழு நிமிடம் ஓடக்கூடிய இந்த இசை வீடியோ ஆல்பத்தில் நடித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று ஜரீனா வஹாப் கூறி உள்ளார்.
இப்படி ஒரு இசை ஆல்பம் வெளியிட ஊந்துதலாக இருந்தது எது? என்று இயக்குநர் ரஞ்சித்திடம் கேட்டோம்
“ இந்த உலகத்துல அம்மாவை விரும்பாதவர்கள் அவர் மீது பாசம் காட்டாதவர்கள் இருக்கவே முடியாது.
எனக்கும் என் அம்மாவை ரொம்பப் பிடிக்கும். அதே போலவே டைரக்ஷன் செய்வதிலும் எனக்கு அதிக ஈடுபாடு இருந்ததால் இந்த ஆல்பத்தை அம்மாவின் பெருமையைப் பற்றி பேசும் விதமாக எடுத்தால் என்ன என்று தோன்றியது. அதனால் தான் இந்த ‘அன்பென்றாலே அம்மா’ என்ற ஆல்பத்தை எடுத்தேன்.
சமீபகாலமாக வயதானவுடன் அம்மாக்களை ஹோம் என்று சொல்லக்கூடிய முதியோர் காப்பகத்தில் விடும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. அது தவறு, பிறந்தது முதல் வளர்வது வரை அம்மா தன் குழந்தைக்காக எத்தகையை தியாகங்களை எல்லாம் செய்கிறாள். அப்படிப்பட்ட பாசமான அம்மாக்களை வயதானவுடன் நாம் எப்படி கவனிக்கிறோம்? என்பதைத்தான் இந்த ஆல்பத்தில் படமாக்கியிருக்கிறேன்.
உனக்கு தேவையான கார், பங்களா, நகை, பணம் எல்லாமே தருகிறேன். நீ சந்தோஷமாக இரு என்கிறான் மகன். ஆனால் அம்மாவோ அதெல்லாம் எனக்குத் தேவையில்லை. நீ என் அருகில் இரண்டு நிமிடங்கள் இருந்தால் போதும் என்கிறாள் அம்மா.
அதன்பிறகு தன் சிறு வயதில் அம்மா தன்னை எப்படியெல்லாம் வளர்த்தாள் என்று யோசித்து திருந்தி அம்மாவிடம் போகிற போது, அவள் இந்த உலகத்தை விட்டே போயிருப்பாள். என்கிற மாதிரியான காட்சிகளின் நகர்வுகளோடு அமைக்கப்பட்டிருந்தது அந்த இசை ஆல்பம்.
பார்ப்போர் மனதை உருக்கும் இந்த இசை ஆல்பத்தைப் பார்த்து யாராவது ஒரு இளைஞர் ஹோமில் இருக்கும் தன் அம்மாவை திரும்ப வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தாலே அது இந்த ஆல்பத்தின் வெற்றி தான்” என்றார் ரஞ்சித்.
மலையா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாராகியுள்ள இந்த வீடியோ இசை ஆல்பத்தில் ஸ்வேதா மோகன் பாட, ரஞ்சித் உன்னி இசை அமைக்க, சாரதி பாடலை எழுதி உள்ளார். ஜனவரி 26 ம் தேதி குடியரசு தினமான இன்று டைம்ஸ் மியூசிக் வெளியிடுகிறது. குடியரசு தினம் என்பதையும் தாண்டி இன்று இந்த ஆல்பத்தை இயக்குநர் ரஞ்சித் வெளியிடுவதற்கு இன்னொரு சிறப்பான காரணமும் உண்டாம்.
ஆமாம், அவருடைய அம்மாவின் பிறந்த நாள் இன்று!