கெட்ட பெயரை மாத்தணும் : ப்ளான் போடுறாராம் அனிருத்!

”அந்தப் புள்ள நல்லா மியூசிக் போட்டுக்கிட்டு இருந்துச்சு எந்த கொள்ளிக்கண்ணு பட்டுச்சோ… இப்படி ஒரு சிக்கல்ல போய் மாட்டிக்கிச்சு…” என்று பல முனியம்மாக்கள் கூட வருத்தப்படுகிற
அளவுக்கு ஆகி விட்டது அனிருத்தின் இசை வாழ்க்கை!
சிம்புவுடன் சேர்ந்து இயற்றிய பீப் சாங் விவகாரத்தில் அனிருத்தின் தலை உருட்டப்பட்டு வரும் நிலையில் கனடாவுக்கு இசை நிகழ்ச்சி நடத்தச் சென்றவர் நிகழ்ச்சி முடிந்தும் அங்கேயே தங்கியிருக்கிறார்.
உள்ளூரில் இருக்கும் சிம்புவுக்கு சாதகமான ”முன்ஜாமீன்” சூழல் ஏற்பட்டாலும், வெளிநாட்டில் இருக்கும் அனிருத் எப்போது வருவார் என்று தான் எல்லோருடைய கண்களும் சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட்டை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
இப்படி தன்னை நோக்கி வெறியோடு பார்த்துக் கொண்டிருக்கும் கண்களை கண்ணீர் வரவைத்து இரக்கப்பட வைக்கும் விதமாக ஒரு மாஸ்டர் ப்ளான் ஒன்றைப் போட்டிருக்கிறாராம் அனிருத்.
அது வேறோன்றுமில்லை, ஏற்கனவே இந்த விவகாரத்தில் சிக்கி பெயர் கெட்டுப் போனதால் அவரை அறிமுகப்படுத்திய தனுஷே தனது கொடி படத்திலிருந்து தூக்கி விட்டார். மேலும் மூன்று பட வாய்ப்புகள் அவர் கையை விட்டுப் போனதையடுத்து இழந்த கெளரவத்தை மீட்டெடுக்க ஒரு இசை ஆல்பம் ஒன்றை வெளியிட இருக்கிறாராம் அனிருத்.
வருகிற பிப்ரவரி மாதம் 14-ம் தேதி காதலர் தினம் வருகிறதல்லவா? அதையொட்டு அவர் வெளியிடப்போகும் இந்த ஆல்பத்தில் பெண்களை பெருமைப் படுத்தும் விதமாகவும், செய்த தவறுக்கு வருந்தும் விதமாகவும் அந்த ஆல்பம் இருக்கும் என்கிறார்கள்.