மீண்டும் படமாக்கப்படும் பாலாவின் ‘வர்மா’ – நடந்தது என்ன?
கடந்த ஆண்டு தெலுங்கில் ரிலீசாகி பெரும் வசூல் சாதனை செய்த படம் ‘அர்ஜுன் ரெட்டி’. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த இந்தப் படத்தை தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் பிரபல இயக்குனர் பாலா இயக்கி வந்தார்.
இதில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாக இருந்தார்.
இதனை தமிழில் இயக்குநர் பாலா இயக்கியுள்ளார். இதில் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாக இருந்தார். அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை மேகா நடித்துள்ளார்.
இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்த இந்தப்படம் இந்த மாதம் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று திடீரென்று படத்தில் தங்களுக்கு திருப்தி இல்லை என்றும், அது ஒரிஜினல் படமான அர்ஜூன் ரெட்டி போல இல்லை என்றும் அதனால் இந்தப்படத்தை ரிலீஸ் செய்யப்போவதில்லை என்றும் தயாரிப்பு நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.
சுமார் 12 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டிருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் மீண்டும் இந்தப் படத்தை துருவ் ஹீரோவாக நடிக்க, வேறு ஒரு இயக்குனரை வைத்து தயாரிக்கப் போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒரு படத்தை எடுத்து அதை அப்படியே தூக்கி தூர வீசிவிடும் நிகழ்வு தமிழ்சினிமாவில் இதற்கு முன்பு நடந்ததில்லை. அதுவும் பாலா போன்ற தேசிய விருது வாங்கிய இயக்குனருக்கு பெருத்த அவமானமாக கருதப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் அதிர்ச்சியோடு இந்த நிகழ்வை பார்த்துக் கொண்டிருக்கிறது.