49 ஒ – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

490-review

‘மீண்டும் நடிக்கவே மாட்டேன்’ என்று அடம்பிடித்துக் கொண்டிருந்த கவுண்டமணியை திரைக்கு கட்டாயமாக இழுத்து வந்ததே இந்தப் படத்தின் கதை தான்.

விவசாயமும், விவசாயிகளும் நம்ம நாட்டுக்கு அவசியம் தேவை. விவசாயி இல்லைன்னா நாம உயிர் வாழ முடியாது. ‘விவசாயிகள் விவசாயிகளாத்தான் இருக்கணும்’னும்கிற கருத்தை அரசியல் நையாண்டியோட சொல்வது தான் இந்த ’49-ஓ’ திரைப்படம்.

ஒரு கிராமத்துல இருக்கிற எம்.எல்.ஏ, ஊர் தலையாரி, வி.ஏ.ஓ எல்லாரும் ஒண்ணு சேர்ந்து சொந்த நிலங்களை வெச்சுக்கிட்டு கஷ்டப்படுற விவசாயிகள் கிட்ட நிலத்தை குறைந்த விலைக்கு

வாங்கி அதை ப்ளாட் போட்டு விற்க முயற்சி பண்றாங்க. அதுக்காக உங்க நிலத்தை கொடுத்தா ஆளுக்கு 10 லட்சம் ரூபாய் தர்றேன்னு சொல்லி ஆசைக்காட்டுறாங்க…

எந்த போகத்திலும் லாபத்தை பார்க்காத விவசாயிகள் தங்கள் வறுமையை ஒழிக்க அதை விட்டால் வழியில்லை என்று நினைத்து நிலத்தை தர முன் வருகிறார்கள். ஆனால் கவுண்டமணியோ தயவு செய்து விற்க வேண்டாம் என்று சொல்லிப் பார்க்கிறார்.

கேட்காத ஊர் மக்கள் அந்த பணம் திண்ணி கும்பலிடம் நிலத்தை எழுதி கொடுத்து விட்டு ஏமாந்து போகிறார்கள்.

நிலத்தை இழந்து வாழ்க்கையை தொலைத்து நிற்கும் தன் கிராமத்து மக்களுக்கு எப்படியாவது அந்த நிலங்களை திரும்பி வாங்கிக் கொடுக்க முயற்சிக்கிறார்.

அவரது அந்த முயற்சி நிறைவேறியதா இல்லையா என்பதே கிளைமாக்ஸ்.

சமூக அர்ப்பணிப்போடு சம கால அரசியலை உண்மையாகவும், நேர்மையாகவும், தைரியமாகவும் படமாக்கிய விதத்தில் இயக்குநர் ஆரோக்கியதாஸை வரவேற்றே ஆக வேண்டும்.

நாட்டில் முதுகெலுமான விவசாயத்துக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை மிக அழமாகவும், இயல்பாகவும் திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இப்படி ஒரு கதைக்கு கவுண்டமணி தான் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குநர் ஆரோக்கியதாஸ் முடிவு செய்ததே படத்தின் பாதி வெற்றி தான்.

சவுரி என்ற கேரக்டரில் எளிமையான மனிதராக வரும் கவுண்டமணி இன்றைய அரசியல்வாதிகளையும், அவர்கள் எப்படியெல்லாம் தங்களுக்கு தோதாக சட்ட திட்டங்களைப் போட்டு மக்களை

Related Posts
1 of 43

ஏமாற்றி வருகிறார்கள் என்பதை தோலுரித்துக் காட்டியிருக்கிறார். அவர் பேசுகிற ஒவ்வொரு அரசியல் நையாண்டி பஞ்ச் வசனங்களும் கைதட்டல்களை விடாமல் அள்ளிக்கொள்கின்றன.

ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தலுக்கு முன்னால் எந்தக் கட்சிக்கு அதிக இடம் கெடைக்கும்னு கருத்துக் கணிப்பு நடத்துறீங்க..? என்னைக்காவது நோட்டாவுக்கு எத்தனை பேர் ஆதரவா இருக்காங்கன்னு கருத்துக் கணிப்பு நடத்திருக்கீங்களா? நீங்களே அதை திட்டமிட்டு மறைக்கிறீங்க.. என்று அரசியல்வாதிகளின் பின்னால் ஓடும் மீடியாக்களையும் விட்டுவைக்கவில்லை.

அதோடு தனது நையாண்டியை விடவில்லை கவுண்டர்.

ரியல் எஸ்டேட் வியாபாரிகள் எடுக்கும் விளம்பர படத்தின் இயக்குநராக வருகிறார் மொட்டை ராஜேந்திரன், அதில் ஹீரோவாக வருகிறார் சாம்ஸ். இருவரையும் வைத்து கவுண்டர் அடிக்கும் டைமிங் கலாய்த்தல் காமெடிகள் எல்லாமே இந்த காலத்து இளம் ஹீரோக்களை குமுறி எடுத்திருக்கிறார்.

”டயலாக்கையெல்லாம் மண்டைக்குள்ள ஏத்தாதீங்கடா…, வாயில வெச்சு பேசுங்கடா…” என்று அவர் அடிக்கும் ‘பஞ்ச்’சில் மொத்த தியேட்டரும் குலுங்க குலுங்க சிரிக்கிறது.

முதல் பாகம் கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும், இடைவேளைக்குப் பிறகு கவுண்டரின் ஆட்டம் சூடு பிடிக்கிறது. அதன் பிறகு எடுக்கும் எக்ஸ்பிரஸ் வேகம் எண்டு டைட்டில் கார்டு போடுகிற வரை வலிமை குறையாமல் பார்த்துக் கொள்கிறார் கவுண்டமணி.

அரசியல்வாதிகளாக வரும் களவாணி திருமுருகன், பாலாசிங், ஜெயபாலன் என படத்தில் வருகின்ற இதர கதாபாத்திரங்களும் தங்கள் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

ஆதி கருப்பையாவின் ஒளிப்பதிவில் மண் வாசனை தூக்கலாகவே இருக்கிறது. கே யின் இசையில் ”அம்மா போல அள்ளித் தரும் மழை தான்” ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும் பாடலாக திரும்ப திரும்ப காதுகளுக்குள் ரீங்காரமிடுகிறது. தேனிசை செல்லப்பாவின் குரலில் ”இன்னும் எத்தனை காலம் வரை” பாடல் உணர்வுகளை தட்டியெழுப்புகிறது.

விவசாயிகளை அரசுகளும், அரசியல்வாதிகளும் புறக்கணிக்கிற சரியான தருணத்தில் இந்தப்படம் ரிலீசாகியிருக்கிறது. இன்னும் ஒரு ஆறு மாதம் கழித்து ரிலீசாகியிருந்தால் தேர்தல் சமயத்தில் ‘பொருத்தமாக’ இருந்திருக்கும்! இப்படி ஒரு படத்தில் எந்த கட்டும் இல்லாமல் வீர்யமுள்ள வசனங்களுக்கு கத்திரி போடாமலேயே ரிலீசுக்கு அனுமதித்த சென்சாருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.

ஸ்டைலிஸ் இயக்குநர் என்று சொல்லப்படும் கெளதம் மேனனின் உதவியாளர் ஆரோக்கியதாஸுக்கு இது முதல் படம். படம் முழுக்க விவசாயிகளின் வாழ்க்கைச் சூழல், அரசியல்வாதிகள், அதிகாரிகளின் அயோக்கியத் தனங்கள், ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நடக்கும் கொள்ளைகள் என இன்றைய காலகட்டத்துக்கு தேவையான ரசிகர்களுக்கு விழிப்புணர்வை கொடுக்கக் கூடிய சமுதாய அக்கறையுள்ள படமாக தந்திருக்கிறார்.

இன்னும் கால் நூற்றாண்டு கழித்து வந்தாலும் கவுண்டரின் நக்கலிலும், நையாண்டியிலும் இருக்கும் கம்பீரமே தனி தான்!

அந்த வகையில் 49 – ஓ அட்ரா சக்க… அட்ரா சக்க… அட்ரா சக்க…