அசுரவதம் – விமர்சனம்
RATING – 2.5/5
நடித்தவர்கள் – சசிகுமார், நந்திதா ஸ்வேதா, வசுமித்ர மற்றும் பலர்
ஒளிப்பதிவு – எஸ்.ஆர் கதிர்
இசை – கோவிந்த்
இயக்கம் – மருது பாண்டியன்
வகை – நாடகம் / ஆக்ஷன்
சென்சார் பரிந்துரை – ‘U/A’
கால அளவு – 2 மணி நேரம் 10 நிமிடங்கள்
தன் ஒரே செல்ல மகளை பாலியல் வன்புணர்ச்சி செய்யும் அரக்கனை கொஞ்சம் கொஞ்சமாக சித்திரவதை செய்து, தூக்கத்தை கெடுத்து, நிம்மதியைக் கெடுத்து பழிக்கு பழி வாங்கும் ஹீரோவின் கதை தான் இந்த ‘அசுரவதம்’.
படத்தின் முதல் காட்சியிலேயே வில்லன் வசுமித்ரவுக்கு முன்பின் தெரியாத மொபைல் நம்பரிலிருந்து பலமுறை அழைப்புகள் வருகிறது. ஒரு கட்டத்தில் எரிச்சலாகி போனை கீழே தூக்கியெறியப் போகும் போது தான் கட் ஆகாமல் அடிக்கிறது. போனை ஆன் செய்து காதில் வைத்தால் எதிர் முனையில் பேசும் நபர் “என்ன சமயா பதட்டமா இருக்கியா, கவலைப்படாத எல்லாம் ஒரு வாரத்துக்குதான். அதுக்குப் பிறகு நீ உயிரோடவே இருக்க மாட்ட” என்று மிரட்டுகிறார்.
விடிந்தால் மிரட்டியவர் ஹீரோ சசிகுமார் தான் என்று தெரிய வருகிறது. வசுமித்ர போகிற இடங்களுக்கெல்லாம் அவரை பின் தொடர்ந்து துரத்துகிறார் சசிகுமார்.
முன்பின் அறிமுகமில்லாத ஒருவன் தன்னை ஏன் விடாமல் துரத்துகிறான் என்று தெரியாமல் ”யார்ரா… நீ?” என்று கேட்கிறார் வசுமித்ர. அந்தக் கேள்விக்கு பதிலாக அமையும் ப்ளாஷ்பேக்குடன் கூடிய அடுத்தடுத்த காட்சிகளின் நகர்வே படத்தின் மீதிக்கதை.
சென்னையில் வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவதிப்படும் பேச்சுலர் இளவட்டங்களின் வாழ்க்கையை ஒரு கவிதையைப் போல காட்சிப்படுத்திய ”சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது” என்ற படத்தைக் கொடுத்த மருது பாண்டியனின் இரண்டாவது படம்.
இந்தப் படத்திலும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களில் பெற்றோர்கள் ரொம்பவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியோடு படத்தை இயக்கித் தந்திருக்கிறார்.
சந்துக்குள் இருக்கும் சுவற்றில்சாய்ந்து நிற்பது, சிகரெட்டை ஊதித்தள்ளுவது என சசிகுமாரின் முந்தைய படங்களின் அடையாளங்கள் இந்தப் படத்திலும் சில காட்சிகளில் உண்டு. அதே சமயம் வழக்கமான சசிகுமாராக இல்லாமல் இதில் அதிகம் பேசாமல், எண்ணி ஏலோ, எட்டோ வசனங்களை மட்டுமே பேசி படம் முழுக்க உடல் மொழியாலேயே நடிப்பில் மிரட்டி வித்தியாசத்தை காட்டியிருக்கிறார்.
டூயட் இல்லை, ரொமான்ஸ் இல்லை ஒரு பெண் குழந்தைக்கு தாயாக நடித்திருக்கிறார் நாயகியாக வரும் நந்திதா ஸ்வேதா. காட்சிகள் குறைவு என்றாலும் கேரக்டரின் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்.
சிறுமியாக வரும் அவிகாவும், வில்லனாக அறிமுகமாகியிருக்கும் எழுத்தாளர் வசுமித்ரவும் தமிழ்சினிமாவுக்கு சூப்பரான எண்ட்ரி!
தங்கும் விடுதியின் மொட்டை மாடியைக் கூட வறட்சியாகக் காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு முழுப்படத்தையும் ஒரே கலர் டோனில் கொடுத்திருப்பது ஈரான், கொரியா போன்ற சிறந்த உலகப் படங்களை ஞாபகப்படுத்துகிறது.
முதல் காட்சியில் ஆரம்பிக்கும் பரபரப்பை கிளைமாக்ஸ் வரை கொஞ்சம் கூட அந்த மூடு குறையாமல் கொண்டு சேர்க்க உதவியிருக்கிறார் இசையமைப்பாளர் கோவிந்த். இரண்டு பாடல்கள் இருக்கின்றன. ஆனால் அந்தப் பாடல்கள் கூட தேவையில்லாத திணிப்பு தான்!
மிரட்டலாக ஆரம்பிக்கும் முதல் காட்சியில் நிமிர்ந்து உட்கார வைப்பவர் அடுத்தடுத்த காட்சிகளில் கதையை நகர்த்திச் செல்வதில் தடுமாறியிருக்கிறார் இயக்குனர் மருது பாண்டியன்.
கிளைமாக்ஸில் தான் ஹீரோ வில்லனை பழிவாங்குவார் என்பதெல்லாம் சரி தான். அதற்காக பக்கத்திலேயே இருக்கும் வசுமித்ரவை பழி வாங்காமல் அவர் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் பின் தொடர்ந்து பயமுறுத்துவது, தான் யார் என்றே சொல்லாமல் அவரை குழப்புவது என படத்தின் முக்கால்வாசி காட்சிகளை ஒரே டைப்பில் நகர்த்தியிருப்பது சலிப்பைத் தருகிறது.
படத்தின் முதல் காட்சியில் காட்டிய பரபரப்பை கிளைமாக்ஸ் வரை கொண்டு சென்றிருந்தால் ‘அசுர வதம்’ பணம் போட்ட தயாரிப்பாளருக்கு ‘தங்க ரதம்’ ஆகியிருக்கும்!