‘பக்ரீத்’ போல எந்த படமும் வந்ததில்லை, இனியும் வராது – விக்ராந்த் பெருமிதம்
எம் 10 புரொடக்ஷன் சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’.
ஒட்டகத்தை மையமாக வைத்து தயாராகியிருக்கும் இப்படத்தில் விக்ராந்த் நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நாயகன் விக்ராந்த் பேசும்போது, ‘நான் சினிமா உலகிற்கு வந்து 11 வருடம் ஆகுது. ஆனால் இந்த மேடை எனக்கு ரொம்ப புதுசு. இப்போது பெரிய நம்பிக்கையோடு நிற்கிறேன். இந்தப்படம் அந்த தைரியத்தைக் கொடுத்து இருக்கிறது. கண்டிப்பாக இந்தப்படம் போல ஒருபடம் இதுவரை வந்ததில்லை. இனியும் வராது.
தயாரிப்பாளர் முருகராஜ் அண்ணன் எனக்கு 13 வருடமாக தெரியும். நிறைய நொந்து விட்டார். ஆனால் இந்தக் கதை மீது அவருக்கு பெரிய நம்பிக்கை. இந்த படத்தில் வரும் ஒட்டகத்தை கொண்டு வருவதற்கு அவ்வளவு சிரமப்பட்டார். ஓட்டகம் மீது நிறைய பஞ்சாயத்து இருக்கு. அந்த ஒட்டகத்தை அனுமதி வாங்கி கொண்டுவர 8 மாதங்கள் ஆகியது. ஒட்டகத்தை தத்தெடுத்து பயிற்சி கொடுத்து, அதனுடன் நாங்கள் பழக ஒரு மாதம் ஆகியது. மேலும் அந்த ஒட்டகத்தை 100 நாளில் ஒப்படைக்க வேண்டும் என்ற டெட்லைன் வேறு இருந்தது. ராஜஸ்தான், மத்திய பிரதேஷ் ஆகிய இடங்களுக்கு ஒட்டகத்தை அழைத்து சென்று படப்பிடிப்பு நடத்தினோம்.
வானிலை, மழை என பல பஞ்சாயத்து இருந்தது. உண்மையிலேயே தயாரிப்பாளருக்கும் ஒட்டகத்திற்கும் தான் பெரிய நன்றி சொல்லணும். இப்படத்தில் ஒரு கிராபிக்ஸ் காட்சிகள் கூட இல்லை. படத்தைப் பார்த்த அனைவருமே பெரிதாகப் பாராட்டி இருக்கிறார்கள். நிச்சயம் இந்த நல்ல படத்தை பத்திரிகையாளர்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.