ரசிகர்களை முட்டாளாக்கி வெச்சிருக்கார்…! – ரஜினியை விளாசித் தள்ளிய பாரதிராஜா!
காவிரி பிரச்சனையில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதையடுத்து கடந்த சில வாரங்களாகவே மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவும் புதிய அமைப்பைத் தொடங்கி காவிரி பிரச்சனைக்காக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
அண்மையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது போலீசாருக்கு ஆதரவாக கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார் ரஜினி. அது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் இயக்குனர் பாராதிராஜாவும் விழா மேடைகளில் ரஜினியை கடுமையாக தாக்கிப் பேசி வருகிறார்.
நேற்று சென்னையில் ’காட்டு பய சார் இந்த காளி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் பெயர் குறிப்பிடாமல் ரஜினியை கடுமையாகச் சாடினார் பாரதிராஜா.
விழாவில் அவர் பேசியதாவது, “கட்- அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய சொல்லி சிலர் ரசிகர்களை முட்டாளாக்கி விட்டனர். அதை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும், கன்னியமாக படம் பார்ன்னு சொல்லியிருக்கணும், ஆனால் அப்படிச் செய்யாமல் அவனை உசுப்பி விட்டு படம் பார்க்க வைத்து முடிந்த வரை முட்டாளாக்கி வைத்து விட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் என்ன செய்வார்கள்? நடிகர்களை அரசியலுக்கு வா வா என்று தான் கூப்பிடுவான்.
காவேரி பிரச்னைக்கு அறவழியில் போராட்டம் நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை என்றால் வேறு வழியில் போராடுவோம். கடைசி மூச்சு இருக்கும் வரை தமிழ் மொழிக்கும், இனத்துக்கும், பண்பாட்டுக்கு எந்த விதத்திலும் இழுக்கு வர விட மாட்டேன்.
பாலியல் வன்கொடுமை செய்பவர்களை 1000 பேர் முன்னால் சுட்டுக் கொல்ல வேண்டும். `காட்டுப் பய காளி’ என்று வசனம் பேசியவர் தான் இன்று நாட்டையும் ஆள வேண்டும் என்கிறார். இதெல்லாம் மிகவும் கேவலமான ஒரு சூழ்நிலை. சினிமாவில் இருந்து கொண்டு நானே இதை எல்லாம் பேச வேண்டியிருக்கிறது” என்றார்.
மேற்படி பேச்சில் பாரதிராஜா யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பேசினாலும், ரஜினியைத் தான் அவர் அப்படி மறைமுகமாக பேசினார் என்று விழாவுக்கு வந்திருந்தவர்கள் குறிப்பிட்டனர்.