ஜாதிப்பெருமையை தூக்கிப் பிடிக்கிற ஆள் நானில்லை : இது சற்குணம் ஸ்டைல்!
‘யதார்த்தம்’ என்ற சொல்லுக்கே பெருமை சேர்த்த வெகுசில படங்களில் ‘களவாணி’, ‘வாகைசூடவா’ ஆகிய படங்களையும் யோசிக்காமல் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த இரண்டு படங்களிலும் மிக எளிமையாக, அதே சமயம் இயல்பான கதாபாத்திரங்களை உலவிட்ட இயக்குநர் சற்குணம் இப்போது அதார்வாவை வைத்து ‘சண்டிவீரன்’ படத்தை இயக்கியிருக்கிறார். இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் என்.எஸ்.சரவணன் வெளியிடுகிறார்.
‘பரதேசி’ அதர்வாவை இதில் ஒரு கிராமத்து இளைஞனாகவும், கயல் ஆனந்தியை ஸ்கூல் படிப்பை பாதியில் விட்ட தேவதையாகவும் வருகிறார்கள்.
‘களவாணி’ படத்துல ஒரு யதார்த்தம் இருக்கும், வாகைசூடவா படத்துல ஒரு நல்ல கருத்து இருக்கும். இந்த சண்டிவீரன் படத்துல அந்த ரெண்டுமே இருக்கும். ஊர்ல சண்டித்தனம் செஞ்சுக்கிட்டு திரியிறவங்களை யாருமே மதிக்க மாட்டாங்க. அப்படிப்பட்டவனை எப்படி வீரனா ஏத்துக்க முடியும்னு ஒரு கேள்வி எழலாம். நான் அந்த ஏரியாவுக்குள்ளேயே போகல.
பொதுவா ஜாதிப்பெருமையை தூக்கிப் பிடிக்கிற கேரக்டரை சண்டியர்னு சொல்லுவாங்க. இந்தப் படத்தோட ஹீரோ அந்த மாதிரியான கேரக்டர் இல்லை. என்னோட முந்தைய இரண்டு படங்களிலும் எந்தவித ஜாதிச் சாயலும் இருக்காது. அதேமாதிரி இந்தப் படத்திலேயும் எந்த இடத்திலும் ஒரு குறிப்பிட்ட ஜாதியை தூக்கிப்பிடிக்கிற மாதிரியான எந்த விஷயங்களும் கிடையாது. நானும் அப்படிப்பட்ட ஆளும் இல்ல. என்று சொல்லும் சற்குணம்
ஹீரோ அதர்வா சிங்கப்பூர்ல வேலை பார்த்துட்டு தன்னோட சொந்த ஊரான மன்னார்குடிக்கு வர்றார். வந்த இடத்துல ஊர் மக்கள் எல்லாரும் ஒண்ணா சேர்ந்துக்கிட்டு அவரை ஊரை விட்டே ஒதுக்கி வைக்கிறாங்க.. அது ஏன்? எதுக்கு? ஒதுக்கி வைக்கிற அளவுக்கு என்ன நடந்துச்சு?ங்கிறதைத் தான் இந்த ‘சண்டி வீரன்’ல காட்டியிருக்கேன் என்றார்.
‘களவாணி’ படத்துல ஹீரோ, ஹீரோயினைத் தாண்டி எப்படி சரண்யாவின் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டதோ? அதேபோல இந்தப் படத்திலும் பிரபல நடிகர் லால் சாரோட கேரக்டர் பெரிய அளவுல பேசப்படுமாம்.
இந்தப் படத்துக்காக லால் சாரை கமிட் பண்ணப் போனப்போ ”எனக்கு தமிழ்ப் படங்கள்ல நடிக்கவே பிடிக்க மாட்டேங்குது. எல்லாருமே என் வயசுக்கு மீறி சண்டைப் போடுற மாதிரி வில்லன் கேரக்டர்கள்லேயே நடிக்கக் கூப்பிடுறாங்க. ஒரு லெவலுக்கு மேல அதையெல்லாம் செய்ய முடியாதுங்கிறதுனால நான் அவங்களை திருப்பி அனுப்பிடுவேன்.
ஆனா இந்தக் கதையில அந்த மாதிரியான சங்கடங்கள் எல்லாம் இல்லை. அதுக்காகவே நான் நடிக்கிறேன்னு ஒப்புக்கிட்டார் என்றார் இயக்குநர் சற்குணம்.