“ஒரு நல்ல படம் தனக்கான விஷயங்களை தானே எடுத்துக் கொள்ளும்” : சொல்கிறார் இயக்குநர் தனுஷ்!

நடிகர் தனுஷ் இயக்குநராகி விட்டார். அதுவும் மாஸ் ஹீரோக்களின் பின்னால் போகாமல் தனது அப்பா கஸ்தூரிராஜாவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய ராஜ்கிரணை ஹீரோவாக வைத்து ப.பாண்டி படத்தை இயக்கியிருக்கிறார்,
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தனுஷ் ஒரு இயக்குனருக்கான அத்தனை விஷயங்களையும் பேசினார். அதைவிட அவர் பேசிய விதம் தான் நிறையவே பக்குவப்பட்டிருக்கிறார் என்பதை வெளிக்காட்டியது.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது “உலகத்தில் நம் வாழ்க்கையில் அன்பு, நிம்மதி, பாசம், கோபம் என்ற பல விஷயங்கள் நம்மைச் சுற்றி உள்ளன. இதில் பாஸிட்டிவ் விஷயங்கள் அதாவது நன்மையான விஷயங்களை மட்டுமே எடுத்து கொள்வது தான் இந்த ப.பாண்டி திரைப்படம்.
இயக்குனர் பாலுமகேந்திரா எப்போதும் கூறும் விஷயம், ஒரு படம் தனக்கு தேவையான விஷயங்களை தானே எடுத்துக் கொள்ளும். அப்படி எடுத்துக் கொள்ளாத படம் தான் தோல்வியை சந்திக்கின்றன. அந்த வகையில் ப.பாண்டி தனக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் அதுவாகவே தேடிக் கொண்டது.
இவ்வாறாகவே இப்படத்தின் பவர் பாண்டியும் (ராஜ்கிரண்) எங்களுக்கு கிடைத்தார்”.
மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் பற்றி தனுஷ் கூறும்போது, “இப்படத்தின் ஆன்மா ஷான் ரோல்டனின் இசைதான், எனது எண்ணமும் அவரது எண்ணமும் ஒரே திசையில் பயணித்ததே இப்படத்தின் இசை வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம்”. என்றார்.