சிம்புவுக்கு நடிப்பு போரடித்து விட்டது! : சந்தி சிரிக்க வைத்த பாண்டிராஜ்!
நானே ஒரு படத்தை 200 நாட்கள் வரை எடுத்திருக்கிறேன். இந்த ‘தூங்காவனம்’ திரைப்படத்தை வெறும் 60 நாட்களில் எடுத்து முடித்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ். என்றபடியே பேச ஆரம்பித்தார் உலகநாயகன் கமல்ஹாசன்.
இடம் ‘தூங்காவனம்’ ஆடியோ ரிலீஸ்…
இந்தப்படம் தமிழ், தெலுங்கு இரண்டுக்கும் தனித்தனியாகத்தான் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருந்தது. ஒரு கார் போகும் காட்சியாக இருந்தாலும் நம்பர் ப்ளேட்டை மாற்றியாக வேண்டும். கடைசியில் வந்து சேர்கிற போலீஸ் காட்சிகளாக இருந்தாலும் தெலுங்கானா போலீசுக்காக உடைகளை மாற்றியாக வேண்டும்.
அந்த வகையில் இந்தப்படத்தை தமிழ், தெலுங்கு என தலா 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம்.
இப்போதையை காலகட்டத்தில் குறைந்த நாட்களில் படமெடுப்பதெல்லாம் கஷ்டம் என்கிறார்கள் சிலர். அப்படியில்லை திட்டமிட்டு படமெடுத்தால் கண்டிப்பாக குறைந்த நாட்களில் படமெடுக்க முடியும்.
நான் விஸ்வரூபம் படத்துக்கு எடுத்துக்கொண்ட நாட்களை விட இந்தப்படத்துக்கு குறைவான நாட்களே ஆகியிருக்கிறது. அப்படியிருந்தும் அந்தப்படத்துக்கு நிகரான தொழில்நுட்பங்களை இதில் பார்க்க முடிகிறது.
அதனால் தான் சொல்கிறேன். திட்டமிட்டு படமெடுத்தால் இது சாத்தியப்படும் என்றார் கமல்.
அடுத்து இயக்குநர் பாண்டிராஜ் பேச வந்தார்… “ கமல் சார் புதிய இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றுவது எங்களைப் போன்ற இயக்குநர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது. எங்களைப் போன்ற இயக்குநர்களுக்கும் அவர் வாய்ப்பு தர வேண்டும். அவருடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எப்போதுமே தயாராக இருக்கிறோம் என்றவர் அடுத்து பேசியது தான் ஹைலைட்.
“நான் ‘இது நம்ம ஆளு’ ஷூட்டிங்கில் இருந்த போது வழக்கம் போல சிம்பு படப்பிடிப்புக்கு லேட்டாக வந்தார். என்ன ஜி இப்படிப் பண்றீங்க… என்று அவரிடம் கேட்டேன்.
இல்லை ஜி நான் சின்ன வயசுல இருந்தே நடிக்கிறதுனால எனக்கு நடிப்பு போரடிக்குதுன்னு சொன்னார். அதற்கு நான் அவரிடம் கமல் சார் இத்தனை வருஷமா நடிச்சுக்கிட்டு இருக்கார். அவரை விடவா நீங்க பிரமாதமா நடிச்சிட்டீங்கன்னு கேட்டேன்.
அதுக்கு சிம்பு கமல் சாரோட என்னை ஒப்பிட்டுப் பேசாதீங்க அவர் வாலி மாதிரி… அவரை மாதிரியெல்லாம் நடிக்கிறது ரொம்பக் கஷ்டம் என்றாராம் சிம்பு.
பாண்டிராஜின் இந்த பேச்சைக் கேட்டதும் வந்திருந்த ரசிகர்கள் கூட்டம் விசிலத்து கை தட்ட அரங்கமே அதிர்ந்தது.
முத்தாய்ப்பாக தியேட்டரின் எல்லோருடைய தலைக்கும் மேலே பறந்து கொண்டிருந்த ஹெலிகேம் பறந்தபடியே படமெடுத்தது வந்திருந்த எல்லோரையும் ஈர்த்தது.