புத்தம் புதிய பாடலை வெளியிட்டு ரஜினியின் பிறந்த நாளை கொண்டாடிய மதன் கார்க்கி!
டிசம்பர் 12 – தமிழ் திரையுலகிலும் சரி, தமிழக ரசிகர்கள் மத்தியிலும் சரி, யாராலும் மறக்க முடியாத நாளாக திகழ்கின்றது.
அதற்கு காரணம், டிசம்பர் 12 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் என்பது தான். அவருடைய பிறந்த நாளில், அவருக்காக ஒரு புத்தம் புதிய பாடலை தயாரித்து, அதை கடந்த 12 ஆம் தேதி அன்று வெளியிட்டு இருக்கிறது ‘டூப்பாடூ’ இசைத்தளம்.
கௌந்தேயா மற்றும் மதன் கார்க்கி இணைந்து ஆரம்பித்து இருக்கும் ‘டூப்பாடூ’ இசைத்தளத்தில் மதன் கார்க்கியின் வரிகளில், சேகர் சாய் பரத்தின் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடலை பாடியிருக்கிறார் சூப்பர் சிங்கர் புகழ் திவாகர். இந்த பாடல் பிரத்தியேகமாக ரசிகர்களுக்காக டூப்பாடூ இசைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
“நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ரஜினி இருக்கின்றார். ஏதாவது ஒரு தருணத்திலோ, அல்லது நாம் செய்யும் செயல்களிலோ அது வெளிப்படும். ரஜினி சார் ஒரு நடிகரும் மட்டும் கிடையாது. ‘ஸ்டைல்’ என்ற வார்த்தைக்கு அகராதியாக திகழ்பவர் அவர் தான். அவரை கொண்டாடும் விதத்தில் இந்த பாடல் இருக்கும்.
1990 களில் இசையமைப்பாளர் தேவா ரஜினி சாரின் படங்களுக்கு இசையமைத்த பாடல்களின் பாணியில் நாங்கள் இந்த பாடலை உருவாக்கி இருக்கிறோம். அவர் இசையமைத்த ‘நா ஆட்டோக்காரன்’ (பாட்ஷா), ‘வந்தேன்டா பால்காரன்’ (அண்ணாமலை) மற்றும் ‘அதாண்டா இதாண்டா’ (அருணாச்சலம்) ஆகிய பாடல்கள் யாவும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற பாடல்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளன்று இந்த பாடலை நாங்கள் அவருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறோம்.” என்று கூறுகிறார் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரும், டூப்பாடூ நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவருமான கௌந்தேயா.