டோரா – விமர்சனம்
RATING 3/5
பழி வாங்கும் வெறியோடு இருக்கும் ஒரு காருக்கும், நயன்தாராவுக்கும் என்ன பந்தம்? என்பதை த்ரில்லராக சொல்லும் படம் தான் இந்த ”டோரா.”
தன்னையும் தன் அப்பா தம்பி ராமையாவையும் அவமானப்படுத்தும் அத்தைக்கு போட்டியாக கால் டாக்ஸி நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கிறார் நயன்தாரா.
அதற்காக வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்து வருமானத்தை பெருக்க நினைத்து பழைய காலத்து மாடல் கார் ஒன்றை விலைக்கு வாங்குகிறார்.
அடுத்தடுத்து அமானுஷ்ய சம்பவங்களை அரங்கேற்றும் அந்தக் காரால் கொலைப்பழி ஒன்றில் சிக்குகிறார் நயன்தாரா.
அந்தக் கொலையை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியான ஹரீஸ் உத்தமன் கொலைக்கான சரியான ஆதாரங்கள் கிடைக்காமல் கை பிசைந்து கொண்டிருக்க, அதே கார் இன்னும் சிலரை கொலை செய்யும் வெறியோடு கிளம்புகிறது.
காரின் அந்தக் கொலை வெறிக்கு யாரெல்லாம் காரணம்? அந்த காருக்கும் நயனுக்கும் என்ன சம்பந்தம்? தன் மீது விழும் கொலைப்பழியிலிருந்து அவர் எப்படி வெளியே வருகிறார்? என்பதே கிளைமாக்ஸ்.
ஹாரர், திகில் படங்கள் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்கிற வழக்கமான கதையாக இல்லாமல் குடும்பத்தோடு குழந்தைகளும் சேர்ந்து ரசிக்கக் கூடிய வகையில் காரை ஒரு மெயின் கேரக்டராக்கி விறுவிறுப்பான படமாகத் தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் தாஸ் ராமசாமி.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நயன்தாரா இதிலும் நம்மை ஏமாற்றவில்லை.
கேரக்டருக்கேற்ற நடிப்பை மிச்சம் வைக்காமல் கொட்டி அசத்துகிறார் நயன். அதிலும் போலீஸ் ஸ்டேஷனில் ஹரீஸ் உத்தமனிடம் அந்நியன் விக்ரம் ஸ்டைலில் டக் டக்கென்று முகத்தில் எக்ஸ்பிரஷன்களை மாற்றிக் காட்டும் போது தியேட்டரில் கை தட்டல்களையும், விசில் சத்தங்களையும் அள்ளுகிறது.
முதல் பாதியில் தம்பி ராமையாவின் வளவளா… கொளகொளா.. பேச்சு கொஞ்சம் போர் தட்டினாலும் இடைவேளைக்குப் பிறகு அந்தக் குறையைச் சரி செய்து விடுகிறார் தனது மேம்பட்ட நடிப்பால்!
வில்லனாக வரும் சுனில் குமார், ஆதாரத்துக்காக அலையோ அலையென்று அலையும் போலீஸ் அதிகாரி ஹரீஸ் உத்தமன் உள்ளிட்ட படத்தில் வருகிற மற்ற கேரக்டர்கள் எல்லாமே இம்சையில்லாத அளவான நடிப்பு.
தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் கொள்ளை அழகில் ஜொலிக்கிற நயனுக்கு திருஷ்டி தான் சுத்திப் போட வேண்டும். அந்த அழகுக்கு அழகு சேர்த்திருக்கிற காஸ்ட்யூம் டிசைனருக்கும் ஒரு பொக்கே!
விவேக் – மெர்லின் இரட்டை இசையமைப்பாளர்களின் பின்னணி இசை ஒரு ஹாரர் படத்துக்குரிய மெட்டீரியலாக மிரட்டுகிறது.
கால் டாக்ஸி வைப்பதற்காக ஒரே ஒரு காரை அதுவும் பழைய மாடல் காரை யாராவது வாங்குவார்களா? அந்த அமானுஷ்ய கார் நயன்தாராவிடம் வந்து சேர வேண்டும் என்பதற்காக நயன் தாரா கால்டாக்ஸி நிறுவனம் தான் ஆரம்பிக்க வேண்டுமா? இப்படி மிக எளிதாக எழும் லாஜிக் கேள்விகள் படத்தைப் பார்க்கும் நமக்குள் வராமல் இல்லை.
காரைக் காட்டுகிற போதெல்லாம் அதன் நிழலில் பிரம்மாண்ட நாய் உள்ளிட்ட கிராபிக்ஸ் காட்சிகள் படத்துக்கு மிகப்பெரிய பலம்.
நயன்தாராவின் பெயர் தான் டோரா என்று நினைத்து படத்துக்குப் போனால் உங்களுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கும், ஆனால் முழுப்படத்தையும் பார்த்து விட்டு வருகிற போது ஒரு வித்தியாசமான ஹாரர் படத்தை பார்த்த திருப்தி கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
டோரா – சுட்டீஸ் ஸ்பெஷல்!