டங்கி- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

வறுமையின் பொருட்டு சட்டத்திற்கு புறம்பாக நாடு விட்டு நாடு செல்லும் நாயகி நாயகனின் கதை

ஹீரோ ஷாருக்கானின் எண்ணம் எப்படியாகிலும் டாப்ஸி குடும்பத்திற்கு உதவவேண்டும் என்பது. அதனால் தன் வறுமை ஜெயிக்க டாப்ஸி லண்டன் செல்ல முடிவெடுக்கும் போது ஷாருக்கான் உடன் நிற்கிறார். லீகலாக லண்டன் செல்ல வழியில்லாததால் இல்லீகலாகச் செல்கிறார்கள்..அவர்கள் பயணத்தின் முடிவு என்ன? என்பது படத்தின் மீதித்திரைக்கதையாக விரிகிறது

ஷாருக்கானின் பெருந்தன்மை டைட்டிலிலே வெளிப்படுகிறது. படத்தின் பெயர் லிஸ்டில் முதலில் டாப்ஸி பெயர் தான் வருகிறது. கதாநாயகனாக அவரிருந்தாலும் கதை முழுதும் டாப்ஸி மீதே பயணிக்கிறது. இதுவொரு நல்ல முன்னுதாரணம். நடிப்பைப் பொறுத்தவரை டாப்ஸி, ஷாருக்கன் இருவருக்கும் பெரும் போட்டியே நடந்துள்ளது. விட்டுக்கொடுக்காத நடிப்பால் இருவருமே திரை நிறைக்கிறார்கள். சப்போர்டிங் கேரக்டர்களான விக்கி கெளஷல், பொம்மன் இரானி இருவரும் நல்ல தேர்வு

அமன் பந்த் இசை படத்தின் உணர்வுக்கும் படம் பேசும் அரசியலுக்கும் 100% நியாயம் சேர்த்துள்ளது. நல்ல பின்னணி இசை. ஒளிப்பதிவாளர்கள் நான்குபேர். சி.கே முரளிதரன், மனுஷ்நந்தன், அமித்ராய், குமார் பங்கஜ். நால்வரும் டங்கியை விஷுவல் மூலமாக அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியுள்ளனர்.

ஒரு மெலிதான கதை தான்..ஆனால் தன் வலிமையான திரைக்கதையால் அதை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தியுள்ளார் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி. மெல்லிய உணர்வுகளின் வழியே பெரும் வலிகளையும் அரசியலையும் பேசும் ஹிரானியின் திரைமொழி இந்த டங்கியிலும் வொர்க்கவுட் ஆகியுள்ளது. ஆனால் அது முழுமையை எட்டியுள்ளதா? என்பதற்கான பதில் இல்லை என்பதே. டாப்ஸி லண்டன் செல்வதற்கான காரணம் படத்தில் வீரியமாகச் சொல்லப்படவில்லை. லாஜிக் கேள்விகளும் படத்தில் கிலோ கணக்கில் இருக்கின்றன. டாப்ஸி ஷாருக் கூட்டணியின் எமோஷ்னல் காதல் காட்சிகளின் வழியே படத்தின் குறைகள் எல்லாம் மறந்துவிடுகிறது. அதனால் சில சமரசங்களோடு டங்கியில் பயணிக்கலாம்
3/5