எங்க காட்டுல மழை – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

RATING – 2/5

நடித்தவர்கள் – மிதுன் மகேஷ்வரன், ஸ்ருதி ராமகிருஷ்ணன், அப்புகுட்டி, அருள்தாஸ் மற்றும் பலர்

இசை – ஸ்ரீ விஜய்

ஒளிப்பதிவு – ஏ.ஆர்.சூர்யா

இயக்கம் – ஸ்ரீ பாலாஜி

வகை – ரொமான்ஸ் – காமெடி

சென்சார் பரிந்துரை – ‘U’

கால அளவு – 2 மணி நேரம் 3 நிமிடங்கள்

‘குள்ளநரி கூட்டம்’ படத்தை இயக்கிய ஸ்ரீ பாலாஜி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் தான் இந்த ‘எங்க காட்டுல மழை’.

வேலை வெட்டி இல்லாமல் மதுரையில் ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் ஹீரோ மிதுன் தனது நண்பன் அப்புக்குட்டியைத் தேடி சென்னை வருகிறார்.

வந்த இடத்தில் ஹீரோயின் ஸ்ருதி ராமகிருஷ்ணன் கண்ணில் பட, அவரோடு லவ் பிக்கப் ஆகிறது.

ஒருநாள் மிதுன் வளர்க்கும் நாய் வில்லனான அருள்தாஸ் ஜீப்பில் உச்சா போய் விடுகிறது. இதனால் கடுப்பாகும் அவர் நாயை எட்டி உதைக்கிறார்.

Related Posts
1 of 43

அதைப்பார்த்து கோபப்படும் ஹீரோ மிதுன் அருள்தாஸ் ஜீப்பில் வைத்திருக்கும் பை ஒன்றை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆகி விடுகிறார்.

பையை நண்பன் அப்புக்குட்டியுடன் சேர்ந்து திறந்து பார்க்கும் மிதுன் பை முழுவதும் அமெரிக்க டாலர்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்.

உடனே தங்கள் தேவைக்கான அமெரிக்க டாலர்களை எடுத்துக் கொண்டு அதை இந்திய ரூபாயாக மாற்றிக்கொண்டு வாழ்க்கையில் செட்டிலாக முடிவு செய்கிறார்கள்.

இன்னொரு புறம் போலீசிடம் பறிகொடுத்த பணப்பையை மார்வாடியும், மிதுனிடம் பறிகொடுத்த பணப்பையை போலீசும் தெடுகிறது.

டாலர் பை யார் கைக்கு கிடைத்தது? மிதுன் – ஸ்ருதி ராமகிருஷ்ணன் காதல் என்னவானது? என்பதே மீதிக்கதை.

ஹீரோவாக வரும் மிதுன் முகத்தில் தெரிகிற கொழுக் மொழுக் அடையாளத்தால் அவர் மெனக்கிட்டு வெளிப்படுத்தும் எக்ஸ்பிரஷன்கள் எங்கே என்று தேட வைத்து விடுகிறது. சில இடங்களில் சரி பரவாயில்லை என்று சொல்ல வைக்கிறார்.

ஸ்ருதி ராமகிருஷ்ணன் பார்க்க வாட்ட சாட்டமாக நல்ல உயரத்தோடு காட்சி தருகிறார். ஆனால் கேரக்டர் தான் ஆயிரத்து சொச்சம் படங்களில் பார்த்து சலித்தே அதே முக்கியத்துவம் இல்லாத ஹீரோவை லவ் செய்கிற வழக்கமான கேரக்டர்.

அப்புக்குட்டியெல்லாம் அப்டேட் இல்லாத காமெடியனாகி விட்டாரோ என்று தான் சொல்லத் தோன்றுகிறது. இன்னும் எத்தனை படத்தில் தான் தன்னை விட பல வயது குறைந்த ஹீரோக்களை மாப்ளே… என்று சொல்லிக் கொண்டு வருவாரோ தெரியவில்லை. சில இடங்களில் காமெடியில் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்.

பல படங்களில் போலீசாகவும், வில்லனாகவும் வரும் அருள்தாஸ் இந்தப் படத்திலும் அதே டைப் கேரக்டர் தான். இருந்தாலும் கொடுத்த கேரக்டரில் நிறைவான நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார்.

ஏ.ஆர்.சூர்யாவின் ஒளிப்பதிவு, ஸ்ரீ விஜயின் இசையிலும் பெரிதாக மெனக்கிடல் இல்லை.

நாய் உச்சா போன விஷயத்தின் திரைக்கதையின் திருப்புமுனையாக காட்டுவதெல்லாம் எந்த மாதிரியான வித்தியாசம் என்பது டைரக்டருக்கே வெளிச்சம்.

அறுதப்பழசான கதை, பல படங்களில் பார்த்து சலித்த காட்சிகள், அப்பட்டமாகத் தெரியும் லாஜிக் மீறல்களையெல்லாம் பார்க்கும்போது இது ‘குள்ளநரி கூட்டம்’ படத்தைக் கொடுத்த புத்திசாலி டைரக்டரின் படம் தானா? என்கிற சந்தேகத்தை வலுவாகக் கிளப்பியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ பாலாஜி!