பைட் கிளப்- விமர்சனம்

குடி, கஞ்சா,சண்டை என வட சென்னையில் சுடப்பட்ட மற்றொரு கமர்சியல் வடை இந்த பைட் கிளப்
பெஞ்சமின் தன் ஏரியாவில் இருக்கும் பசங்களை நல் வழிப்படுத்த நினைப்பவன். ஸ்போர்ட்ஸில் சாதிக்க முயன்று தோற்றுப்போன அவன் திறமையுள்ளவர்களுக்கு ஏணியாக இருக்கிறான். அவன் இருக்கும் வரை கஞ்சா விற்க முடியாதென உணர்ந்த பெஞ்சமினின் தம்பியும், கிருபா எனும் லோக்கல் ரவுடியும் திட்டம் தீட்டி பெஞ்சமினை ஒழிக்கிறார்கள். பெஞ்சமினால் பலன் அடைய இருந்த ஹீரோ விஜயகுமார் சின்ன வயதிலே இதனால் பாதிப்படைகிறான். அந்த உண்மை அவனுக்கு தெரியவரும் போது படத்தின் க்ளைமாக்ஸும் வந்துவிடுகிறது
விஜயகுமாருக்கு இது மூன்றாவது படம்..அதற்கான மெச்சூட் நடிப்பு அவருக்கு இருக்கிறது. திரையில் பல இடங்களில் அதை உணர முடிகிறது. இருந்தாலும் எந்நேரமும் கஞ்சாவும் ரத்தமுமாய் திரிவது சில இடங்களில் ஓவர் டோஸ். ஹீரோயின் மருந்துக்கு மட்டுமல்ல..மறந்தும் பயன்படுத்தப்படவில்லை. பெஞ்சமின், ஜோசப், கிருபா ஆகிய கேரக்டர்கள் தரமாக அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் நடிப்பும் சிறப்பு
ஒளிப்பதிவாளர் சின்ன காட்சியை கூட தன் கேமராவில் மிகைப்படுத்தி படத்திற்கு கனம் சேர்க்கிறார். இசை அமைப்பாளர் ஜான் ரோல்டனும் தன் ரோல் உணர்ந்து உழைத்துள்ளார். எடிட்டருக்கு தனி பாராட்டுக்கள்.
ஒரு படத்தை தரத்தை வெறும் தொழில் நுட்பத்தை வைத்து கணக்கிடக்கூடாது. படத்தின் உயிர் திரைக்கதையில் உள்ளது. அதை ஏகத்திற்கும் சொதப்பி வைத்துள்ளனர். குறிப்பாக வட சென்னை இளைஞர்களை இப்படி மூர்க்கத்தனமாக காட்டும் பொதுப்புத்தியை சினிமா இயக்குநர்கள் நிச்சயமாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஏன் வடசென்னைக்கு மட்டும் இப்படியொரு அடையாளத்தை நிறுவிக்கொண்டே இருக்கிறார்கள். தொழில் நுட்பத்தில் மாஸாக பைட் செய்தவர்கள், திரைக்கதையிலும், சமூக அக்கறையிலும் இன்னும் உழைப்பை காட்டியிருக்கலாம்
2.5/5