கிருஷ்ணாவிடம் கிறங்கிய ‘கிரகணம்’ நாயகி!
பல பெரிய படங்களை தயாரித்து வரும் பி வி பி சினிமா நிறுவனம் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற கூற்றுக்கு இணங்க முற்றிலும் இளம் கூட்டணியில் உருவாகும் ‘கிரகணம்’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது.
கிருஷ்ணா, ‘கயல்’ சந்திரன், புதுமுக கதாநாயகி நந்தினி, கருணாகரன் நடிப்பில் அறிமுக இயக்குனர் இளன் இயக்கும் திரைப்படம் ‘கிரகணம்’. தனது கதையம்சத்தால் அனைவரையும் கவர தயாராகி வருகிறது இந்த த்ரில்லர் திரைப்படம். பி.வி.பி சினிமா மற்றும் ஷோபன் பாபு, கார்த்திக் ஆகியோரது பிக் பிரின்ட் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.
கதாநாயகி கதாபாத்திரத்தின் மேன்மையையும், தன்மையையும் ஒரு சேர நடிப்பில் வெளிபடுத்தக் கூடிய ஒரு நடிகையை தேடும்போது தயாரிப்பாளர்களுக்கு கிடைத்தவர்தான் கதாநாயகி நந்தினி.
பி.வி.பி சினிமா மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் நிறுவனத்தின் மூலம் அறிமுகமாவதின் பூரிப்பில் இருக்கும் கதாநாயகி நந்தினி, ‘கிரகணம்’ படத்தில் தனது அனுபவத்தை பற்றிக் கூறுகிறார்.
“2010ஆம் ஆண்டு ‘மிஸ் ஆந்திர பிரதேஷ்’ வென்ற பிறகு பல விளம்பர படங்களில் நடித்து வந்தேன். பின்னர், தெலுங்கில்‘மாயா’ மற்றும் கன்னடத்தில் ‘குஷிகுஷியாகி’ ஆகிய படங்களில் நடித்துள்ளேன். ஆடிஷன் மூலம் ‘கிரகணம்’ படத்தில் தேர்வானேன் தொடர்ந்து தீவிர நடிப்பு வகுப்புகள், வசன பயிற்சி, மற்றும் ஒத்திகைகள் மேற்கொண்டோம். இந்த எனக்கு முற்றிலும் புதிதாய் அமைந்தது.” என்றார் நந்தினி.
“கிரகணம் படத்தில், தன் கனவுகளுக்கான தேடலில் குறிப்பாய் இருக்கும் ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். பல்வேறு விதமான குணாதிசயங்களை வெளிபடுத்தக் கூடியது இந்த கதாபாத்திரம். இயக்குனர் இளன் படத்தில் இருக்கும் இரு கதாநாயகர்களுக்கு இணையாக ஸ்வேதா கதாபாத்திரத்தை வடித்திருக்கிறார். படப்பிடிப்பை மிகவும் தெளிவாக திட்டமிட்டு நடத்தக் கூடிய இயக்குனர். இளம் வயதில் பல படங்களை இயக்கிய பக்குவத்தை கொண்டுள்ளார் இயக்குனர் இளன்.”
நாயகன் கிருஷ்ணா இடைவிடாத இரவு படப்பிடிப்பில் கூட தன் பேச்சால் மொத்த குழுவையும் கலகலப்பாய் வைத்துக் கொள்வார்.அதனாலோ என்னவோ அயர்வே இல்லாமல் எங்களால் பணிபுரிய முடிந்தது. எல்லோரையும் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்து இருக்க வேண்டும் என்பது அவர் கொள்கை போல. சந்திரன் பெயருக்கேற்ற அமைதியானவர், பழகுவதற்கு இனிமையானவர். பெரிய கார்பரேட் நிறுவனமான பி.வி.பி சினிமா தயாரிக்கும் இப்படத்தில் இவ்வளவு பெரிய கதாப்பாத்திரத்தில் அறிமுகமாவது எனது அதிர்ஷ்டம்.
‘கிரகணம்’ உங்களுக்கும் பிடிக்கும் விரைவில் என விடை பெற்றார் ஒளிரும் நம்பிக்கையுடன் நந்தினி.