எல்லாமே மாஸ் படங்கள்! : பிஸியான வில்லன் ஹரிஸ் உத்தமன்

Get real time updates directly on you device, subscribe now.

harish

முத்திரக்கனியின் உதவியாளர் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கிய ”தா” படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் ஹரிஷ் உத்தமன்.

விமர்சகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற அந்தத் திரைப்படம் மழை வெள்ளத்தில் சிக்கிய சென்னையைப் போல, தொடர்ந்து வந்த மூன்று மழை நாட்களில் தியேட்டரில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்காமல் போய் விட்டது.

இன்னொரு முறை ரிலீஸ் செய்தாலும் ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்கிற அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் நாயகன் ஹரிஷ் உத்தமன்.

அந்தப்படத்துக்குப் பிறகு சுசீந்திரன் இயக்கிய ‘பாண்டியநாடு’ படத்தில் கவனம் ஈர்த்தவர் அதன்பிறகு மீகாமன், தனி ஒருவன், பாயும் புலி, வில் அம்பு ஆகிய படங்களில் விதவிதமாக கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் சென்ற ஆண்டு ரிலீசான மகேஷ்பாபுவின் ‘ஸ்ரீமந்துடு’ படத்தில் வில்லனாக அசத்தி அங்கும் பேசப்பட்டார்.

இப்படி கைவசம் அடுத்தடுத்த படங்களை வைத்துக் கொண்டு இன்றுவரை பிஸியாக இருக்கும் அவர் இப்போதும் தனுஷ் நடிப்பில் ‘தொடரி’ விஜய்சேதுபதி நடிக்கும் ‘றெக்க, நயன்தாரா நடிக்கும் ‘டோரா’, விஜய் நடிக்கும் ‘பைரவா’ என கையில் அரை டஜன் படங்களை வைத்திருக்கிறார்.

Related Posts
1 of 5

நடிக்கின்ற பெரும்பாலான படங்களில் வில்லன் வேஷம் கட்டினாலும் நிஜத்தில் அதற்கு நேர்மாறாக அமைதியே உருவாக காட்சியளிக்கிறார் மனுஷன்.

கோவை – கேரளா பார்டர்ல இருக்கிற வாளையாறுங்கிற வில்லேஜ்ல தான் நான் பிறந்து வளர்ந்தேன். என்னோட ஹை ஸ்கூலிங் வயசு வரைக்கும் அங்க தான் எல்லாமே. கேபிள் டிவி கூட இல்லாத கிராமம்னு சொன்னா பொருத்தமா இருக்கும். அப்படி ஒரு கிராமத்துல இருந்து வந்த நான் இன்னைக்கு சினிமாவுல நடிப்பேன்னு நெனைச்சுக் கூட பார்க்கல.

அப்புறம் தான் கோயம்புத்தூர்ல காலேஜ் படிச்சேன். அதுக்கப்புறம் எம்.பி.ஏ படிப்பை முடிச்ச டைம்ல பிரிட்டீஷ் ஏர்வேஸ்ல கேபின் க்ரூவ்ல வேலைக்கு சேர்ந்தேன். அங்க அஞ்சு வருஷம் வேலை செஞ்சேன். அப்பவே எனக்கு மாடலிங் பண்ணனும்னு ஆசை இருந்துச்சு.

அப்பத்தான் தா படத்தோட டைரக்டர் ரமேஷ் மூலமா எனக்கு அந்தப்படத்துல ஹீரோவா நடிக்க வாய்ப்பு கெடைச்சது. தா என்னோட முதல் படம்னாலும் ‘பாண்டிய நாடு’ படத்திற்குப் பிறகு தான் ரசிகர்களுக்கு என்னை தெரிய ஆரம்பிச்சது என்று சொல்லும் ஹரிஷுக்கு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பது மட்டும் ஆசை இல்லையாம்.

ஆமாங்க ஹீரோவா நடிக்கணும்னு நான் என்னைக்கும் ஆசைப்பட்டதில்லை. மூன்று ஹீரோக்கள்ல ஒருவரா கூட சேர்ந்து நடிக்கத் தயாரா இருக்கேன். இல்லேன்னா பேசப்படக்கூடிய கேரக்டர்கள், வித்தியாசமான வில்லன் கேரக்டர்னு நடிச்சுக்கிட்டே இருக்கணும் என்கிறார் ஹரிஷ் உத்தமன்.