தனுஷுக்குப் புடிச்ச விளையாட்டு ‘கால்பந்து’ தான், ஆனா..?

கிரிக்கெட்டே பைத்தியமாகத் திரியும் இந்திய ரசிகர்களுக்கு அதைவிட சவாலான கால்பந்து விளையாட்டை புகுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகியிருக்கிறது.
உலகத்திலேயே நாட்டாமை செய்யும் அமெரிக்கா கூட கிரிக்கெட்டை சீண்டுவதில்லை. அதனால் தானே என்னவோ அவர்களால் உலகம் முழுக்க அதிகாரம் செலுத்த முடிகிறது.
இந்திய ரசிகர்களை கிரிக்கெட்டைத் தாண்டி கால்பந்து விளையாட்டிலும் கவனத்தை திசை திருப்பும் விதமாக இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் வருகிற 3-ந் தேதி முதல் டிசம்பர் 20-ந் தேதி வரை நடக்கவிருக்கிறது.
இந்த கால்பந்து சீசனுக்கான பிராண்ட் அம்பாசிடராக இந்தியா முழுவதும் பிரபலமான நம்மூர் தனுஷைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறது கால்பந்து விளையாட்டின் தலைமை.
கால்பந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று ஆட்டத்தை ரசிகர்களிடையே பிரபலப்படுத்தும் வேலைகளை மும்முரமாகச் செய்வார். அதற்காகவே தனுஷை நியமித்தவர்கள் கால்பந்தைத் தவிர வேறு எந்த விளையாட்டைப் பற்றியும் வாய் திறக்கக்கூடாது என்கிற கண்டிஷனோடு தான் களமிறக்கியிருக்கிறார்கள்.
இது சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் தனுஷ்.
”எனக்கு கால்பந்து விளையாட்டு மேல ரொம்ப ஈடுபாடு உண்டு. சின்ன வயசுல ‘ஸ்ட்ரீட்’ புட்பால் விளையாடியிருக்கேன். அந்த அனுபவம் மட்டும் தான் எனக்கு உண்டு. நம்ம நாடு கிரிக்கெட்டை முக்கிய விளையாட்டா முன்னிலைப்படுத்துகிற நாடு. ஆனால் இப்போது கால்பந்து விளையாட்டின் மீதும் விளையாட்டு ரசிகர்களின் பார்வை பட ஆரம்பித்திருக்கிறது.
90 நிமிடங்கள் விறுவிறுப்பாக அரங்கேறும் கால்பந்து ஆட்டம் கிரிகெட்டை விட அதிகமா உழைக்க வேண்டிய விளையாட்டு. கிரிக்கெட்டில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே ஓய்வு கிடைக்கும். ஆனால் கால்பந்து விளையாட்டில் அப்படி ஓய்வு கிடைக்காது. இந்த சீசன் கடந்த ஆண்டை விட விறுவிறுப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த ஆண்டில் நிறைய திறமையான புதிய வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். என்று சொல்ல தனுஷுடம் உங்களுக்குப் பிடித்த இந்திய கால்பந்து வீரர் யார் என்கிற கேள்வி கேட்கப்பட்டது.
தெரியலீங்க… என்றார் சிரித்துக் கொண்டே…
சோப்பு விளம்பரத்துக்கு அந்த சோப்பையே யூஸ் பண்றவரா இருக்கணுமா என்ன..?