இப்படை வெல்லும் – விமர்சனம்
RATING 2/5
நட்சத்திரங்கள் – உதயநிதி ஸ்டாலின், மஞ்சுமா மோகன், சூரி, டேனியல் பாலாஜி, ராதிகா சரத்குமார், ஆர்.கே. சுரேஷ்
இயக்கம் – கெளரவ் நாராயணன்
வகை – ஆக்ஷன் – டிராமா
சென்சார் சர்ட்டிபிகேட் – ‘U/A’
கால அளவு – 2 மணி நேரம் 19 நிமிடங்கள்
‘இப்படை வெல்லும்’ என்கிற டைட்டிலைப் பார்த்ததும் இதோ ஏதோ புரட்சியைப் பேசுகிற படமாக இருக்கும் என்று நினைத்து விட வேண்டாம்.
ஹீரோ உதயநிதியின் 1500 கிராம் எடையுள்ள ஒரே ஒரு மூளையை மட்டுமே நம்பி தீவிரவாதியை பிடிக்க கிளம்புகிற காவல்துறை கூட்டம் ஓன்றுக்கு அதில் வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பதை சொல்லும் படம் தான் இந்த ‘இப்படை வெல்லும்.’
உத்தரபிரதேசம் ஜெயிலில் இருக்கும் தீவிரவாத கூட்டத்தைச் சேர்ந்த டேனியல் பாலாஜி அங்கிருந்து தப்பித்து ஹைதராபாத் செல்கிறார். அங்கு மக்கள் அதிகம் கூடும் சில இடங்களில் குண்டுகளை வைத்து விட்டு, அடுத்து சென்னையில் குண்டு வைக்க கிளம்புகிறார்.
போகிற வழியில் டப்பிங் கலைஞரான சூரியிடம் டூவீலரின் லிப்ட் கேட்டு ஏறுகிறார். சிறிது தூரம் சென்றதும் வழியில் போலீஸ் சோதனை செய்து கொண்டிருக்க, அங்கிருந்து தப்பித்து அடுத்து அதே சாலையில் காரில் வரும் உதயநிதி ஸ்டாலினிடம் லிப்ட் கேட்கிறார்.
திடீரென்று முன்னால் வந்து லிப்ட் கேட்கும் டேனியல் பாலாஜியைப் பார்த்த பதட்டத்தில் அவர் மீது உதயநிதி காரை ஏற்றி விட, ரத்த வெள்ளத்தில் கிடப்பவரை தன் காரிலேயே தூக்கி போட்டுக் கொண்டு அருகில் இருக்கும் ஹாஸ்பிட்டல் ஒன்றில் சேர்க்கிறார்.
இதற்கிடையே ஐ.டி துறையில் வேலையை இழந்த உதயநிதி ஹீரோயின் மஞ்சுமா மோகனை காதலிக்கிறார். இருவரும் வெவ்வேறு மதமென்பதால் அந்தக் காதலை கடுமையாக எதிர்க்கிறார் மஞ்சுமாவின் அண்ணனும் போலீஸ் அதிகாரியுமான ஆர்.கே.சுரேஷ்.
எதிர்ப்பை மீறி இருவருமே வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள்.
திட்டம் தெரிந்து திருமணத்தை தடுத்து நிறுத்தும் ஆர்.கே. சுரேஷ் சென்னைக்கு வந்த தீவிரவாதி டேனியல் பாலாஜிக்கு உதயநிதி மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவியை தவறாகச் சம்பந்தப்படுத்தி அவரை அந்தப் பிரச்சனையில் சிக்க வைத்து என்கவுண்ட்டரில் சுட்டுத்தள்ளி விட்டு தன் தங்கையை அவரிடமிருந்து பிரிக்க நினைக்கிறார்.
தன்னை குறி வைத்திருக்கும் அவரிடமிருந்தும், தீவிரவாதக் கும்பலோடு தங்களைச் சேர்த்து விட்ட போலீஸ் கும்பலிடமிருந்தும் உதயநிதியும், சூரியும் எப்படித் தப்பிக்கிறார்கள்? தீவிரவாதி டேனியல் பாலாஜியின் குண்டு வைக்கும் திட்டத்தை தனது புத்திசாலித்தனத்தால் உதயநிதி எப்படித் தடுக்கிறார்? என்பதே கிளைமாக்ஸ்.
உதயநிதியைச் சுற்றி ஒரு கதை, சூரியைச் சுற்றி ஒரு கதை, டேனியல் பாலாஜியைச் சுற்றி ஒரு கதை ஒரே படத்தில் மூன்று கதைகளைக் கையாண்டு பக்காவான ஆகஷன் படமாகத் தர நினைத்திருக்கிறார் டைரக்டர் கெளரவ் நாராயணன்.
ஆனால் அங்கங்கே அப்பட்டமாகத் தெரியும் லாஜிக் மீறல்கள் படத்தின் திரைக்கதையில் துறுத்துக் கொண்டு பல்லிளித்துக் கொண்டு விறுவிறுப்பை கேலிக்குள்ளாக்கியிருக்கிறது.
படம் தொடங்கி சில காட்சிகளுக்குப் பிறகே அறிமுகமாகிறார் உதயநிதி ஸ்டாலின். இதுவரை நடித்த படங்களில் ஒரு காமெடி ஹீரோவாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டிருந்த உதயநிதி இதில் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாற்ற முயன்றிருக்கிறார்.
கதாநாயகி மஞ்சுமாவுக்கு தமிழில் இன்னொரு படம், அதைத்தாண்டி சொல்ல ஒன்றுமில்லை. பாடல் காட்சிகளில் பேரழகி!
காமெடியோடு குணச்சித்திர கேரக்டரிலும் ஸ்கோர் செய்கிறார் சூரி. அந்த கேரக்டர் வித்தியாசமே அவரை ரசிக்க வைக்கிறது.
வில்லனாக வரும் டேனியல் பாலாஜி தான் நம் கவனத்தை அதிகம் ஈர்க்கிறார். கண்ணில் லென்ஸ் வைத்துக் கொண்டு வித்தியாசமான லுக்கில் வில்லத்தனத்தை மிகச் சரியாகச் செய்திருக்கிறார்.
உதயநிதியின் அம்மாவாக வரும் ராதிகா சரத்குமார் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் அம்மாவாக பரிமாணம் காட்டியிருக்கிறார்.
சேஸிங் காட்சிகளில் பரபரப்பைக் கூட்டுகிறது ஒளிப்பதிவு, டி.இமானின் பின்னணி இசை வேகத்துக்கு பலம்.
ஒரு சீரியஸான கதையைக் காமெடியாகக் கொண்டு செல்ல நினைத்த இயக்குநர் அதற்கான காட்சிகளை கதையின் போக்கில் யோசிக்காமல் தன் போக்கில் வலிந்து திணித்திருப்பது தான் ஆகப்பெருங்குறை. இந்தக் குறையைச் சரி செய்திருந்தால் உதயநிதி பட லிஸ்ட்டில் இன்னொரு ஹிட்டாம இந்தப்படம் தேறியிருக்கும்.!