ஜெயில்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

நகரோடிகளின் கதையைப் பேசப்போவதாய் சொல்லி எதையெதையோ பேசி முடிவில் நம்மை ஒன்றும் பேசவிடாமல் ஒருவித விரக்தியில் போட்டு அடைக்கிறது ஜெயில்

நாயகன் ஜீவி பிரகாஷ் திருட்டு வேலை செய்யும் வடசென்னை காவேரிநகர் இளைஞன். அவருக்கு போதைப்பொருள் விற்கும் ராமு நண்பன். அந்த நண்பனோடு இன்னொரு நண்பனும் இணைய…இந்த நட்பினரில் ஒருவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிமரியா வேறு ரவுடி கேங் மூலமாக சூழ்ச்சி செய்து போட்டுத்தள்ளுகிறார் நண்பனை இழந்த ஜீவி எப்படி இன்ஸ்பெக்டரை பழி தீர்த்து பங்கம் பண்ணுகிறார் என்பதாகத் தான் படம் பயணிக்கிறது. ஆனால் படத்தின் துவக்கத்தில் படத்தின் கதை நிலம் மறுத்து துரத்தப்பட்ட எளியவர்களின் கதை என்பதாக வசந்தபாலனின் குரல் சொல்கிறது!

படத்தில் ஜீவி ஓரளவு ஜீவன் கொடுத்து நடித்திருக்கிறார். ராக்கி கேரக்டரில் வரும் சிற்பியின் மகன் ராமு, வில்லனாக வரும் ரவிமரியா, ஜீவியின் அம்மாவாக வரும் ராதிகா உள்ளிட்ட அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ஹீரோயின் கூட ஓகே ரகமே! ஆனால் பலமில்லாத திரைக்கதை இவர்களின் நடிப்பை எல்லாம் காவு வாங்கிவிடுகிறது. படத்தில் துண்டு துண்டாக தொக்கி நிற்கும் காட்சிகள் நடிகர்களின் நடிப்பை அசிரத்தையாக்குகிறது.

படத்தின் பாடல்கள் அளவிற்கு பின்னணி இசை இல்லை. பின்னணி இசை அளவிற்கு கூட வசனங்கள் உருப்படியாக அமையவில்லை. எஸ்.ராமகிருஷ்ணன் பாக்கியம் சங்கர் என இரு எழுத்தாளர்கள் படத்தில் வசனம் எழுதியிருக்கிறார்கள் என்பதை நம்பவே முடியவில்லை. படத்தின் ஆறுதல்களில் முக்கியமான ஒன்று ஒளிப்பதிவு. வடசென்னையின் நிலப்பரப்பையும் ஒரு கொலைக்காட்சியின் பரபரப்பையும் கன கச்சிதமாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

எளிய மக்களின் வாழ்வியலைப் பேசும் இயக்குநர் அவர்களின் நெகட்டிவ் பக்கங்களை தவறாமல் பதிவு செய்திருக்கிறார். ஜீவியின் அறம் கூட முறையற்ற செயல்களின் மூலம் தான் நடக்கிறது. இது அறமில்லாத பதிவல்லவா? சாப்பாட்டுக்கு வழியில்லா விட்டாலும் தவறான பாதைக்குப் போகாத போக விரும்பாதவர்களின் லிஸ்ட் தான் எளியவர்களின் பக்கம் அதிகம். இனி வசந்தபாலன் அந்தப்பக்கத்தையும் படமாக்க வேண்டும்!

2/5