”எனக்கு மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்தது எல்லாமே புது இயக்குனர்கள் தான்” – ஜெயம் ரவி ஓப்பன் டாக்
ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் மிகப் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் படம் ‘அடங்க மறு’.
ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிக்க, இசை சென்சேஷன் சாம் சி எஸ் இசையமைக்க, அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருக்கிறார். கிருஸ்துமஸ் வெளியீடாக வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாயகன் ஜெயம் ரவி பேசியதாவது,
”ரிலீஸுக்கு முன்பு தான் நாங்க பேசணும், ரிலீஸூக்கு பிறகு ரசிகர்கள் தான் பேசணும், நாங்க பேசக்கூடாது.
எனக்கு மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்தது எல்லாமே புது இயக்குனர்கள் தான். அந்த வகையில் கார்த்திக்குக்கு இந்த படம் அமையும். முதல் படத்தில் இருந்து இன்று வரை எனக்கு ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருந்தே வந்திருக்கிறார்.
சுஜாதா விஜயகுமார் தயாரிப்பாளராக முதல் படம், கேட்டதை விடவே அதிகமாக செய்து கொடுத்தவர். ராஷி கண்ணா சமூகத்துக்கு நல்ல விஷயங்கள் நிறைய செய்பவர். ஒரே நேரத்தில் எத்தனை படங்களுக்கு இசையமைத்தாலும் நல்ல இசையை கொடுக்கிறார் சாம்.
ஒரு படத்தின் முதல் முகவரியே டீசர், ட்ரைலர் தான், அதை கட் செய்றதுல ரூபன் ஒரு கிங். எம் குமரன் படத்துக்கு விஜி தான் வசனம் எழுதினார், மிகப்பெரிய வெற்றி. அடுத்து இந்த படத்துக்கு தான் எழுதியிருக்கிறார், நிச்சயம் பெரிய ஹிட் ஆகும்.
ஒரே படத்துக்குள் பல முக்கிய கதாபாத்திரங்களை வைத்து, எல்லாமே மனதில் நிற்கும் வகையில் எழுதியிருப்பது தான் இது சிறப்பு. ஜீவா சாருக்கு பிறகு சத்யன் ஒளிப்பதிவில் நடித்தது எனக்கு ரொம்பவே பிடித்தது. இன்றைய சூழலுக்கு மிகவும் தேவையான படம் அடங்க மறு. வரும் 21ஆம் தேதி வெளியாகும் எல்லா படங்களும் வெற்றி பெறணும், அப்போ தான் தமிழ் சினிமா நல்லா இருக்கும்” என்றார் ஜெயம் ரவி.