நேரடி தமிழ்ப்படத்தில் ஹீரோவாக வேண்டும்! – பிரபாஸ் விருப்பம்
‘பாகுபலி 2′ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ‘சாஹோ’. சுஜீத் இயக்கத்தில் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான காட்சியமைப்புகளுடன் வர இருக்கும் இப்படத்தில் நாயகியாக ஸ்ரத்தா கபூர் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படம் குறித்து நாயகன் பிரபாஸ் பேசியதாவது, ‘சாஹோ’ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை. அது படமாக பார்க்கும் போது இன்னும் புரியும் என நினைக்கிறேன்.
‘சாஹோ’ படத்துக்காக 2 வருடங்கள் கொடுக்க வேண்டும் என நினைக்கவில்லை. ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு நல்ல படங்கள் பண்ணனும் என நினைத்தேன். சுஜித் சொன்ன கதை அப்படியிருந்தது, தயாரிப்பாளரும் நிறைய முதலீடு பண்ணி விட்டார்கள். ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிக்கும் நிறைய முன் தயாரிப்பு இருந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹாலிவுட் என பல இடங்களைச் சேர்ந்த சண்டைக் காட்சி இயக்குநர்கள் இதில் பணிபுரிந்துள்ளனர். அதற்காக நேரம் கொடுக்க வேண்டும்.
அபுதாபி, இத்தாலி, இந்தியா மற்றும் பல்வேறு ஐரோப்பா நாடுகளிலும் படப்பிடிப்பு செய்துள்ளோம். இங்கு தான் பிறந்தேன். ஆகையால் நேரடி தமிழ்ப் படம் பண்ண வேண்டும் என்ற ஆசையுள்ளது. கூடிய சீக்கிரம் நடக்கும்.