ஆணவக் கொலைகளைப் பற்றி அழுத்தமாகப் பேச வரும் ‘களிறு’

Get real time updates directly on you device, subscribe now.

kaliru

சினிமாத்தனம் இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் ‘களிறு’ படத்தில் நாட்டில் நடைபெற்ற பல்வேறு உண்மைச் சம்பவங்களைத் தழுவி அதன் கோர்வையாக தயாராகியிருக்கும் இப்படத்தில் இன்றைய கால கட்டத்தில் பேசப்பட வேண்டிய ஆணவக்கொலைகளைப் பற்றி ஆணித்தரமாகப் பேசுகிறது.

தெரிந்த முகங்களை வைத்து படத்தை எடுத்தால் அது வழக்கமான சினிமாவாக ஆகி விடுமே என்று யோசித்த இயக்குநர் ஜி.ஜெ.சத்யா முற்றிலும் புதுமுகங்களை வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். சி.பி.எஸ். பிலிம்ஸ் மற்றும் அப்பு ஸ்டுடியோ சார்பில் விஷ்வக் , அ.இனியவன் தயாரித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குநர் சத்யா பேசும் போது, ” இந்தப்படம் நாட்டில் இன்று நிலவுகிற சமுதாயச் சூழலை முடிந்தவரை நேர்மையாகப் பதிவுசெய்கிற ஒரு முயற்சி.

ஒரு இளைஞனும் இளம் பெண்ணும் காதலித்து கலப்புத் திருமணம் செய்தால், அது மிகப்பெரிய சமூகக் குற்றம் என்பதுபோல் சித்தரிக்கப் பார்க்கிறார்கள்.

இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் உட்கார்ந்து பேசினால் அந்தக் காதலர்களின் உணர்வுகளை நிச்சயம் புரிந்துகொள்ள முடியும். வீட்டோடு முடிய வேண்டிய பிரச்சினைகளை போலி அரசியல்வாதிகள், ஊதிப் பெரிதாக்கி, நாட்டுப் பிரச்சினையாக்கி எப்படிக் குளிர் காய்கிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்திருக்கிறோம்.

Related Posts
1 of 2,252

ஆணவக் கொலைகள் என்றும் கெளரவக் கொலைகள் என்றும் நடைபெறும் கொலைகளால் இழப்பும் வலியும் இரண்டு குடும்பத்திற்கும் பொதுவானது என்பதை காலம் கடந்து உணர்ந்த பெற்றோர்களை நானே சந்தித்திருக்கிறேன்.

அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்கு எந்த இழிவான செயல்களைச் செய்யவும் அஞ்ச மாட்டார்கள். மக்களிடம் இப்படி உணர்ச்சியைத் தூண்டி பிளவுபடுத்திக் காரியம் சாதிக்கும் அவர்களைப் புரிந்து அவர்களுக்கெதிராகப் பாதிக்கப்பட்டவர்கள் திரும்பினால் என்ன ஆகும் என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறேன்.” என்கிறார் இயக்குனர்.

‘களிறு’ படம் 58 நாட்களில் முழுப் படமும் நாகர்கோவிலில் எடுக்கப்பட்டுள்ளது. இதில்-விஷ்வக், அனுகிருஷ்ணா, நீரஜா, தீபா ஜெயன்,சிவநேசன், துரை சுதாகர்,ஜீவா, உமா ரவிச்சந்திரன், தீப்பெட்டி கணேசன், ‘காதல்’ அருண், ‘வெளுத்துக் கட்டு’அப்பு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

“சினிமாத்தனம் இல்லையென்றால் ஆவணத்தன்மை இருக்குமோ என்கிற தயக்கம் வேண்டாம். விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லாத வகையில் விரைவான திரைக் கதை படம் பார்ப்பவரின் கவனம் சிதறவே வைக்காது ” என உத்திரவாதம் தருகிறார் இயக்குநர்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் அமீர் அவர்கள் சமீபத்தில் வெளியிட்டார். படம் விரைவில் திரைக்கு வருகிறது.