எல்லாமே செம மொக்கை! : ஜீவனுக்கு வந்த சோதனை
‘நான் அவனில்லை’ பட வெற்றியோடு எங்கே போனார்? என்ன செய்கிறார்? என்று கோடம்பாக்கத்தை கேள்வி கேட்க வைத்த நடிகர் ஜீவன் மீண்டும் புதிய படங்களை கமிட் செய்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அப்படி அவர் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படம் தான் ‘அதிபர்’.
பென் கண்ஸ்டோரிடியம் ஸ்டூடியோஸ் (பி) லிமிடெட் என்ற பட நிறுவனம் சார்பாக டி.சிவகுமார் தயாரிக்கும் இப்படத்தை சூர்யபிரகாஷ் இயக்கியிருக்கிறார்.
ஜீவனுக்கு ஜோடியாக வித்யா நடித்திருக்கிறார்.
சமீபத்தில் நடந்த இப்படத்தின் ஆடியோ பங்ஷனில் தனது இடைவெளி குறித்து மனம் திறந்து பேசினார் ஜீவன்.
”சூர்யபிரகாஷ் சாரோட உதவியாளர் புருஷோத்தமன் நான் நடிச்ச ‘மச்சக்காரன்’ படத்துல வேலை செஞ்சார். அவர் மூலமாகத்தான் எனக்கு சூர்யபிரகாஷ் சார் அறிமுகமானார். நானும் கதையை கேட்டேன். உடனே அந்த புருஷோத்தமன் கிட்ட இவ்ளோ நான் இவர் எங்க இருந்தாருன்னு கேட்டேன். ஏன்னா அவர் என்கிட்ட பழகிய விதம், கதை சொன்ன விதம் எல்லாமே பிடிச்சுப் போச்சு.
இந்தக் கதையை உங்களுக்காகத்தான் சார் ரெடி பண்ணினேன்னு சொன்னார். இதுக்கு முன்னாடி நெறைய பேர் என்கிட்ட கதை சொல்றப்போ அது தயாரிப்பாளர்களோட சொந்தக் கதையாவும், சோகக் கதையாவும் இருக்கும். அதையெல்லாம் யார் மூலமாகவாவது வெளியில கொண்டு வரணும்னு சொல்லிட்டு நம்மகிட்ட சொல்ல வருவாங்க. அந்த மாதிரி நெறைய கதைகள் என்னைத் தேடி வந்திருக்கு.
பட் அது ஒரு இயக்குநரோட கதை இல்ல. ஒரு தயாரிப்பாளரோட கதைன்னு தெரிய வர்றப்போ நமக்கு ஒரு பயம் வந்துரும். இதுக்காகவே நெறைய படங்களை நிராகரிச்சிருக்கேன். அதுலேயும் சில பேரோட கதையை கேட்கிறப்ப எல்லாம் செம மொக்கையா இருக்கும்.
ஆனா இந்தப்படத்தோட தயாரிப்பாளர் சிவக்குமார் சாரோட வாழ்க்கையில நடந்த விஷயங்களை கதையாக்கி சொன்னப்போ ரொம்ப சுவாரஷ்யமா இருந்துச்சு. ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள் இதுல இருக்கு. அதுக்காகத்தான் இந்தப்படத்தை நான் ஒப்புக்கிட்டேன்” என்றார் ஜீவன்.