வைபவ் உடன் ஜோடி சேர்ந்த ‘இந்தியா பாகிஸ்தான்’ நாயகி!
‘அநேகன்’ படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் கார்த்திக்கின் இரண்டாவது இன்னிங்க்ஸ் கோலாகலமாக வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது.
அந்த பயணத்துக்கு கூடுதல் வேகம் சேர்க்கும் விதமாக ‘ஜிந்தா’ என்ற டைட்டிலில் தயாராகும் ஒரு புதிய படத்தில் முக்கியமான கேரக்டர் மூலம் தனது பயணத்தை தொடர்கிறார்.
எஸ்.ஏ.எப் சினிமாஸ் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஏ ராஜா தயாரிக்க, இயக்குனர் வசந்திடம் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ்.கே வெற்றிச் செல்வன் இயக்குனராக அறிமுகமாக, ஏ.ஆர். ரகுமானின் சகோதிரியின் மகன் ஹசார் காசிப் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
‘கப்பல்’ படம் பெரும் வெற்றியால் இளம் இயக்குனர்களின் முதல் தர செலக்ஷனாக இருக்கும் வைபவ் நாயகனாக நடிக்க, அவருக்கு இணையாக நடிப்பவர் ‘இந்தியா பாகிஸ்தான்’ படம் மூலம் அறிமுகமான சுஷ்மா ராஜ்.
‘இந்தக் கதை முற்றிலும் ஒரு புதிய முயற்சி ஆகும். இந்தக் கதைக்கு உற்சாகமும், துள்ளலும் தான் மூலதனம். இந்தக் கதையை நான் எழுதும்போதே என் மனதில் வந்து அமர்ந்தவர்கள் கார்த்திக் சாரும், வைபவும் தான். அவ்வளவு பொருத்தமாக இருந்தது.
தயாரிப்பாளர் ராஜா சார் என்னுடைய நெருங்கிய நண்பராவார். கதையைக் கேட்ட உடனே எனக்கு முதல் படம் இயக்க வாய்ப்பு அளித்தமைக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். கண்டிப்பாக எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு ஜனரஞ்சகமான படமாக இந்த ஜிந்தா இருக்கும்’ என்றார் இயக்குனர் எஸ்.கே.வெற்றி செல்வன்.