சிறிய படங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் : தியேட்டர் உரிமையாளர்களுக்கு கே.பாக்யராஜ் வேண்டுகோள்

Get real time updates directly on you device, subscribe now.

BHAKYARAJ

ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் சதுரஅடி 3500. அறிமுக நாயகன் நிகில் மோகன் நடிக்கும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ் தாணு அவர்கள் படத்தின் இசை மற்றும் ட்ரைலரை வெளியிட, மூத்த இயக்குநரான கே பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.

விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில் ”நடிகை இனியா இப்படவிழாவில் வராதது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால், அவர்கள் வராததால் நஷ்டம் அவருக்குத் தான் ஒழிய படக்குழுவிற்கு இல்லை. ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்தில் நான் ஒரு வசனம் எழுதியிருப்பேன். ‘கண்ணடிச்சு கூப்பிட்டும் வராத பொம்பளை கைய பிடிச்சு இழுத்தா மட்டும் வந்துடவா போவுது..’ என்று எழுதியிருப்பேன். அவர்களுக்கு தான் இங்கு வரவேண்டிய பொறுப்பு இருக்க வேண்டும். அவர்கள் வராத விஷயம் பெரிய பிரச்சனையாக மாறி விட்டதால் இனி அவர் எல்லா விழாக்களிலும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கிறேன்.

எல்லா தியேட்டர்களிலும் எப்போதும் ஏதேனும் ஒரு சிறிய படங்கள் ஓடிக்கொண்டிருக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தை ஏன் போடக்கூடாது. எப்போது பார்த்தாலும் பெரிய ஆர்ட்டிஸ்ட் படம் தான் ஒடவேண்டும் என்று எந்த நியதியும் இல்லையே? ஒவ்வொரு தியேட்டரிலும் சிறிய படங்களுக்கு காட்சிகளை ஒதுக்க வேண்டும். அதற்காக காலை காட்சியை ஒதுக்கக் கூடாது. பெரிய நடிகர்கள் நடித்திருந்தால் அந்த படத்தை காண ரசிகர்கள் காலை காட்சிக்கு வருவார்கள். ஆனால் புதுமுகங்கள் நடித்திருக்கும் சின்ன படங்களுக்கு ரசிகர்கள் வரமாட்டார்கள். இதை காரணமாக காட்டி தியேட்டரிலிருந்து படத்தை தூக்கி விடுகிறார்கள்.

Related Posts
1 of 6

படம் பார்த்த ரசிகர்களின் மவுத் டாக் பரவுவதற்குள் படத்தை தூக்கி விட்டால் சின்ன படங்கள் எப்படி ஒடும்? அதனால் சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். கண்டிப்பாக ஏதேனும் ஒரு சின்ன படங்கள் தியேட்டரில் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும் என்பது போல் ஒரு நடைமுறையை உருவாக்க வேண்டும். அதேபோல் ஏசி வசதி, பார்க்கிங் வசதி போன்ற எல்லா வசதிகளும் கொண்ட நல்ல தியேட்டர்களும் சின்ன படங்களை திரையிட முன்வர வேண்டும்.

இந்த படத்தின் டைட்டிலைப் பார்த்தவுடன் இது ஒரு சஸ்பென்ஸ் படமாக இருக்கும் என்று நினைத்தேன். இந்த வருடமே ஒரு சஸ்பென்ஸான வருடம் தான். ஜெயலலிதா அம்மா ஹாஸ்பிட்டலில் இருந்தது சஸ்பென்ஸாக இருந்தது. அதற்கு பின் இவர்கள் வருவார்களா? அவர்கள் வருவார்களா? என்ற சஸ்பென்ஸ் இருந்தது. அப்புறம் இவர்கள் அங்கே போய் சேர்ந்து விடுவார்களா? அவர்கள் இங்கே போய் சேர்ந்து விடுவார்களா? என்ற சஸ்பென்ஸ் இருந்தது. அப்புறம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தலில் வெங்கய்ய நாயுடுவுக்கு அந்த கட்சிகாரர்களே ஒட்டு போடுவார்களா? மாட்டார்களா? என்ற சஸ்பென்ஸ் இருந்து கொண்டேயிருக்கிறது. இது போல் ஏகப்பட்ட சஸ்பென்ஸ்களுடன் இருக்கின்ற இந்த காலக்கட்டத்தில் இந்த சதுர அடி 3500 படம் வெளியாவது விசேஷம்.

படத்தின் இயக்குநர் ஜாய்சன் அவருடைய குரு வைஷாக்கிற்கு நல்லதொரு மரியாதையை பெற்றுத் தருவார். அறிமுக நாயகன் நிகில் சுதந்திரமாக அனுபவித்து நடித்திருக்கிறார். நன்றாக இருக்கிறது.படம் வெற்றிப் பெறும்” என்றார்.

அறிமுக நாயகன் நிகில் மோகன் பேசுகையில், ‘இது என்னுடைய முதல் படம். இந்த படத்தில் நான் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன். ரியல் எஸ்டேட் பின்னணியில் சஸ்பென்ஸ், திரில்லர், ஹாரர், காமெடி, ஆக்‌ஷன், லவ், சென்டிமெண்ட் என எல்லா அம்சங்களும் கலந்து உருவாக்கப்பட்ட கமர்சியல் எண்டர்டெயினர் தான் இந்த சதுர அடி 3500. ஏராளமான திருப்பங்களுடன் அனைத்து தரப்பினரையும் கவரும் படமாக தயாராகியிருக்கிறது.’ என்றார்.