காக்கா முட்டை – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

Kakka-Muttai-Review

மாற்று சினிமாவுக்கான களமாக தமிழ்சினிமா உலகம் மாறுவது ஆரோக்கியமான விஷயம் என்பதோடு மட்டுமில்லாமல் ஈரானியப் படங்களை பார்த்து வியக்கும் ரசிகனுக்கு ஈரானியப் படங்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத வாழ்க்கையின் யதார்த்தத்தை கொண்டு வந்திருக்கும் படம் தான் இந்த ‘காக்கா முட்டை.’

எந்தவித விளம்பரப்படுத்தலும் இல்லாத போதே பல விருது விழாக்களுக்கு சென்று விருதுகளை தட்டி வந்த இப்படத்தைப் பற்றி அப்போதே ”இந்தப்படத்துல அப்படி என்ன தான்யா இருக்கு?” என்று கேட்காதவர்களே இல்லை.

அப்படி ரிலீசுக்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ரிலீசாகியிருக்கும் இப்படத்தின் கதை சேரியின் வாழ்க்கை முறையை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போன சைதாப்பேட்டை பாலத்துக்கு கீழே ஓடும் கூவம் கரையோர குடிசைப் பகுதியில் மாமியார் உடன் வாழ்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அவருடைய கணவர் தான் செய்த ஒரு குற்றத்திற்காக ஜெயிலில் இருக்கிறார். அவரை எப்படியாவது பெயிலில் எடுத்து விட முயற்சிக்கும் அவளுக்கு கணவன் கொடுத்து விட்டுப் போன ஒரே சொத்து மூத்தவன் விக்னேஷ் இளையவன் ரமேஷ் என இரண்டு ஆண் பிள்ளைகள்.

கணவன் ஜெயிலில் இருக்க வயதான மாமியாரும் வேலைக்கு போக முடியாமல் வீட்டில் இருக்கிறார். தாண்டவமாடும் வறுமையைப் போக்க பாத்திரம் தயாரிக்கும் குடோவுனில் வேலைக்கு போகிறாள். இரண்டு குழந்தைகளையும் படிப்பையும் நிறுத்தி விட்டு ரயில்வே ட்ராக்குகள் சிதறிக்கிடக்கும் கரி அள்ளும் வேலைக்கு அனுப்புகிறாள்.

வாழ்க்கையின் விளிம்பில் இருக்கும் அந்தச் சிறுவர்களின் வீடு இருக்கும் ஏரியாவில் புதிதாக ஒரு பீட்சா நிறுவனம் தனது கிளை ஒன்றை ஆரம்பிக்கிறது. சிம்பு திறந்து வைத்து விட்டுப்போகும் அந்த கடையைப் பார்க்கும் ஏழைச்சிறுவர்களுக்கு எப்படியாவது அந்த பணக்கார வர்க்கத்தினம் உண்ணும் பீட்சாவை சாப்பிட்டு பார்த்து விட வேண்டும் என்று ஆசை.

அதற்காக பணம் சேர்க்க ஆரம்பிக்கிறார்கள். சிறுவர்களின் அந்த பீட்சா கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதே மீதிப்படம்.

அண்ணன் தம்பிகளாக விக்னேஷ், ரமேஷ் என இரண்டு பொடிப்பையன்கள். இருவருக்குமே மரத்திலுள்ள காக்கா முட்டைகளை எடுத்து குடிப்பது தான் வேலை. அதனாலேயே இருவருக்கும் பெரிய காக்கா முட்டை சின்ன காக்கா முட்டை என்று பெயர். படத்தின் டைட்டிலுக்கும் இதுதான் காரணம் என்றாலும் பீட்சா என்ற டைட்டில் தான் கதைக்கு பொறுத்தமானது. ஏனென்றால் கதையும் அதை நோக்கித் தான் போகிறது.

அழுக்கு சட்டை, கிழிந்த டவுசர், எண்ணெய்யையே பார்த்திராத வெளுத்த தலைமுடி என கூவத்தின் கரையோரம் பிழைப்பை நடத்தும் மக்களின் ஏழ்மையை மிக ஆழமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

Related Posts
1 of 5

இருவருமே நடித்திருக்கிறார்கள் என்று சொல்வதை விட அந்தக் கேரக்டர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். கொசுக்கள் சூழும் சாக்கடையைக் கூட செருப்பு போடாமல் அசால்ட்டாக நடந்து போவது, கூவத்தில் இறங்கி குளிப்பது என கேரக்டர்களுக்கு உயிரூட்டியிருக்கிறார்கள்.

என்னதான் தங்கள் குடும்பம் வறுமையில் இருந்தாலும் ஒரு பணக்கார வீட்டுச் சிறுவன் தரும் எச்சி பீட்சாவை வேண்டாம் என்று நிராகரித்து விட்டு வரும் போது அவர்களின் சுயமரியாதை மீது மரியாதை வருகிறது.

கோபம், பாசம், பிடிவாதம், பயம், பரிதவிப்பு என படம் முழுக்க சிறுவர்கள் காட்டியிருக்கும் முகபாவங்களை மெய் மறந்து கை தட்டி ரசிக்கலாம்.

இன்னும் எத்தனை படங்களில் நடித்தாலும் இந்தப் படத்தில் நடித்த பெருமை கதையின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு எப்போதுமே உண்டு. சேரி ஜனங்களின் மெட்ராஸ் பாஷையை எந்த தடுமாற்றமும் இல்லாமல் பேசி ஆச்சரியப்படுத்துகிறார். வயதான மாமியாரை விட்டுக் கொடுக்காத தன்மை சிறுவர்கள் காணாமல் போகும் போது கண்களில் காட்டும் பயம் என செஞ்சுரி அடிக்கிறார் நடிப்பில்.

பீட்சா சாப்பிடுவதற்கு தேவையான பணம் தயாரானவுடன் கடைக்குப் போகும் சிறுவர்களை உள்ளே விடாமல் கடையின் மேனேஜர் அடித்து விட அந்த வீடியோவை வைத்து காசு பார்க்க துடிக்கும் அந்த ஏரியா இளைஞர்களாக ரமேஷ் திலக், யோகி பாபு இருவரும் காமெடி கலந்த கேரக்டரில் டைம் பாஸுக்கு கேரண்டி தருகிறார்கள். அதிலும் ரமேஷ் திலக் பீட்சா கடை ஓனரிடம் ஒரிஜினல் வீடியோ கிளிப்பை கொடுத்து விட்டு  1 லட்சம் ரூபாயை வாங்கிய அடுத்த நிமிடம் அதே வீடியோ க்ளிப் சேனலில் ஒளிபரப்பாகும் போது நடக்கும் காட்சிகள் காமெடி கலாட்டா.

ஒரு சின்ன விஷயத்தை பூதாகரமாக்கி அதை எப்படியெல்லாம் அரசியல்வாதிகள், மீடியாக்கள், அந்த ஏரியாவாசிகள் தங்கள் சுயலாபத்துக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை இரண்டாம் பாகத்தில் எந்த சமரசமும் செய்யாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் வ. மணிகண்டன்.

பீட்சா கடையை திறந்து வைக்கும் காட்சிக்காக கெஸ்ட் ரோலில் வந்து போகிறார் நடிகர் சிம்பு. அதோடு விட்டார்களா..? அவரை எந்தளவுக்கு கலாய்க்க முடியுமோ அந்தளவுக்கு கலாய்த்திருக்கிறார்கள். ”இன்னும் 5 நிமிஷத்துல ராகு காலம் வரப்போகுது” என்று மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி சொல்லவும் பீட்சா கடையை திறந்து வைக்க சிம்பு காரில் வந்து இறங்குவார் பாருங்கள்..! அந்த ஒரு சீனே போதும். சிம்புவின் இமேஜ் காலியாவதற்கு. ரொம்ப பெருந்தன்மை சிம்பு பிரதர்!

என்னதான் பீட்சா கனவோடு சிறுவர்கள் அலைவதாக காட்டியிருந்தாலும் கடைசியில் ”ச்ச்சீ… பீட்சா நல்லாவாடா இருக்குது? இதுக்கு நம்ம பாட்டி சுட்டுக்கொடுத்த தோசையே பரவாயில்ல…” என்கிற முடிவுக்கு சிறுவர்கள் வரும்போது ஒட்டுமொத்த தியேட்டரும் கைதட்டல் சத்தங்களில் கரைந்து போகிறது.

ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசையும் மணிகண்டனின் ஒளிப்பதிவும் கதைக்கேற்ற உலகத்தரம்.

‘விருது’களை வாங்கிக் குவிக்கும் படமென்றாலேஅது ‘கமர்ஷியல்’ என்கிற வட்டத்துக்குள் வருவதில்லை என்கிற காலங்காலமாக இருந்து வந்த வரைமுறையை தவிடு பொடியாக்கியிருக்கிறது இந்தப்படம்.

அதோடு நின்று விடவில்லை. தமிழ்சினிமா ரசிகர்களின் ரசனையை ஒருபடி உயர்த்தும் படமாகவும், நல்ல சினிமாக்களே வருவதில்லை என்று குறைபட்டுக் கொள்கிறவர்கள் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய படமாகவும் பெருமைமிகு படமாக வந்திருக்கிறது இந்த ‘காக்கா முட்டை.’