‘காலா’ படத்துக்காக ஸ்பெஷல் எமோஜி… – ரஜினி முகமே தெரிய மாட்டேங்குதே?
வுண்டர் பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் மிகப்பிரம்மாண்டமான தயாரித்திருக்கும் படம் ‘காலா’.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த படம் அடுத்த மாதம் ஜூன் 7ம் தேதி திரைக்கு வருகிறது.
ரஜினியின் அதிகாரப்பூர்வ அரசியல் அறிவிப்புக்குப் பிறகு வெளியாகும் முதல் திரைப்படம் காலா என்பதால், அவரது ரசிகர்களிடையே இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் ரஜினியுடன், ஈஸ்வரி ராவ், ஹூமாகுரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி, அஞ்சலி பட்டேல், சுகன்யா, உள்பட பலர் நடித்துள்ளனர். முரளி ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்
ஏற்கனவே காலா படத்தின் ஆடியோ ரிலீஸ் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளையும், வுண்டர்பார் நிறுவனம் தனது அதிகாரப்பூவ யு-ட்யூப் சேனலிலும், ட்விட்டர் அக்கவுண்ட்டிலும் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், காலா படத்துக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் விதமாக சிறப்பு எமோஜி ஒன்றை டிவிட்டர் சமூக வலைத்தளம் வெளியிட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் #Kaala ஹாஷ்டேக்குகளில் ரஜினியின் கம்பீரமான உருவத்துடன் இந்த சிறப்பு எமோஜிகான் உள்ளது. இதன் மூலம் டிவிட்டரில் உள்ள ரஜினி ரசிகர்கள், இந்த ஹாஷ்டேக் மற்றும் எமோஜியை பயன்படுத்தி, காலா படம் குறித்த தங்கள் கருத்துக்களை பகிரலாம்.
இதற்கு முன்பு, தமிழில் விஜய்யின் ‘மெர்சல்’ படத்திற்காக டிவிட்டரில் எமோஜி வெளியிடப்பட்டது. ஆனால் ரஜினியின் ‘காலா’ படத்துக்கு நான்கு மொழிகளில் எமோஜியை ட்விட்டர் வெளியிட்டுள்ளது.
காலா படத்துக்கு இது பெருமை சேர்க்கும் விஷயம் தான் என்றாலும் அந்த எமோஜியில் ரஜினியின் முகமே தெரிய மாட்டேங்குதே? என்று வருத்தப்படுகிறார்கள் ரசிகர்கள். இனி வரும் நாட்களிலாவது ரஜினியின் முகம் தெளிவாகத் தெரியும்படி டிசைனை மாற்றினால் நல்லது.