‘கவலை வேண்டாம்’ இயக்குனரின் ‘காட்டேரி..’!

Get real time updates directly on you device, subscribe now.

ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தை இயக்கிய டீகே இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் ‘காட்டேரி’.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.ஈ.ஞானவேல்ராஜா மற்றும் அபி அண்ட் அபி நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் காமெடி வித் ஹாரர் திரில்லர் படமாகும். இப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் சோனம் பஜ்வா ஏற்கனவே ‘கப்பல்’ என்கிற படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தவர். இவர்கள் தவிர கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், சேத்தன், ஜான்விஜய்,ரவிமரியா,மைம் கோபி, லொள்ளுசபா மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, ‘யாமிருக்க பயமே’ படத்தில் பின்னணி இசையமைத்த பிரசாத் இசையமைத்திருக்கிறார் .

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, இயக்குனர் டீகே, வைபவ் சோனம் பஜ்வா, பொன்னம்பலம், சேத்தன், ஜான்விஜய், ரவிமரியா,மைம் கோபி, லொள்ளுசபா மனோகர் மற்றும் படக்குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சந்திப்பின் சிறப்பு என்னவென்றால் கலந்து கொண்ட நடிகர்கள் அனைவரும் படத்தில் தாங்கள் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தின் தோற்றம் மற்றும் உடைகளிலேயே வந்து ஆச்சரியப்படுத்தினர்.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்தபின் நடிகர் பொன்னம்பலம் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுதான். சொல்லப்போனால் இந்தப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நான்காவது நாளே படக்குழுவினர் யாருக்கும் சொல்லாமல் சஸ்பென்சாக பிக்பாஸ் வீட்டிற்கு சென்று விட்டாராம் பொன்னம்பலம்.

நிகழ்ச்சியில் பேசிய பொன்னம்பலம், “இந்தப் படத்தில் மிக முக்கியமான கேரக்டரை இயக்குனர் டீகே கொடுத்துள்ளார். நாங்கள் பிக்பாஸ் வீட்டில் எல்லோருக்கும் பேர் வைப்பது போல, இயக்குனர் டீகேவுக்கு ‘டிராகுலா கிங்’ என்கிற பட்டத்தை வழங்குகிறேன்” என்றார்.

நிகழ்ச்சியின் நிறைவாகப் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, “நான் பார்த்த வரையில் இயக்குனர் டீகேவின் திறமையை இங்கே பலரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. அடுத்து மீண்டும் ஹாரர் படமா என தயங்கிய அவரை நான் தான் வற்புறுத்தி இந்தப்படம் பண்ண வைத்தேன். காரணம் இது வழக்கமான பேய்ப்படம் இல்லை.

டீகேவிடம் சூர்யா, விக்ரம் என மாஸ் ஹீரோக்களுக்கான கதைகள் கைவசம் இருக்கின்றன. ‘காட்டேரி’ ரிலீஸுக்கு பிறகு அவர் மாஸ் இயக்குனராக மிகப்பெரிய இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடிப்பார்.

அதேபோல வைபவுக்கும் அவரது திறமைக்கு தீனிபோடும் கதைகள் கிடைக்கவில்லை என்றே சொல்வேன். அவரும் கூட, இங்கே குறைத்தே மதிப்பிடப்படுகிறார்” என பேசினார்.