‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்கு இந்திய துணை குடியரசு தலைவர் பாராட்டு!
கார்த்தி நடிப்பில் சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”கடைக்குட்டி சிங்கம்”.
தமிழில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் தெலுங்கில் ”சின்னபாபு” என்ற பெயரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சமீபத்தில் இப்படத்தை பார்த்த இந்தியாவின் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு படத்தை பற்றி மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ”இதோ, சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான “சின்னபாபு” (தமிழில் “கடைக்குட்டி சிங்கம்”) திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம்” என்று பாராட்டியிருக்கிறார்.
நாட்டின் மிகப்பெரிய தலைவர் படத்தை பாராட்டியுள்ள நிலையில் அவருக்கு நன்றி தெரிவித்து வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள் படக்குழுவினர்.