ஜெய்பீம் போல் கண்மணி பாப்பா இருக்க வேண்டும் – நடிகர் ஆரி!


ராஜேந்திர பிரசாத் மற்றும் சுந்தர்.ஜி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கண்மணி பாப்பா’. இதில் தமன்குமார், மியாஸ்ரீ, சிறுமி மானஸ்வி, சிங்கம்புலி, சிவம், சந்தோஷ் சரவணன், நாக மாசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாய் தேவ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஆரி, அசோக், ஈரோடு மகேஷ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், சி.வி.குமார் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். விழாவில் நடிகர் ஆரி அர்ஜுனன் பேசும்போது, “சிறியபடங்களை ஓடிடி தளங்கள் வாங்குவதில்லை. இதை எல்லாம் புரிந்துகொண்டு புதிய தயாரிப்பாளர்கள் தயாரிப்பில் இறங்க வேண்டும். இந்தக் கண்மணி பாப்பா படம் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள். ஜெய்பீம் படம் போல இந்தப்படமும் இருக்க வேண்டும்” என்றார். அவரது பேச்சு படத்தின் இயக்குநர் ஸ்ரீமணி உள்பட அனைவரையும் உற்சாகப்படுத்தியது.