சூப்பர் ஸ்டார் படம்னா மூணு நாள்; ‘பாகுபலி’ பத்து நாட்கள் தாங்கும்! : கஸ்தூரி ராஜா தடாலடி பேச்சு

ஜே.வி.டி.எம் கிரியேஷன்ஸ் சார்பில் பாலசுதன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘துணிகரம்’.
கதாநாயகனாக நடித்துள்ள வினோத் லோஹிதாசன் உட்பட முற்றிலும் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் இயக்குனர் பாலசுதனும் கதைக்கு திருப்பமான முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். க்ரைம் த்ரில்லர் கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளது.
சிறிய பட்ஜெட் படம் என்றாலும் இசைக்கு ஷான் கோகுல் மற்றும் பின்னணி இசைக்கு தனுஜ்மேனன் என இரண்டு இசையமைப்பளர்கள் பணியாற்றியுள்ளனர். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் கஸ்தூரிராஜா, பேரரசு, ஆர்.கே.வித்யாதரன் நடிகர்கள் போஸ் வெங்கட், விஜய் டிவி சீரியல் புகழ் அமித் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் (கில்ட்) ஜாக்குவார் தங்கம் ஆகிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய கஸ்தூரிராஜா, ”ஒரு நபர் இயக்குனராக மாறி புகழ்பெறுவதற்காக என்னனென்னவெல்லாம் இழக்கிறான் என நெகிழ்ச்சியாக பேசினார். “துணிகரம் என டைட்டில் வைத்ததிலேயே படக்குழுவினரின் துணிச்சல் தெரிகிறது. இந்த சினிமாவிற்கு வந்ததில் இருந்து இரண்டு முறை நான் கோமாளியாக கண்ணுக்கு தெரிஞ்சிருக்கிறேன். இப்போ கூட அப்படித்தான் தெரிஞ்சுக்கிட்டிருக்கேன்.
முதல் தடவையா என்னோட படத்தை டைரக்ட் பண்ண தயாரிப்பாளர் தேடி அலைந்த போது.. இரண்டாவது துள்ளுவதோ இளமை படத்தை இயக்கியபோது.. அப்போ தனுஷுக்கு ஹீரோ லுக் இல்லை.. அதனால் படம் எடுக்க பணம் கொடுத்த பைனான்சியர், ‘அப்பனும் மகனும் கேமராவ வச்சு விளையாடிட்டு இருக்காங்க’ன்னு விமர்சனம் பண்ணினார். அவமானங்களையும் விமர்சனங்களையும் சந்தித்துதான் இங்கே வந்துள்ளோம்… எனக்கு ராஜ்கிரண்னு ஒரு கடவுள் கிடைச்சார்.. இந்த உயரத்துக்கு வர முடிஞ்சது”. என்றார்..
மேலும் அவர் பேசும்போது, “இன்னைக்கு கொஞ்சம் சினிமா ஆரோக்கியமா இருக்கு. ஒரு ஆடியோ ரிலீஸுக்கு டிஸ்ட்ரிபியூட்டர் வர்றதே ஆரோக்கியமான விஷயம் தான். சின்னப்படம் வந்தாலும் மூணு நாள் தான். சூப்பர் ஸ்டார் படமும் மூணு நாள். இன்னைக்கு உலகம் பூரா பேசப்படுற ‘பாகுபலி’ கூட பத்து நாட்கள் தான். அதுனால இன்னைக்கு நிறைய படங்கள் வெளிவர வாய்ப்பு இருக்கு” என்றும் இன்றைய சினிமா சூழலை விவரித்தார்.
சமீபத்தில் வெளியான ‘இலை’ படத்தை வெளியிட்ட ஆக்சன்-ரியாக்சன் நிறுவனம் தான் இந்தப்படத்தையும் வெளியிடுகிறது..