கிடாரி – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

kidaari-review1

RATING 3.2/5

சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டிருக்கும் வெண் திரையில் டைட்டில் கார்டில் ஆரம்பிக்கிற ரத்த வழிதல் கிளைமாக்ஸ் வரை வாடையை வீசியடிக்கிறது.

இது சசிக்குமார் கேரக்டருக்கு ஏத்த கலர் போல… கூடவே அவர் படங்களில் இருக்கிற குடும்பம், பாசம், காதல், மெல்லிய நகைச்சுவை எல்லாமுமாக வந்திருக்கிறது இந்த கிடாரி.

தென் மாவட்டங்களில் துரோகத்துக்கு கிடைக்கிற பழிக்கு பழி தான் கதையின் சாராம்சம்.

சாத்தூர் சுத்துப்பட்டு ஏரியாக்களில் பெரிய தலைகட்டு யார் என்றால் அது கொம்பனாக வரும் வேல ராமமூர்த்தி தான்.

எந்த இடம் யாரிடமிருந்து யாருக்கு கை மாறினாலும் அதில் இவர்களின் கைநாட்டு இல்லாமல் மாறாது. விளைவு ஊருக்குள் அத்தனை பேர் அவரை போட்டுத் தள்ள வெறியுடன் காத்திருக்கிறார்கள்.

முதல் காட்சியில் ரத்தம் வழிந்தோட அந்த ரத்த வழிதலோடு ஒரு கை நீள்கிறது…

அவர் வேறு யாருமல்ல… வேல ராமமூர்த்தி தான். வர்ற பாதி பேர் இவரால குத்துப் பட்டவங்கதான்யா… என்று டாக்டரே சலித்துக் கொண்டு வெட்டுப்பட்டு வந்திருப்பது யார் என்று பார்த்தால் அவரையே குத்திப்போட்டு படுக்கையில் போட்டு வந்திருக்கிறார்கள்.

வேல ராமமூர்த்தியை யார் கொன்றது..? இந்த கேள்விக்கு ஒவ்வொரு வில்லனாக ப்ளாஷ்பேக் போட்டு அது சம்பந்தமான சம்பவங்களோடு அடுத்தடுத்த காட்சிகள் விரிந்து விடை சொல்வது தான் கிளைமாக்ஸ்.

வழக்கமான வன்முறை சம்பவங்கள் தான் மொத்தப்படமும்! ஆனால் அதை நேர்த்தியாக கையாண்டிருக்கிற விதத்தில் இயக்குநர் பிரசாத் முருகேசன் கவனிக்க வைக்கிற இயக்குநராக மாறியிருக்கிறார்.

ஊரில் பெரிய ஆள் என்று சொல்லிக்கொள்கிற அத்தனை பேருக்கும் ஒரு விசுவாசி இருப்பான் அவர் தான் ஹீரோ சசிக்குமார்.
இவரைத் தாண்டி யாரும் கொம்பையா பாண்டியனை கை வைக்க முடியாது. அப்படி ஒரு பாதுகாப்பு அரணாக கம்பீரம் காட்டுகிறார்.

அதே சமயத்தில் நிகிலா விமல் உடனான காதல் காட்சியிலும் அதே முறுக்கல் எதற்கு என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.

Related Posts
1 of 2

சசிக்குமாரை விரட்டி விரட்டி காதலிப்பதற்காகவே உலா வருகிறது இளஞ்சிட்டு நிகிலா விமல். ஆனால் நடிப்பில் நாடோடிகள் அனன்யானை ஞாபகப்படுத்துகிறார். அவரிடமிருந்து அந்த சிணுங்கல் நிகிலாவிடம் இல்லை என்பது உண்மை.

படம் முழுக்க மீசையை முறுக்கிக் கொண்டு வருபவர் சசிகுமார் என்றாலும் படத்தில் ஸ்கோப் என்பது கொம்பையா பாண்டியனாக வரும் வேல ராமமூர்த்திக்குத் தான்.

மனுஷன் அந்த குத்திக் கம்பை தூக்கிக் கொண்டு கோவணத்தோடு வீட்டை விட்டு கிளம்பி ஓடி வருகையில் பார்க்கும் வீரம் இன்றைக்கும் கிராமப் புறங்களில் அப்படி சில கேரக்டர்களை ஞாபகப்படுத்துகிறது. முழுப்படத்திலும் தனது நடிப்புத் திறமை மொத்தத்தையும் மிச்சம் வைக்காமல் இறக்கி வைத்திருக்கிறார்.

அவரது மகனாக வரும் கவிஞர் வசுமித்ரா, அவரது மாமனாராக வரும் எழுத்தாளர் மு.ராமசாமி ஆகியோரின் கதாபாத்திரங்களும் சூடும் சொரணையும் மிக்கவை.

வெள்ளையும் சொள்ளையுமாக ஊருக்குள் வெட்டி பஞ்சாயத்து பேசித்திரியும் ஓ.கே.கே சுந்தர் அன்கோவின் சீரியஸ் பஞ்சாயத்து கூட காமெடியாக கொண்டு போயிருப்பது ரிலாக்ஸ் டைம்!

நீண்டநாளுக்குப் பிறகு திரையில் நெப்போலியனைப் பார்க்க முடிகிறது. கம்பீரம் குறையவில்லை என்றாலும் புதுசு புதுசாக சொக்காக்களைப் போட்டு வந்து யதார்த்தத்தை மீறித் தெரிகிறார்.

”உன்னோட சக்திக்கு என்னோட முந்தானையைத் தான்யா தூக்க முடிஞ்சது” என்று தனது கணவனின் இயலாமையை ஒரே ஒரு வசனத்தில் வெளிப்படுத்துகிற சுஜா, கிடாரி இல்லேன்னா கொம்பையா பாண்டியன் ரெண்டு பேர்ல ஒருத்தரோட உசுரு எனக்கு வேணும் என்று பழி வாங்கும் வெறியோடு தன்னையை முந்தி விரிக்கத் துணிவது துரோகத்தின் உச்சம்.

படம் முழுக்க கத்திக்கும், ரத்தத்துக்கும் வேலைகளை பிரித்துக் கொடுத்து பயமுறுத்தினாலும் இடை இடையே குடும்பத்துக்குள் நடக்கும், பாசம், காதல், மோதல், பழி வாங்கல் என மற்ற விஷயங்களையும் மிதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் பிரசாத் முருகேசன்.

ஒவ்வொரு கேரக்டருக்கு ஒருவித கலர் வித்தியாசத்தை தனது கேமரா கோணங்களில் மிக அழகாக வித்தியாசப்படுத்தியிருக்கிறது எஸ்.ஆர்.கதிரின் கேமரா!

”வண்டியில நெல்லும் வரும்…” ”கிடாரியே உன் போல…” என மனசு மயங்குவது பாடல்களில் மட்டுமல்ல… உலகப் படங்களில் நாம் அனுபவித்த பின்னணி இசையிலும் மயங்க வைத்து விடுகிறார் இசையமைப்பாளராக புரமோஷன் பெற்றிருக்கும் தர்புகா சிவா.

தென் மாவட்டங்களில் அதிகம் பேசப்படும் குடும்பத்துக்குள் நடக்கிற வெட்டுக்குத்து, தொழில் போட்டியால் நிகழ்கிற வன்முறையை குடும்பப் பின்னணியில் படமாக்கித் தந்திருக்கிறார் இயக்குநர் பிரசாத் முருகேசன்.

அது ஹெவி டோஸ் ஆகி விட்டதைத் தான் ரசிகர்கள் ஜீரணிப்பது கொஞ்சம் சிரமம்! அடுத்த படத்தின் டோஸை குறைப்பது கண்டிப்பான அவசியம்!

கிடாரி – ரத்தக்களரி!