கொன்றால் பாவம்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

மேடை நாடகமாகவும் திரைப்படமாகவும் ஏற்கெனவே வந்த கதை இது. இருப்பினும் தமிழுக்குப் புதுசு

இயக்குநர் தயாள் பத்மநாபன் தமிழ்நாட்டுக்காரராக இருந்தாலும் கன்னடத்தில் தான் 19 படங்கள் இயக்கியிருக்கிறார். தமிழில் இது அவருக்கு முதல்படம். எப்படி வந்திருக்கிறது கொன்றால் பாவம்?

1981-ல் ஒரு கிராமத்தில் நடிகர் சார்லி தன் மனைவி ஈஸ்வரிராவ், மகள் வரலெட்சுமியோடு மிகவும் வறுமை சூழ வாழ்ந்து வருகிறார். அவ்வூருக்கு பயணி போல வருகிறார் ஹீரோ சந்தோஷ் பிரதாப். வந்தவர் சார்லி வீட்டில் ஒருநாள் தங்குவதற்காக அனுமதி கேட்கிறார். சற்றுத்தயக்கத்துடனே சார்லி சம்மதிக்க, அந்த ஒருநாள் என்னென்ன பகீர் சம்பவங்கள் நடக்கின்றன? என்பதே படத்தின் கதை

நாயகன் சந்தோஷ் பிரதாப் தனது வயதுக்கும் திறமைக்கும் ஏற்ற கேரக்டரை ஏற்று நடித்துள்ளார். ஒருசில இடங்களில் தத்தளித்தாலும் பல இடங்களில் நல்ல நடிகராக மிளிர்கிறார். வரலெட்சுமி வில்லி அவதாரம் எடுக்கும் போது மிரட்டுகிறார். ஈஸ்வரிராவ் எமோஷ்னல் காட்சிகளில் பட்டயக்கிளப்பியிருக்கிறார். சார்லி வழங்கப்பட்ட வாய்ப்பிற்கு 100% நியாயம் சேர்த்துள்ளார். க்ளைமாக்ஸில் அவரது நடிப்பு ஆசம்.

சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை நம்மை கதையோடு ஒன்ற வைக்கிறது. கேமராமேன் ஒரு கிராமத்தின் நிலப்பரப்பை அந்தக்கால லைட்டிங் அமைப்போடு காட்டி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

பேராசை பெருநஷ்டம் என்ற தத்துவத்தை சிறிய கேரக்டர்களை வைத்தே அழகாக கன்வே செய்த இயக்குநருக்குப் பாராட்டுக்கள். இருப்பினும் அதெப்படி இதெல்லாம் தெரியாமல் இருக்கும்? என்ற கேள்வி எழும் வண்ணம் ஒரு முக்கியமான லாஜிக் பிழை படத்தில் இருக்கிறது. தேவையற்ற காட்சிகள் படத்தில் இல்லையென்றாலும் தேவையான காட்சிகளை இன்னும் வலிமையோடு அமைத்திருக்கலாம்.

கொன்றால் பாவம்- தேவையான தத்துவம்
3/5