கிரிஷ்ணம் – விமர்சனம் #Krishnam
RATING 2.5/5
நமக்கு மேல ஒரு சக்தி இருக்கிறது என்பார்கள். அதுதான் கடவுளின் சக்தி.
இனிமேல் அந்த ஆண்டவன் தான் காப்பாத்தணும் என்று மருத்துவர்களால் கை விடப்படுபவர்கள் அந்த அற்புத சக்தியால் மறுஜென்மம் எடுப்பார்கள். அப்படி ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்படும் ஹீரோ கடவுள் சக்தியால் எப்படி மறுஜென்மம் எடுத்தார் என்பதே இந்த ‘கிரிஷ்ணம்’.
கல்லூரி படிப்பு, நட்பு, காதல், அம்மா, அப்பா பாசம் என சமத்துப் பிள்ளையான ஹீரோ அக்ஷய் திடீரென்று ஒரு அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அவர் உயிர் பிழைக்க ஒரு சதவீதம் மட்டுமே வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் சொல்லிவிட, எல்லாம் அந்த குருவாயூரப்பன் பார்த்துக் கொள்வார் என்று கடவுளை நம்புகிறார். அதன்பிறகு அக்ஷய் கிருஷ்ணன் வாழ்க்கையில் நடக்கும் அற்புதம் தான் படத்தின் மீதிக்கதை.
அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு பின்பு கடவுள் சக்தியால் பூரண உடல்நலன் பெற்ற தன் மகன் அக்ஷயையே ஹீரோவாக நடிக்க வைத்து அவரது வாழ்க்கையையே கதையாக எழுதி படமாக தயாரித்து தந்திருக்கிறார் தயாரிப்பாளர் பி.என்.பலராமன்.
முன்பின் நடிப்பில் அனுபவம் இல்லை என்றாலும் அது தெரியாதவண்ணம் மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஹீரோ அக்ஷய்.
கட்டுக்கோப்பான அக்ரஹாரத்துப் பெண்ணாக வரும் நாயகி ஐஸ்வர்யா உல்லாஸ் நடிப்பிலும் அடக்கியே வாசித்திருக்கிறார். ஹீரோவின் அப்பாவாக வரும் சாய்குமார், அம்மாவாக வரும் சாந்தி கிருஷ்ணா இருவரும் இப்படி ஒரு அம்மாவும், அப்பாவும் தனக்கு கிடைக்க மாட்டார்களா? என்று படம் பார்ப்பவர்களை ஏங்க வைத்து விடுகிறார்கள்.
கடவுள் நிகழ்த்திய அற்புதத்தை திரையில் காட்ட வேண்டும் என்பதாலேயே முழுக்க முழுக்க ஆன்மீகம், சொற்பொழிவு, பக்திப் பாடல்கள் என ஒரே ட்ராக்கில் செல்லாமல் அன்பு, காதல், நட்பு, காமெடி என எல்லோரும் ரசிக்கும்படி கமர்ஷியல் படம் போல திரைக்கதை அமைத்தது இயக்குனரின் புத்திசாலித்தனம்.
இடைவேளைக்குப் பிறகான மருத்துவமனை காட்சிகளை பரபரப்புக்காக திரும்ப திரும்ப காட்டப்படுவதையும், தேவையில்லாத நாயகியின் பிராமணச் சமூகத்தை தூக்கிப் பிடிக்கும் வசன திணிப்பையும் தவிர்த்திருக்கலாம்.
கடவுளை மீறிய ஒரு சக்தி இல்லை என்கிற உண்மையை மெய் சிலிர்க்கும் காட்சிகளோடு படமாக்கித் தந்திருக்கிறார் இயக்குனர் தினேஷ் பாபு.
கிரிஷ்ணம் – சிலிர்ப்பு