விஜய் சேதுபதி படத்தில் இணைந்த தன்ஷிகா!
கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்துவது தான் புத்திசாலித்தனம். அந்த வகையில் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார் தன்ஷிகா.
அதனால் தான் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் ‘லாபம்’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார்.
மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகும் இந்தப்படத்தில் அவரது கதாபாத்திரமும் தோற்றமும் புதுமையாக இருக்குமாம். குறிப்பாக படத்தில் அவரது தோற்றத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். இப்படி ஒரு மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்து கொண்ட தன்ஷிகா படம் பற்றி மேலும் கூறியதாவது,
“ஜனநாதன் சாரின் படங்கள் வெறும் கமர்சியல் அம்சத்தோடு நின்று விடுவதில்லை. அதைத் தாண்டிய சமூக சிந்தனை அவரது படத்தில் இருக்கும். லாபமும் அப்படியான படம் தான்.
விவசாயிகளின் வாழ்நிலையை பேசுவதோடு, வெள்ளையர்கள் காலத்தில் இருந்து நம் விவசாய மக்களின் உழைப்பு எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது என்பதை படம் அழுத்தமாகப் பேசுகிறது. அன்று விவசாயிகளுக்கு எதிராகப் போடப்பட்ட விதை இன்று வரையிலும் எப்படி வளர்ந்துள்ளது என்பதை மிக அற்புதமாக படம் பேசும்.
இப்படத்தில் விஜய்சேதுபதியை மக்களுக்கு ரொம்ப பிடிக்கும். அவர் ஒவ்வொரு படங்களிலும் தனது வெவ்வேறு பரிணாமங்களை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். மக்களும் ரசிக்கிறார்கள். எனக்கு எது சரின்னு படுகிறதோ அதைச் செய்து வருகிறேன் என்று வெளிப்படையாகச் சொல்லும் நேர்மையாளர் அவர்.
இப்போது பெண்கள் முதன்மை பாத்திரம் ஏற்று நடிக்கும் படங்கள் அதிகமாக வருகிறது. மக்களும் அதைக் கொண்டாடி வருகிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. லாபம் படத்தை தியேட்டரில் வந்து பார்க்கும் போது உங்கள் மனதில் தோன்றும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும். “இப்படம் சமூகத்திற்கான லாபம்” என்றார் தன்ஷிகா.