நான் நடித்த படங்களில் பல நாடுகளில் வெளியாகும் முதல் படம் ‘சோலோ’ : துல்கர் சல்மான் பெருமிதம்

தமிழில் டேவிட் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பிஜாய் நம்பியார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி தமிழ், மலையாளம் என இருமொழிப் படமாக தயாரித்திருக்கும் படம் தான் ‘சோலோ.’
துல்கர் சல்மான் சோலோ ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் தன்ஷிகா, நேஹா ஷர்மா, ஸ்ருதி ஹரிஹரன், ஆர்த்தி வெங்கடேஷ் உட்பட பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கிறது.
‘ரெஃபெக்ஸ் குரூப்’ அனில் ஜெயின், தனது ‘ரெஃபெக்ஸ் எண்டர்டெயின்மண்ட்’ நிறுவனம் மூலம், கெட் அவே ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹீரோ துல்கர் சல்மான் பேசும் போது ”இதுவரைக்கும் நீங்கள் பார்த்தது வெறும் டீசர் தான். படம் இன்னும் உங்களை ஆச்சர்யப்படுத்தும். உலகத்தின் பல நாடுகளில் ஒரே நாளில் வெளியாகும் என் முதல் படம். ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் படத்தை எடுத்தது சாதாரண விஷயம் கிடையாது. ஒரே காட்சியை திரும்ப திரும்ப இரு மொழிகளிலும் எடுத்தது சவாலாக இருந்தது.
தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு, மராத்தி என பல இண்டஸ்ட்ரி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். சதீஷுடன் நடிக்கும்போது அவர் செய்யும் காமெடிகளில் சிரிக்காமல் இருப்பது எனக்கு பெரிய சவாலாக இருந்தது. பிஜாய் என்னை தேர்ந்தெடுத்தது என் பாக்கியம். படத்தை பற்றி கிடைக்கும் நேரங்களில் எல்லாம் நாங்கள் நிறைய விவாதிப்போம்” என்றார்.
”நீண்ட நாட்கள் கழித்து இரு மொழிகளில் தயாரான இந்த சோலோ என்ற பைலிங்குவல் படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. ‘புதிய முகம்’ படத்தை நான் மிரண்டு போயிருக்கிறேன். அந்த படத்தை இயக்கிய சுரேஷ் சந்திரமேனன் இந்த படத்தில் நடித்திருப்பது எனக்கு பெருமை.
சாய் மராத்தி சினிமாவில் பெரிய நடிகை, அவரை கன்வின்ஸ் செய்து நடிக்க வைத்ததே பெரிய விஷயம். நான்கு நாயகிகள் உட்பட பல மொழி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். சோலோ நான்கு கதைகளை உள்ளடக்கிய ஒரு ஆந்தாலஜி திரைப்படம். கதை சொல்லலில் அடுத்த கட்டத்துக்கு நகரும் ஒரு முயற்சி. தமிழ், மலையாளம் ரசிகர்கள் சிறந்த, புது முயற்சிகளை ஆதரிக்கிறார்கள் என்பதில் பெருமைப்படுகிறேன். இந்த படத்தை பற்றிய உங்களின் எல்லா விமர்சனங்களையும், பாராட்டுகளையும் வரவேற்கிறோம்” என்றார் இயக்குனர் பிஜாய் நம்பியார்.
சந்திப்பில் தயாரிப்பாளர் அனில் ஜெயின், நடிகர் சுரேஷ் சந்திர மேனன், நாயகி ஆர்த்தி வெங்கடேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.