தடையை உடைத்து வெளியாகும் ‘மெரினா புரட்சி’

Get real time updates directly on you device, subscribe now.

டந்த 2017ல் மெரினாவில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர். இந்த மாபெரும் போராட்டம், மெரினா புரட்சி என்ற பெயரில் படமாக தயாராகியுள்ளது. நாச்சியாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை எம்.எஸ்.ராஜ் இயக்கியுளார்.

யூ-டியூப் ‘புட் சட்னி’ புகழ் ராஜ்மோகன், மெரினா புரட்சியில் பங்கெடுத்த நவீன், சுருதி மற்றும் பலர் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் படத்தொகுப்பு செய்துள்ளார். அல்ருஃபியான் இசையமைத்துள்ளார்.

தணிக்கை அதிகாரிகளால் சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டு, ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்ட இந்தப்படம், பின் நீதிமன்ற கதவுகளை தட்டி ஒரு வழியாக சென்சார் ‘யு’ சான்றிதழ் பெற்று ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

இந்த வலி மிகுந்த பயணம் குறித்து இயக்குனர் எம்.எஸ்.ராஜ் நம்மோடு பேசியதாவது,

“2017ல் மெரினாவில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சி போராட்டம் நடத்தினர். மெரினாவில் பல லட்சம் பேர் ஒன்று கூடினாலும், அவர்களை இங்கே ஒன்றுகூடும்படி தன்னெழுச்சியாக வரவழைத்தது வெறும் 18 இளைஞர்கள் தான். மற்றபடி நடிகர்களோ எந்த இயக்கத்தை, அமைப்பை சேர்ந்தவர்களோ அல்ல.. அந்த 18 பேருக்கும் என்ன நோக்கம், மக்களை எப்படி திரட்டினார்கள், வெற்றிகரமாக இந்த போராட்டத்தை எப்படி முடித்தார்கள் என இதில் கூறியுள்ளோம்.

இந்த ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்டது யார், அதன்பின்னால் உள்ள அரசியல் என்ன, இந்த போராட்டத்தை ஒடுக்க என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, அதை இளைஞர்கள் சாமர்த்தியாக எப்படி முறியடித்தார்கள், கடைசி நாள் போராட்டம் வன்முறைக்களமாக மாறியதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்கிற உண்மையெல்லாம் மக்களுக்கு தெரியவேண்டும் என்கிற நோக்கத்தில் தீவிரமாக புலனாய்வு செய்தே இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம்.

இந்த ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணம் பீட்டா என்றும், நாட்டு மாடுகளை அழிப்பதுதான் பீட்டாவின் குறிக்கோள் என்றும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பீட்டா இங்கே களமிறங்கியதே இன்னொரு தீவிரமான விஷயம் ஒன்றுக்காக. அதற்காக அவர்களுக்கு பல கோடி ரூபாய் எங்கே இருந்து கிடைத்தது..? அந்த பணத்தை கொண்டு எந்தெந்த அரசியல்வாதிகளை, எந்தெந்த நடிகர் நடிகைகளை அவர்கள் விலைக்கு வாங்கினார்கள், அதன் மூலமாக அவர்களை எப்படி தூண்டிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக இந்த தடையை வாங்கினார்கள் என்பதை இந்தப் படத்தில் புட்டுப்புட்டு வைத்துள்ளோம்.

இதன் பின்னணியில் ஒரு பிரபல நடிகை இருந்துள்ளதை இதில் அடையாளம் காட்டியுள்ளோம். அவரைப்பற்றிய உண்மை தெரியவரும்போது படம் பார்ப்பவர்களுக்கு இவரா அவர் என்கிற அதிர்ச்சி நிச்சயம் ஏற்படும். காரணம் ஜல்லிக்கட்டு மற்றும் பீட்டா விவகாரத்தில் குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே நமக்கு எதிரானவர்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். ஆனால் நமக்கு நன்கு தெரிந்த இன்னும் பலர் இதன் பின்னனியில் இருப்பது வெளியே தெரியவே இல்லை.

Related Posts
1 of 134

குறிப்பாக நமது ஜல்லிக்கட்டை தடைசெய்ய வேண்டும் என கூறி முக்கிய காரணமாக இருந்தவர்கள் இரண்டு தமிழர்கள் தான். அவர்கள் யாரென்பதை அதை இதில் பகிரங்கப்படுத்தி இருக்கிறோம். இதனாலேயே இந்தப்படத்திற்கு இங்கே சென்சார் சான்றிதழ் தரவே மறுத்தார்கள்.

மறு சீராய்வு குழுவிற்கு அனுப்பப்பட்டு அங்கே படம் பார்த்த நடிகை கௌதமியும் இதே போன்று சில காரணங்களை சொல்லி கையை விரித்து விட்டார். வேறு வழியின்றி நீதிமன்றத்தின் கதவை தட்டினோம். இந்த வருடம் ஜனவரி 7ஆம் தேதி படத்தை பார்த்து விட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது நீதிமன்றம்.

ஆனால் ஜன-17ஆம் தேதி இரண்டாவது மறு சீராய்வு குழு நடிகை ஜீவிதா தலைமையில் படத்தை பார்த்துவிட்டு சில இடங்களில் காட்சிகளை நீக்கும்படி கூறினார்கள் ..ஆனால் இந்தப்படத்தில் உண்மை அப்படியே இருக்கட்டும்.. பொய் என எதை நீங்கள் நினைக்கிறீர்களோ அதை மட்டும் நீக்கி விடுங்கள் என உறுதியாக கூறினோம்.

இந்தப்படத்தை பார்த்த அதிகாரிகள் ‘மத்திய அரசு’ என்கிற வார்த்தை வரும் இடங்களை எல்லாம் மியூட் செய்ய கூறிவிட்டனர். அப்படி சுமார் 18 இடங்களில் நாங்கள் மியூட் செய்துள்ளோம். ஆனால் அதன்பிறகும் உடனே சான்றிதழ் அளிக்காமல் காலம் தாழ்த்தி இதோ இப்போது மே மாதம் தான் சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

எந்த காரணத்தை கொண்டும் மத்திய அரசையும் பீட்டாவையும் விமர்சிக்கும் இந்தப்படத்தை வெளியாகவிடாமல் தணிக்கையின்போதே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்றுதான் சிலர் திட்டமிட்டு காய்களை நகர்த்தினார்கள். ஆனால் நீதிமன்றம் இதில் தலையிட்டதால் இனி படத்தை வெளியிடுவதை தடை செய்யமுடியாது என்பது அவர்களுக்கு தெளிவாக தெரிந்துவிட்டது.

இதற்கிடையே அமெரிக்காவில் உள்ள தமிழனரான ஜேசு சுந்தர மாறன் என்பவர் இந்தப்படத்தை வெளியிடுவதற்காகவே ஜெ ஸ்டியோஸ் எனும் நிறுவனம் துவங்கி அதன் மூலமாக கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், உள்ளிட்ட 11 நாடுகளில் சிறப்புக்காட்சியாக இந்தப்படத்தை திரையிட்டார்.. அனைத்து இடங்களிலும் படம் பார்த்தவர்கள் எங்களுக்கு ஆதரவான குரலையே எழுப்பினார்கள். இங்கிலாந்தில் இந்தப்படத்தை திரையிடுவதற்கு பீட்டா எதிர்ப்பு தெரிவிததபோது, கருத்து சுதந்திரம் அனைவர்க்கும் உண்டு என கூறி அதை பிரிட்டன் அரசு ஏற்க மறுத்து விட்டது.

அதேபோல சிங்கப்பூரில் இந்தப்படத்தை இந்தவருடம் மாட்டுப்பொங்கலன்று வெளியிட்டு விடவேண்டும் என தீவிரமாக செயல்பட்டோம்.. ஆனால் இங்குள்ளா அதிகார வர்க்கத்தினர் சிங்கப்பூரில் உள்ளவர்களுக்கு அழுத்தம் கொடுத்து தமிழர்கள் மொத்தமாக ஒரே இடத்தில் ஒன்று கூடினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதை காரணம் காட்டி திரையிட விடாமல் செய்தனர்.. அப்படியும் போராடி அன்றைய தினம் ஒரு காட்சியை திரையிட்டோம்.

எங்களுடைய நீண்ட நெடிய போராட்டத்தின் பயனாக இதோ இந்த மே மாத இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய தயாராகி வருகிறோம். 82 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப்படம் காலகாலத்திற்கும் உலகமே வியந்து பார்த்த நம் தமிழர்களின் மெரினா போராட்டம் குறித்து நினைவலைகளை அடுத்து வரும் தலைமுறையினர் மத்தியில் எழுப்பிக்கொண்டே இருக்கும்.. அப்படி ஒரு வரலாற்று பதிவாக இந்தப்படம் இருக்கும்” என்றார்.