மாயா – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

maaya

Rating : 3.6/5

தாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்பதால் ஒரு பிரபலமான நடிகையை வைத்து இயக்கலாம் என்பது தான் ‘மாயா’ இயக்குநரின் திட்டம்.

நயன்தாராவுக்கும் ஒரு பயங்கரமான பேய்ப்படத்தில் நடிக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் ஆசை. இருவரும் சந்தித்தார்கள். கதையை கேட்ட மாத்திரத்தில் கால்ஷீட் ரெடி என்றார் நயன்தாரா.  இதோ இந்தப்படம் சரியான படமாக அமைந்து விட்டது.

ஒரு காமெடிப்படம்னா அதுல காமெடி இருக்கணும்… அதேமாதிரி தான் திகில் படம்னா அதுல திகில் இருக்கணும். அப்படி ஒரு பயங்கரமான திக் திக் உணர்வை முழுமையாகத் தரும் படம் தான் இந்த ‘மாயா’.

கணவருடன் ஏற்பட்ட ஈகோ காரணமாக தனது தோழி லட்சுமி ப்ரியா வீட்டில் தங்கிக் கொண்டே சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு தேடுகிறார் நயன்தாரா. திருமணமாகி விட்ட ஒரே காரணத்தால் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையாமல் போகிறது.

கைகுழந்தையோடு வாழ்க்கையை நகர்த்திச் செல்ல, கடன் வாங்கி கடன் வாங்கி அது கழுத்தை நெரிக்கிறது. கடன்காரன் வீட்டைத் தேடிவரும் போதெல்லாம் அவமானத்தில் கூனிக்குறுகும் நயன்தாராவுக்கு லட்சுமி ப்ரியா உதவி இயக்குநராக வேலை செய்யும் ‘இருள்’ படத்தின் மூலம் அதிர்ஷ்டம் அடிக்கிறது.

ஆமாம், அந்தப் படத்தை தனியாக உட்கார்ந்து பார்ப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் என்கிற போட்டியை அறிவிக்கிறார் படத்தின் இயக்குநர் மைம் கோபி.

ஏற்கனவே அந்தப் போட்டியில் கலந்து கொள்ள வந்தவர் மர்மமான முறையில் தியேட்டரிலேயே இறந்து போக, அந்த ஒரு அசம்பாவிதத்தை காரணம் காட்டி வேண்டாம் என்கிறார் தோழி லட்சுமி ப்ரியா. அதையும் தாண்டி கடனை அடைக்க வேறு வழியே இல்லாத நயன்தாரா படம் பார்க்க கிளம்புகிறார்?

அவருடைய நிலை என்னவானது? இது ஒரு பக்கம்.

‘வெளிச்சம்’ என்ற வார இதழில் ஓவியராக இருக்கும் ஆரி ‘மாயவனம்’ என்கிற தொடர்கதைக்கு ஓவியம் தீட்டுகிறார். அந்தக் கதைக்கான ஓவியத்தை அவர் தீட்டிக் கொண்டிருக்கும் போதே வீட்டில் சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. எந்தக் காரணத்தைக் கொண்டும் மாயாவின் பெயரை நள்ளிரவில் உச்சரிக்கக் கூடாது என்று சொல்லியும் கேட்காமல் அவரது ஆட்டோ டிரைவரான நண்பர் உச்சரிக்கிறார்.

அந்த தொடர்கதையின் இறுதிப் பாகத்தை முடிப்பதற்காக சில ஆதாரங்களைத் தேடி சென்னைக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் காட்டுப்பகுதியான ‘மாயவனம்’ பகுதிக்கு ஆரியின் ‘ஆட்டோ’ நண்பருடன் செல்கிறார் உதயபானு மகேஸ்வரன். போனவர் மர்மமான முறையில் இறந்து போகிறார். கூடவே போன ஆரியின் நண்பனும் வீட்டுக்கு திரும்பிய அடுத்த நாளே மாடியிலிருந்து விழுந்து இறந்து போகிறார்.

அப்படி என்னதான் அந்த ‘மாயவனம்’ காட்டுப்பகுதிக்குள் இருக்கிறது என்கிற மர்ம முடிச்சுகளுக்கு விடை தேடிப் போகிறார் ஆரி. இது இன்னொரு பக்கம்.

இப்படி இரண்டு வெவ்வேறு கலர்களில் பயணிக்கும் கதைகளை ஒரே நேர்கோட்டில் இணைக்கிறது கிளைமாக்ஸ்.

Related Posts
1 of 2

கதையின் நாயகி நயன்தாரா தான்.

கைக்குழந்தையை வைத்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்திச் செல்ல ஒரு இளம் பெண் எவ்வளது தூரம் போராட வேண்டியிருக்கிறது என்பதை மிக இயல்பாக பிரதிபலித்திருக்கிறார். கோபம், ஏமாற்றம், பாசம், துக்கம், பயம் என பலவித முகபாவங்களை ஒரு சேர காட்டுகிறது அவரது கேரக்டர்.

ஓவியராக வரும் ஆரியின் சின்னச் சின்ன எக்ஸ்பிரசன்கள் கூட அருமை. கிளைமாக்ஸில் அவர் யார் என்கிற விபரம் தெரிய வரும் போது ரசிகர்களுக்கு ஷாக்கிங் சன்பென்ஸ்.

நயன்தாராவின் தோழியாக வரும் லட்சுமி பிரியா உண்மையான தோழியாக கவனத்தை ஈர்க்கிறார்.

இயக்குநராக வரும் மைம் கோபி, போலீஸ் அதிகாரியாக வரும் ரோபோ சங்கர், பத்திரிகை ஆசிரியராக வரும் அம்ஜத் என எல்லா கேரக்டர்களுமே சும்மா வந்து போவது போல் இல்லாமல் கேரக்டரின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன.

பேய் படம் என்றாலே பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தான் முக்கியம். அந்த வகையில் இந்தப்படத்தின் பெரிய பலமே இந்த இரண்டும் தான். ‘மாயவனம்’ காட்டுப்பகுதியை அகன்ற திரையில் பார்க்கும் போதே அதன் அட்மாஸ்பியர் உள்ளுக்குள் பயத்தை உண்டு பண்ணி விடுகிறது.

ஆரியின் போர்ஷன்களுக்கு ஒரு கலர், நயன்தாராவின் போர்ஷன்களுக்கு ஒரு கலர் என இரண்டு விதமான கலர் டோன்களை காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்.

ரோன் ஈதன் யோகன் இசையில் பின்னணி இசை பட படக்க வைக்கின்றன. குறிப்பாக இரவுக் காட்சிகளில் விளக்கு எரிந்து எரிந்து அணையும் காட்சிகளிலும், மழை பெய்கின்ற காட்சிகளிலும் அப்படி ஒரு மிரட்டல்.

யாரிடமும் உதவியாளராக பணியாற்றிய அனுபவம் இல்லாமல் சில குறும்படங்களை இயக்கிய அனுபவங்களை மட்டுமே வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அஸ்வின் சரவணன்.

ஆச்சரியம் தான். பேசிப்பேசியே பயமுறுத்தும் பேய்ப்படங்களுக்கு மத்தியில் எந்தக் கேரக்டரையும் அதிகம் பேச விடாமல் டெக்னிக்கல் விஷயங்களில் அதிக சிரத்தை எடுத்து அவைகளைக் கொண்டே பயமுறுத்துகிறார்கள்.

இடையில் கொஞ்சம் கவனத்தை சிதற விட்டாலும் குழப்பம் தருகிற கதையாக இருந்தாலும், கிளைமாக்ஸில் எந்தக் குழப்பமும் இல்லாமல் வெவ்வேறு திசையில் பயணிக்கும் திரைக்கதையை ஒரே நேர்கோட்டில் அழகாக முடிச்சுப் போட்டு பிரம்மிக்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் அஸ்வின் சரவணன்.

‘பேய்ப்படம் தானே..?

நல்லா குலுங்க குலுங்க சிரிச்சிட்டு வரலாம்’னு கௌம்பிப் போனீங்கன்னா உங்கள் ஹார்ட் பீட்டை சில நம்பர்கள் எகிற வைத்துத்தான் அனுப்புவாள் இந்த ‘மாயா’.