தமிழ், ஆங்கிலத்தில் சிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’

Get real time updates directly on you device, subscribe now.

ஃபாக்ஸ் க்ரோ ஸ்டூடியோஸ் சார்பில் ஜே. ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘மாயன்’.

இப்படத்தின் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் இந்தியாவிற்கான மலேசிய தூதர் லோகிதாசன் தன்ராஜ், ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் நிறுவனர் ‘டத்தோ’ மோகன சுந்தரம், ‘டத்தின்’ குணவதி மோகன சுந்தரம், இணை தயாரிப்பாளர் ‘டத்தோ ’கணேஷ் மோகன சுந்தரம், படத்தின் நாயகன் வினோத், நடிகர் சௌந்தர், நாயகி ப்ரியங்கா அருள்முருகன், படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜே ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ராஜேஷ் கண்ணன் பேசுகையில், “மாயன் என்றால் நாம் அனைவரும் மெக்சிகோவில் உள்ள மாயன் கலாச்சாரத்தையும், மாயன் காலண்டரையும் நினைத்துக் கொள்கிறோம். மாயன் என்று எடுத்துக் கொண்டால் மூவாயிரம் வருட வரலாறு கொண்டது. தமிழ் என்று எடுத்து கொண்டால் இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் பழமை கொண்டது. ஆனால் சிவன் என்று எடுத்துக் கொண்டால் அதற்கு மேல் செல்கிறது என்னைப் பொருத்தவரை சிவன் தான் மாயன்.

இந்தப்படம் ஏன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாராகிறது என்றால், இதன் திரைக்கதை உலகின் எந்த நிலவியல் பின்னணியிலும் பொருந்தக்கூடியது. அது சீனாவாக இருக்கட்டும். லாஸ் ஏஞ்சல்ஸாக இருக்கட்டும். மெக்சிகோவாக இருக்கட்டும் எந்த புவியியல் பின்னணியிலும் இந்த கதையின் தன்மை பார்வையாளர்களுடன் இணைந்துவிடும்.

நம்முடைய பெருமைகளையும் கலாச்சாரத்தையும் நம்முடைய இந்திய மொழிகளை விட ஆங்கில மொழியில் சொன்னால் நன்றாக இருக்கும். அத்துடன் உலகம் முழுவதும் செல்லும் என்ற காரணத்தினால் இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்குகிறோம். இதற்கு இணை தயாரிப்பாளரும் ஒப்புக் கொண்டார்.

சின்ன வயதில் தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும் என்று சொல்லி வளர்த்தார்கள். அது உண்மையா?பொய்யா? என்பதை சுவராசியமாகச் சொல்லியிருக்கிறோம். கர்மா என்ற ஒன்றிருக்கிறது. அதனை செயல்வினை என்றும் சொல்லலாம்.நாம் நல்லசெயல்களை செய்தால் கர்மா, செயல்வினை ஆகிறது. தவறு செய்தால் கர்மா, செய்வினை ஆகிறது. மனிதர்களில் சமநிலையற்றவர்களின் சாபம் குறித்த வலிமையையும் சொல்லியிருக்கிறோம்.

முதலில் மனிதர்கள் சிங்கம் போல் இருந்தார்கள். சிங்கம் பசிக்கும் போது வேட்டையாடும். பின்னர் புசித்து, பசி அடங்கியவுடன் மீதியை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிடும். ஆனால் மனிதர்கள் தற்போது கழுதை புலி போலாகிவிட்டார்கள். கழுதை புலி என்னசெய்யும் என்றால், வேட்டையாடிவிட்டு, சாப்பிட்டுவிட்டு, மீதமிருப்பதை நாளைக்கு பசிக்கும் என்று சொல்லி அதை எடுத்துக் கொண்டு செல்லும்.அதனால் அதனை சுற்றி எப்போதும் மிருகங்களின் பிணம் இருக்கும். அதை போல் மனிதர்கள் தற்போது தன்னைச் சுற்றி எப்போதும் பணத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது போன்ற ஒரு தருணத்தில் ஆதி யோகியான சிவனுக்கு. இவனையெல்லாம் ஏன் படைத்தோம்?என்று ஒரு கணம் சிந்தித்தால்… அது என்னவாகஇருந்திருக்கும்? எப்படியிருந்திருக்கும்? அதன் பின் விளைவு என்னவாக இருக்கும்? அது தான் இந்த மாயன். மாயன் ஒரு ஃபேண்டசி. மாயன் ஒரு ரியாலிட்டி இதை வேறொரு கோணத்தில் சுவராசியமாக சொல்வது தான் மாயன். சிவனை இந்த படத்தில் ஸ்டைலீஷாக காட்ட நினைத்தேன். அதனால் அதற்கு ஏற்ற வகையில் இருந்த வினோத்தை நாயகனாக்கியிருக்கிறேன்.” என்றார்.

நிகழ்ச்சியின் முடிவில் மாயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டது.