எம்.எஸ்.பாஸ்கர் மகனுடன் காதலா? – கொந்தளித்த ’96’ கெளரி
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி , த்ரிஷா நடித்து இந்த வாரம் ரிலீசாகியிருக்கும் படம் ’96’.
பள்ளிக்கூட காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப் படத்தில் விஜய்சேதுபதியின் பள்ளிக்கூட வயது கதாபாத்திரத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்துள்ளார். அதேபோல் த்ரிஷாவின் பள்ளிக்கூட வயது கதாபாத்திரத்தில் பெங்களூரைச் சேர்ந்த புதுமுகம் கௌரி நடித்துள்ளார்.
படத்தைப் பார்த்தவர்கள் த்ரிஷா, விஜய் சேதுபதியை பாராட்டுவது போல், ஆதித்யா பாஸ்கர், கௌரியையும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ஆதித்யா பாஸ்கர் கௌரிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதோடு அந்த புகைப்படத்தின் கீழே பிறந்த நாள் வாழ்த்தை சொல்லி கூடவே ‘ஐ லவ் யூ’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அவருடைய அந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, இருவரும் நிஜக் காதலர்களாகி விட்டார்கள் என்று செய்திகள் பரவின.
இந்த விஷயம் கெளரியின் காதுகளை எட்டவும் கொந்தளித்து விட்டார்.
”ஆதித்யா பாஸ்கரும், நானும் காதலிக்கவில்லை. ராம் மற்றும் ஜானு கதாபாத்திரத்தில் திரையில் மட்டுமே காதலர்களாக நடித்தோம். நிஜத்தில் அல்ல. தவறான செய்திகள் பரப்புவதை நிறுத்தி கண்ணியம் காட்டுங்கள்” என்று செய்தி பரப்பியவர்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.