மெர்சல் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

MERSAL-REVIEW1

நட்சத்திரங்கள் : விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா மற்றும் பலர்

இயக்கம் : அட்லீ

வகை : ஆக்‌ஷன், ஃபேமிலி, த்ரில்லர்

சென்சார் சர்ட்டிபிகேட் : ‘U/A’

நேரம் : 2 மணி நேரம் 50 நிமிடங்கள்

RATING 3.5/5

, தனி ஒருவன், காக்கிச் சட்டை, குற்றம் 23 என மருத்துவத் துறையில் நடைபெறும் முறைகேடுகளையும், ஊழல்களையும் அம்பலப்படுத்திய படங்களின் வரிசையில் வந்திருக்கும் படம் தான் இந்த ‘மெர்சல்.’

படத்தின் முதல் காட்சியிலேயே மருத்துவத் துறையைச் சேர்ந்த நான்கு பேர் கடத்தப்படுகிறார்கள். அவர்களை கடத்தியது டாக்டர் விஜய் தான் என்று சந்தேகிக்கும் போலீஸ் அவரை கைது செய்து விசாரணை நடத்துகிறது.

ஆனால் அடுத்தடுத்து நடக்கும் விசாரணையில் கடத்தியது டாக்டர் விஜய் இல்லை. அவரைப் போலவே தோற்றத்தில் இருக்கும் மேஜிக் நிபுணரான இன்னொரு விஜய் என்று தெரிய வருகிறது.

ஏன் மருத்துவத் துறையில் பணியாற்றுபவர்களை மட்டும் அவர் கடத்துகிறார்? என்கிற கேள்விக்கு அந்த விஜய் விவரிப்பவை காட்சிகளாக விரிகிறது. அதைக் கேட்டு விசாரணை அதிகாரியான சத்யராஜே பேரதிர்ச்சியோடு கண் கலங்குகிறார்.

அந்தளவுக்கு மனசை உலுக்கிய அந்த சம்பவம் என்ன? என்பதை ப்ளாஷ்பேக்கில் வரும் அப்பா விஜய் தளபதி யின் காட்சிகளோடு மாஸ் பிளஸ் ஒரு நல்ல மெசேஜ் உள்ள படமாக முடிவது தான் கிளைமாக்ஸ்.

டாக்டர் மாறன் விஜய், மேஜிக் நிபுணர் வெற்றி விஜய், மதுரைக்கார அப்பா  தளபதி விஜய் என மூன்று விதமான கெட்டப்புகளில் செம மாஸ் காட்டியிருக்கிறார் விஜய்.

சிறந்த மருத்துவர் விருது வாங்க பாரீஸ் போகும் விஜய்யை விமான நிலையத்திலேயே அவருடைய வேஷ்டி – சட்டை லுக்கைப் பார்த்து சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்துவதும், அப்படி அவமானப்படுத்தும் போலீஸ் அதிகாரிகளையே பின்னர் ஸாரி கேட்க வைத்து மிகுந்த மரியாதையோடு அனுப்பி வைக்கிற காட்சியிலும் தியேட்டர்களில் விசில் சத்தம் காதைப் பிளக்கிறது. இப்படி மூன்று விதமான விஜய்யும் தனித்துவமான நடிப்பில் சீனுக்கு சீன் கைதட்டல்களை அள்ளிக் கொள்கிறார்கள்.

Related Posts
1 of 45

குறிப்பாக ஜி.எஸ்.டி வரியைப் பற்றியும், பண மதிப்பிழப்பால் மக்கள் பாதிக்கப்பட்டது பற்றியும் திரையில் அவர் தோன்றி பேசுகிற போதும் அரசாங்க மருத்துவமனைகள் மீது ஆளும் கட்சிக்கு இல்லாத பாரா முகத்தையும் பற்றிப் பேசுகிற காட்சிகளில் எழுகிற கைத்தட்டல்களும், விசில் சத்தங்களும் அடங்க வெகு நேரம் ஆகிறது.

இப்படி படம் முழுக்க ஜல்லிக்கட்டு போராட்டம் ஆரம்பித்து மருத்துவத்தை வியாபாரமாகப் பார்க்கும் தனியார் மருத்துவமனைகளின் பண வெறி உட்ப சமூகத்தில் நடக்கின்ற பல அவலங்களை ரமணகிரி வாசன் எழுதியிருக்கும் சாட்டையடி வசனங்களால் கோர்த்திருக்கிறாட் அட்லீ.

காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என படத்தில் மூன்று ஹீரோயின்கள். மூவரில் நடிப்பில் ஸ்கோர் செய்வது சமந்தாவும், பிளாஷ்பேக்கில் வரும் நித்யா மேனனும் தான். காஜல் ஒரு சில காட்சிகளே வருகிறார். அதுவும் வலிந்து திணிக்கப்பட்டது போலத்தான் இருக்கிறது. இப்படி ஒரு சில காட்சிகளே நடிப்பதற்கு அதிக சம்பளம் வாங்குகிற காஜல் தேவை தானா?

சமந்தா – விஜய் ரொமான்ஸ் காட்சிகள் கொள்ளை அழகு என்றால் ப்ளாஷ்பேக்கில் அப்பா விஜய்யின் மனைவியாக வரும் நித்யாமேனன் காட்சிகள் செண்டிமெண்ட் குவியல்.

படத்தில் ஆரம்பக் காட்சியில் வடிவேலுவைத்தான் காட்டுகிறார்கள். அவரைப் பார்த்த மாத்திரத்தில் சிரிக்கத் தயாராகிறோம். ஆனால் அவர் தான் காமெடி செய்வேனா? என்கிறார்.

மதுரைக்கார விஜய் ஜல்லிக்கட்டு காளையாக ஆக்‌ஷன் காட்சிகளில் துள்ளி வருகிறார். இடைவேளைக்குப் பிறகு நீளமான அந்தக் காட்சிகளை கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம் எடிட்டர் சார்.

ஸ்பைடர் படத்தில் கொடூர வில்லனாக முகம் காட்டிய எஸ்.ஜே சூர்யா இதிலும் ஒரு மருத்துவராக கொடூர வில்லத்தனம் காட்டியிருக்கிறார்.

”மருத்துவம் என்பது வியாபாரம். இனி வரும் காலங்களில் அது மக்களை நம்ப வைக்கும் விதமாக உருவெடுக்கும். 5 ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கிறவர் நல்ல டாக்டர் இருந்தாலும், யார் 5,000, 10000 என்று அதிக பணத்தை வாங்கிக் கொண்டு மருத்துவம் பார்க்கிறார்களோ? அந்த மருத்துவர் தான் சிறந்த மருத்துவர் என்று உங்களை நம்ப வைக்கிற அளவுக்கு மருத்துவத்துறை மக்கள் மனதை மாற்றும் என்று சொல்கிற காட்சி  தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடும் மக்களுக்கு எச்சரிக்கை மணி.

அதேபோல சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் நவீனயுகப் பெண்களின் மனமாற்றம் எந்தளவுக்கு மருத்துவத்துறை பணம் கொழிக்கும் இடமாக மாற்றிக் கொண்டிருக்கிறது என்பதையும் காட்சிப்படுத்தி திகிலைக் கூட்டியிருக்கிறார்கள்.

ஒரு சில காட்சிகளே வந்தாலும் திருப்புமுனைக் காட்சியில் நெகிழ வைக்கிறார் ஆட்டோ டிரைவராக வரும் காளி வெங்கட்.

கலர்ஃபுல்லாக ஜொலிக்கிறது விஷ்ணுவின் ஒளிப்பதிவு. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ஆளாப்போறான் தமிழன்’ பாடலைத் தவிர மற்ற பாடல்கள் சுமார் ரகம் தான்.

இதுவும் அட்லி பழைய தமிழ்ப்படத்திலிருந்து சுட்ட கதை தான் என்கிற விமர்சனங்கள் வந்தாலும் வரலாம். அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவத்துறையில் நடக்கின்ற முறைகேடுகளை அம்பலப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு குடும்பத்தோடு சென்று பார்க்கக் கூடிய ஒரு  மாஸ் பிளஸ் மெசேஜ் உள்ள படமாகவும் தந்திருக்கிறார் அட்லீ.

மெர்சல் – மாஸ் மிரட்டல்!