மேயாத மான் – விமர்சனம்
நட்சத்திரங்கள் : வைபவ், ப்ரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா மற்றும் பலர்.
இயக்கம் : ரத்ன குமார்
வகை : காமெடி, மியூசிக்கல், ஃபேமிலி ட்ராமா
சென்சார் சர்ட்டிபிகேட் : ‘U/A’
கால அளவு : 2 மணி நேரம் 27 நிமிடங்கள்
RATING 3.5/5
‘மெர்சல்’ படத்தின் உச்சக்கட்ட கொண்டாட்டத்துக்கு நடுவே துணிச்சலாக துள்ளி வந்திருக்கும் இன்னொரு தீபாவளிப் படம் தான் ‘மேயாத மான். ‘
மெர்சலைக் கொண்டாடுகிற அதே தருணத்தில் இந்த ‘மேயாத மான்’ படத்தையும் நீங்கள் பார்க்கப் போனால் கண்டிப்பாக இந்தப்படம் உங்களை ஏமாற்றாது என்று உறுதியாகச் சொல்லலாம். அந்தளவுக்கு வழக்கமான காதல் கதையாக இருந்தாலும் குடும்பத்தோடு சென்று பார்த்து ரசித்து வயிறு வலிக்க சிரித்து விட்டு வரக்கூடிய அளவுக்கு ஒரு ஜனரஞ்சகமான படமாக திரைக்கதையில் யதார்த்தங்கள் நிறைந்த சுவாரஷ்யங்களை அள்ளித் தந்திருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் ரத்னகுமார்.
‘மேயாத மான்’ என்ற பெயரில் இசைக்கச்சேரி குழு ஒன்றை நடத்தி வரும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஹீரோ வைபவ். அவர் பணக்கார வீட்டுப் பெண்ணான ஹீரோயின் ப்ரியா பவானி சங்கரை மூன்று வருடங்களாக ஒரு தலையாக காதலிக்கிறார். ( அதாவது இதயம் முரளி பாணியில்! ) அவருடைய இந்தக் காதல் சமாச்சாரம் பிரியாவுக்கு தெரியாமலே போய் விடவே, வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய சம்மதம் சொல்லி விடுகிறார்.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் நொந்து நூடுல்ஸ் ஆகும் வைபவ் தன் காதல் நிறைவேறாத சோகத்தில் ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் நின்று தற்கொலை செய்யத் தயாராகிறார்.
தற்கொலை செய்ய நிற்கும் தன் நண்பனை காப்பாற்ற வேண்டுமென்பதற்காக வைபவ்வின் இரண்டு நண்பர்களில் ஒருவரான விவேக் பிரசன்னா ப்ரியாவிடம் சென்று ”நான் எழுதிக் கொடுத்ததை அப்படியே நீ அவனோடு போனில் பேசினால் போதும். அதன்பிறகு அவனை தற்கொலையிலிருந்து காப்பாற்றி விடுவேன்” என்று கெஞ்சுகிறார்.
ப்ரியாவும் இரக்கப்பட்டு அவர் எழுதிக் கொடுத்ததை அப்படியே வைபவ்விடம் போனில் பேசி அவருடைய மனதை மாற்றுகிறார். அதோடு ப்ரியா வைபவ்வை கொஞ்சம் கடுமையான வார்த்தைகளாலும் திட்டுகிறார்.
அதை போனில் கேட்கும் வைபவ் ”இப்படி கேவலமா நம்மை திட்டுற ஒரு பெண்ணையா மூன்று வருடங்களாக உருகி உருகி ஒருதலையாகக் காதலித்தோம்?” என்று வருந்துவதோடு அவரை வெறுக்கவும் ஆரம்பிக்கிறார்.
அதன்பிறகு ப்ரியாவை எங்கு பார்த்தாலும் வெறுக்கும் அதே வைபவ் எப்படி மீண்டும் அதே ப்ரியாவை காதலித்து, திருமணம் செய்து குழந்தை குட்டி என்று செட்டிலாகிறார்? என்பதே கிளைமாக்ஸ்.
‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்துக்குப் பிறகு ஒரு மிடில் கிளாஸ் இளைஞராக இந்தப் படத்தில் வருகிறார் வைபவ். படத்தில் மூன்று வருடங்களாக காதலைச் சொல்லாமலேயே இருப்பதால் அதற்கு பொருத்தமாக இதயம் முரளி என்று அவருடைய கேரக்டருக்கு பெயரை பொருத்தமாக வைத்திருக்கிறார்கள். வட சென்னையின் தர லோக்கல் பாஷயை எந்த தடுமாற்றமும் இல்லாமல் பேசுவதும், அந்தக் கேரக்டராகவே முழுமையாக மாறியிருப்பதுமாக நடிப்பில் சிக்ஸர் அடிக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘காதல் முதல் கல்யாணம்’ வரை புகழ் ப்ரியா பவானி சங்கர் தான் இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். நடிப்பிலும், கொள்ளை அழகிலும் சொக்க வைக்கிற அதே சமயத்தில் வைபவ்வை விட கொஞ்சம் வயசு அதிகமானவராகவும் தெரிகிறார்.
வைபவ்வின் நண்பராக வரும் விவேக் பிரசன்னாவும், வைபவ்வின் தங்கையாக வரும் இந்துஜாவும் போட்டி போட்டிக் கொண்டு நடிப்பில் நம்மை கவர்கிறார்கள். அண்ணன் – தங்கச்சி பாசத்துக்கு வைபவ்வும் இந்துஜாவும் சிறந்த உதாரணம் என்றால், அதே போலவே நல்ல நட்பு என்பதற்கு வைபவ்வும் – விவேக் பிரசன்னாவும் ஆகச் சிறந்த உதாரணம்.
குறிப்பாக நண்பனின் தங்கச்சியை தன்னுடைய தங்கச்சியாகவே சிறு வயதிலிருந்து பார்த்து விட்ட விவேக் பிரசன்னாவை அவள் குமரியானதும் தன்னை காதலனாக பார்ப்பது தெரிய வரவும், அந்த உணர்வை உடனே ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுமாறுகிற இடங்கள் ஆகச்சிறப்பு.
படம் ஆரம்பித்ததிலிருந்து வணக்கம் டைட்டில் கார்டு போடுகிற வரை மனசு விட்டுச் சிரிக்க வைக்க எக்கச்சக்க காட்சிகள் உண்டு. ஆனால் அப்படிப்பட்ட காமெடியை செய்வதற்கென்றே தமிழ்சினிமாவில் இருக்கிற சூரி, யோகி பாபு, தம்பி ராமைய்யா போன்ற எந்த காமெடி நடிகர்களும் இந்தப் படத்தில் இல்லை என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. கதையோடு ஒன்றி வரும் காட்சிகளில் ஹீரோ வைபவ் மட்டுமில்லாமல் படத்தில் வருகிற எல்லா கேரக்டர்களுமே நம்மை விலா நோக சிரிக்க வைக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணன் – பிரதீப் இருவரும் வட சென்னைக்கே உரிய பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார்கள். பாடல்களில் சந்தோஷ் நாராயணின் முத்திரை தெளிவாகத் தெரிகிறது.
பொதுவாக வட சென்னை என்றால் அழுக்கு, வன்முறை, கத்தி, ரத்தம் போன்ற அடையாளங்களைத்தான் பல படங்கள் காட்டியிருக்கின்றன. ஆனால் இதில் அப்படிப்பட்ட அபத்தங்கள் எதுவுமே இல்லாமல் எங்க மனசும் ஈரம் தான், எங்களுக்கும் பாசம், கோபம், காமெடி எல்லா உணர்வுகளும் உண்டு என்று காட்டுகிற விதமாக குடும்பத்தோடு பார்த்து ரசித்து சிரிக்க ஒரு ஜாலியான படமாகத் தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரத்னகுமார்.
பின் குறிப்பு : ‘மது’ என்ற பெயரில் தான் எடுத்த குறும்படத்தைத் தான் ‘மேயாத மான்’ என்று பெயர் மாற்றி திரைப்படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார்.