இங்க எப்படி ரஜினி சாரோ? அப்படித்தான் அங்க மோகன்லால் சார்! : நெகிழும் ‘புலி முருகன்’ பாலா

Get real time updates directly on you device, subscribe now.

mohanlal1

ரு நல்ல திரைப்படம் தனக்கான ஆட்களைத் தானே தேடிக் கொண்டு விடும். அப்படித்தான் ‘புலிமுருகன்’ என்கிற மொழிமாற்றுப் படம் தமிழில் வரும்போது ஆர்.பி.பாலாவைத் தேடிக் கொண்டு தனதாக்கிக் கொண்டுள்ளது.

கேரளாவில் 180 கோடி ரூபாய் என்று வசூலில் வரலாற்றுச் சாதனை படைத்த படம் தமிழில் 350 திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழில் இதை ஒரு நேரடித் தமிழ்ப்படமாக மாற்ற உரிய நபரைத் தேடிய போது படத்தை மலையாளத்தில் தயாரித்த முலக்குப் பாடம் பிலிம்ஸ் நிறுவனத்தினர் ஆர்.பி.பாலாவை அழைத்திருக்கிறார்கள். வசனம் எழுத ஒப்பந்தம் செய்த பாலாவையே டப்பிங் பணிகளுக்கும் தேர்வு செய்தது மகிழ்ச்சி என்றும், இவர் தகுதியான நபர்தான் என்றும் கேரள சூப்பர்ஸ்டார் மோகன்லால் பாராட்டியுள்ளார்.

அப்படிப்பட்ட ஆர்.பி.பாலாவுடன் இனி பேசுவோம்..!

டப்பிங் கலைஞரான நீங்கள் வசனகர்த்தா, தயாரிப்பாளர் என்று ஆனது எப்படி?

நான் டப்பிங் துறையில் 22 ஆண்டுகளாக இருக்கிறேன். டப்பிங் என்றால் காட்சிக்கேற்ப குரல் கொடுப்பதல்ல. உதட்டசைவுக்கு ஏற்ப உரிய தொனியில் பொருத்தமான மொழியில் குரல் கொடுப்பது. இப்படிப் பல நடிகர்களுக்கும் டிவி, தொடர்களுக்கும், விளம்பரங்களுக்கும் குரல் கொடுத்திருக்கிறேன்.

அடிப்படையில் நான் ஒரு சவுண்ட் இன்ஜினியர், எடிட்டர் எனவே இதுபற்றி நுணுக்கமாகக் கற்றுக் கொண்டேன். பிறகு வசனத்தின் மீது ஆர்வம் பிறந்தது. தெலுங்கில் 1500 படங்களுக்கு வசனம் எழுதியவர் வசந்த்குமார். அவருடன் இருந்து வசனம் எழுதுவதன் நுணுக்கத்தைக் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு பிடித்தப் படங்களுக்கு வசனம் எழுதினேன். படங்களும் தயாரித்தேன். இப்படி 8 படங்கள் தயாரித்தேன். அவற்றில் பல்வேறு அனுபவங்கள் கிடைத்தன. பொருளாதார இழப்பும் ஏற்பட்டது. எல்லாவற்றையும் பாடமாகவே எடுத்துக் கொண்டேன்.

‘புலிமுருக’னுக்குள் புகுந்தது எப்படி?

‘பாகுபலி’ ஒரு டப்பிங் படமாக பெரிய வெற்றி பெற்ற படம். அதைப் போல ‘புலிமுருகன்’ படத்தையும் தமிழில் கொண்டுவர நினைத்தார்கள். அதற்கு
‘பாகுபலி’ போல இதற்கு பெரிய சரியான நபரைத்தேடி இருக்கிறார்கள். அப்படித்தான் மலையாளத்தில் படத்தைத் தயாரித்த முலக்குப் பாடம் டோமிச்சன்
அவர்கள் என்னை அழைத்தார்கள். சரியான புரிதலுடன் வசனம் எழுத ஒப்பந்தம் செய்தேன். படம் பிடித்துப் போகவே தமிழில். டப்பிங் பணிகளின் பொறுப்பேற்ற போது மோகன்லால் சாரைப் பார்க்கப் போனேன்.

போகும் போது நான் வெறுமனே செல்லவில்லை. ஏற்கெனவே படத்தை மலையாளத்தில் பார்த்திருந்த நான் மோகன்லால் சம்பந்தப்பட்ட சில வசனங்களை தமிழில், மலையாளத்தில், ஆங்கிலத்தில் எல்லாம் எழுதி டம்மியாகக் குரல் பதிவு செய்து கொண்டு போயிருந்தேன். அதைக் கேட்ட மோகன்லாலுக்கு உடனே பிடித்து விட்டது. ஆரம்பத்தில் வசனம் எழுத மட்டுமே அழைத்தார்கள். படம் வெளியாக இருக்கும் ஒருவாரம் முன்பு தான் அழைத்தார்கள். வசனத்தை நான் ஏனோ தானோ என எழுதமாட்டேன். அதனால் அதிக சம்பளம் கேட்பேன். இருந்தாலும் நான் ஒப்பந்தமானேன்.

‘புலி முருகன்’ படத்தில் உங்கள் பணி வேறு என்ன?

தமிழில் வரும் ‘புலி முருகன்’ படத்தில் வசனம் எழுதத்தான் போனேன். ஆனால் இதைத் தமிழில் பெரிய படமாக வெளியிட தயாரிப்பாளர் முலக்குப் பாடம் பிலிம்ஸ் டோமிச்சனும் நாயகன் மோகன்லாலும் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். மொழிமாற்றுப் பணிகளுக்கு என்னையே பொறுப்பேற்கச் சொன்னார்கள். நானும் ஏற்றுக் கொண்டேன். இதற்கு வசனம் எழுதியது மட்டுமல்ல ‘முருகா முருகா புலி முருகா’ என்கிறடைட்டில் பாடலும் எழுதினேன். டப்பிங்கில் பெரிதும் கவனம் செலுத்தினேன். பொதுவாக ஒரு டப்பிங் படமென்றால் ஐந்தாறு நாட்களில் பேசி முடித்து விடுவார்கள். இதற்கு 45 நாட்கள் எடுத்துக் கொண்டேன்.

மோகன்லால், கிஷோர் எல்லாரையும் சொந்தக் குரலில் பேச வைத்திருக்கிறேன். வழக்கமான குரல்கள் இதில் இருக்காது. நடிகர்கள், தோற்றம், அவர்களின் குரல் இவை எல்லாம் பார்த்து ஒரு குரலுக்கு 10 பேரைப் பார்த்து தேர்வு செய்து பயன் படுத்தியிருக்கிறேன்.

Related Posts
1 of 2

மோகன்லால்சார் ஒருநாள் டப்பிங்கிற்கு தேதி கொடுத்தார். நான் அவரைப் பாடாய்ப் படுத்தி அந்த ஒரு நாளில் இரண்டே இரண்டு காட்சிகள் தான் பேச வைத்தேன். என் ஈடுபாட்டைப் பார்த்து உன் விருப்பப்படி செய் என்று மேலும் 5 நாள் பேசி ஒத்துழைத்தார்.

mohanlal2

மோகன்லாலுடன் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?

இங்கு ரஜினி சார் மாதிரி கேரளாவில் அவர் தான் சூப்பர் ஸ்டார். முதலில் அவரை அணுக எனக்கு பயம், தயக்கம் இருந்தது. ஆனால் அவர் சகஜமாகப்
பழகினார். டப்பிங் ஒப்பந்தமான போதே என்னை அவருக்குப் பிடித்து விட்டது. தமிழில் ‘புலி முருகன்’ சிறப்பாக வர பாலாதான் காரணம் என்று மேடையிலேயே
கூறியிருக்கிறார் .

என்னை எப்போது பார்த்தாலும் ‘புலி பாலா’ என்றே கூப்பிடுவார். இதுவரை ஆர்.பி.பாலாவாக இருந்த நான் இப்போது ‘புலி முருகன் பாலா’ ஆகியிருக்கிறேன். காரணம் மோகன்லால் சார் கொடுத்த ஊக்கம்தான்.

டப்பிங்கில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு சாதாரணமானதல்ல. அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்றாலும் எத்தனை டேக் என்றாலும் பேசி ஒத்துழைத்தார். அது மட்டுமல்ல அவரது கொச்சின் விஷூமஹால் ஸ்டுடியோவில் தான் டப்பிங் நடந்தது அப்போது என்னை அன்பாக ஒரு விருந்தினரைப் போல அவ்வளவு கவனித்து அன்பு காட்டினார். பழகுவதில் அவ்வளவு எளிமையை அவரிடம் கண்டேன்.

வேறு என்ன செய்திருக்கிறீர்கள்?

முதலில் இது ஒரு டப்பிங் படம் என்கிற உணர்வு வரக் கூடாது என்று முடிவு செய்து கொண்டோம். அதற்காகவே மிகவும் மெனக்கெட்டோம். ஆறு மாத காலம்
பாடுபட்டோம். ‘புலி முருகன்’ கதை தேனிப் பக்கம் நடப்பது போல அமைத்தோம். எல்லாரையும் தேனி வட்டார மொழி பேச வைத்தோம். மண் மணம், கலாச்சார மணம் வந்து விட்டது. இதற்காக அதிக சிரமப்பட்டோம். அதற்குரிய பலன் கிடைத்திருக்கிறது. அசல் தமிழ்ப் படமாக மாறிவிட்டது. படம் பார்த்த சில நிமிடங்களிலேயே அது நம்ம ஊர்ப்படமாக மாறிவிடும். எளிதில் உள்ளே நுழைந்து விடுவோம்.

இது ஒரு மொழிமாற்றுப் படம் என்கிற உணர்வே போய்விடும். நமது மண் மணம் நேட்டிவிட்டி மாறாமல் படத்தில் கொண்டு வந்திருப்பதே எங்கள் பெரிய வேலை.
அது மட்டுமல்ல படத்தின் விளம்பரம், போஸ்டர், டிசைன், ட்ரெய்லர் வரை நான் செய்ததுதான். ட்ரெய்லர் டிரெண்டிங்கில் வந்து சாதனை படைத்தது.

இதன் வெளியீட்டுத் திரைகளின் எண்ணிக்கை ஒரு ரெக்கார்டு பிரேக். ஆமாம் இதுவரை 300 திரையரங்குகள் என்று இருந்தது. இப்போது மேலும் 60
திரையரங்குகள் அதிகரித்துள்ளன. நிச்சயம் இதன் ஸ்டண்ட் பற்றிப் பேசப்படும். இப்படத்துக்காகவே பீட்டர் ஹெயின் மாஸ்டர் நாட்டிலேயே முதன்முதலில் தேசிய விருது பெற்றுள்ளார்.

இந்தப் படம் தமிழில் நன்றாக வர முலக்குப் பாடம் நிறுவனத் தயாரிப்பாளர் டோமிச்சன், நாயகன் மோகன்லால் இருவரும் அத்தனை ஒத்துழைப்பு
கொடுத்தார்கள். தமிழில் செந்தூர் சினிமாஸ் வெளியிடுகிறது.

படம் வெளிவரும் முன்பே எனக்கு நான்கு புதிய படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்புகள் வந்துள்ளன. மோகன்லால் தன் ‘ஒப்பம் ‘என்கிற படத்தை தெலுங்கில் டப்பிங் செய்ய வசனம் எழுத வாய்ப்பு கொடுத்தார். அடுத்தடுத்த படங்களுக்கும் என்னையே வசனம் எழுதும்படி கூறியுள்ளார்.

ஒரு தயாரிப்பாளராக நான் இப்போது ‘போட்டின்னு வந்துட்டா சிங்கம்’ என்கிற படத்தை ‘மாநகரம்’ நாயகர் சந்தீப், ரெஜினாவை வைத்து தயாரித்து வருகிறேன். புலி முருகன் என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் அதன் வெற்றி எழுதப்பட்ட ஒன்று என்பதை இன்னும் சில நாட்களில் அனைவரும் உணர்வார்கள்.