மிஸ்டர் சந்திரமெளலி – விமர்சனம்
RATING – 2.5/5
நடித்தவர்கள் – கார்த்திக், கெளதம் கார்த்தி, ரெஜினி கசண்ட்ரா, சதீஷ், மைம் கோபி, மகேந்திரன் மற்றும் பலர்
ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன்
இசை – சாம் சி.எஸ்
இயக்கம் – திரு
வகை – நாடகம், காமெடி, ரொமான்ஸ்
சென்சார் பரிந்துரை – ‘U/A’
கால அளவு – 2 மணி நேரம் 21 நிமிடங்கள்
‘மெளன ராகம்’ படத்தில் இடம்பெற்ற ‘மிஸ்டர் சந்திரமெளலி’ என்று கார்த்திக் பேசும் வசனம் மிகவும் பிரபலம்.
பல ஆண்டுக்குப் பிறகு அந்த பெயரில் கார்த்திக்கும், அவருடைய மகன் கெளதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்க வெளியாகியிருக்கிறது இந்த ”மிஸ்டர் சந்திரமெளலி”.
இரண்டு கால் டாக்ஸி நிறுவனங்களுக்கிடையே நடக்கும் தொழில் போட்டியில், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் கால் டாக்சியில் பயணம் செய்யும் இளம் பெண்கள் மட்டும் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள், கற்பழிக்கப்படுகிறார்கள்.
அதன் பின்னணியில் இருப்பவர்களைப் பற்றிய ரகசியத்தை தெரிந்து கொள்ளும் வரலட்சுமி கூலிப்படையினரால் கொலை செய்யப்படுகிறார்கள். அடுத்து கெளதம் கார்த்திக்கின் அப்பா கார்த்திக்கும் கார் விபத்து ஒன்றில் இறந்து போகிறார்.
ஆனால் நடந்தது விபத்து அல்ல, அது திட்டமிட்ட கொலை என்று தெரிய வர, அதிர்ச்சியடையும் கெளதம் கார்த்திக் தனது அன்பான அப்பா கார்த்திக்கின் மரணத்துக்கு காரணமானவர்களை தேடி அவர்களை பழி வாங்குவதே மீதிக்கதை.
கெளதம் கார்த்திக் என்றாலே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று ஜாலியாக இருக்கும். ஆனால் இதில் பாக்சராக வருகிறார். அதுவரை காதலி, அப்பா என வாழ்க்கையை கொண்டு செல்பவர் இடைவேளைக்குப் பிறகு சீரியஸான கேரக்டரில் கலக்கியிருக்கிறார். அதிலும் அவருக்கு வரும் வித்தியாசமான கண் குறைபாட்டு நோய் அவதிக்கு மத்தியிலும் தனது புத்திசாலித்தனத்தால் வில்லன்களை புரட்டியெடுப்பது ஆசம்!
நாயகியாக வரும் ரெஜினா ”ஏதேதோ ஆனேனே…” பாடலில் கவர்ச்சி விருந்து படைத்திருக்கிறார். மற்றபடி காட்சிகளில் ஹீரோக்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் இருக்குமோ அதே அளவுக்குத்தான் அவருக்கும்!
படத்திலும் கெளதம் கார்த்திக்கின் அப்பாவாகவே வருகிறார் கார்த்திக். துறுதுறுவென்ற, ஜாலியான அவருடைய கேரக்டர் இக்கால இளைஞர்களுக்கு வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதற்கான பாடம்!
ப்ளாஷ்பேக் காட்சிகளில் வந்தாலும் ஹீரோயின் ரெஜினாவை விட அழுத்தமான கேரக்டரில் வருகிறார் இன்னொரு நாயகி வரலட்சுமி. கார்த்திக்குக்கும், அவருக்குமான நட்பு எந்த மாதிரியானது? என்பதை குழப்பாமல் சொல்லியிருக்கலாம்.
சாம் சி எஸ் இசையில் ஏதேதோ ஆனேனே பாடல் இந்த ஆண்டின் மிகச்சிறந்த மெலோடிப்பாடல்களில் ஒன்றாக இருக்கும். காட்சிகளுக்கேற்ற மிரட்டலான பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார்.
வில்லனாக அறிமுகமாகும் இயக்குனர் மகேந்திரன், அவரது போட்டியாளராக வரும் சந்தோஷ் பிரதீப் ஆகியோரும் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ஹீரோ கெளதம் கார்த்திக்கு வரும் நோய் விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை ஞாபகப்படுத்துகிறது.
கார்ப்பரேட் கம்பெனிகளின் தொழில் போட்டி, குத்துச்சண்டை வீரரின் போராட்டம், அப்பா – மகன் செண்டிமெண்ட், சமூக குற்றம் என பல ஜானர்களில் பார்க்க வேண்டிய கதைகளை ஒரே படத்தில் கொண்டு வர நினைத்த இயக்குனரின் சின்சியாரிட்டியைப் பாராட்டலாம். அதே சமயம் அதில் எதை ரசிகர்கள் பின் தொடரலாம் என்று சொல்வதில் ஏற்பட்ட குழப்பத்தை தவிர்த்திருக்கலாம்.
யார் வில்லன்? என்று யூகிக்க விடாமல் சஸ்பென்ஸை படத்தின் கிளைமாக்ஸ் வரைக்கும் கொண்டு சென்றதில் சாமானிய ரசிகர்களை ஜெயித்திருக்கிறார் இயக்குநர் திரு!